×

பல்லாவரம் அருகே துணிகரம் பைனான்ஸ் அதிபர் வீட்டை உடைத்து 115 சவரன், ரூ.30 லட்சம் கொள்ளை: ஆசாமிகளுக்கு வலை

பல்லாவரம்: பல்லாவரம் அருகே பைனான்ஸ் அதிபர் வீட்டின் பூட்டை உடைத்து 115 சவரன் தங்க நகைகள் மற்றும் ₹30 லட்சத்தை கொள்ளையடித்து சென்ற ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்னர். பல்லாவரம் அடுத்த பம்மல், தொல்காப்பியர் தெருவை சேர்ந்தவர் இமானுவேல் ஜெயசீலன் (41). தமிழ்நாடு வணிகர் சங்கத்தின் மாநில துணை தலைவர். இவர், பம்மல் பிரதான சாலையில் பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். மாதாந்திர  ஏல சீட்டும் நடத்தி வருகிறார். பைனான்ஸ் நிறுவனம் நடத்துவதால் இவர் தன்னிடம் எப்போதும் பணத்தை ரொக்கமாக வைத்திருப்பார் என்று கூறப்படுகிறது. ஞாயிற்றுக் கிழமைதோறும் இமானுவேல் ஜெயசீலன் தனது குடும்பத்தினருடன் பம்மல் பகுதியில் உள்ள சர்ச்சுக்கு செல்வது வழக்கம். அதன்படி, நேற்று காலை 9 மணியளவில் இவர், தனது வீட்டை பூட்டிவிட்டு, குடும்பத்தினருடன் சர்ச்சுக்கு சென்றார். அங்கிருந்து, 11 மணிக்கு வீட்டிற்கு திரும்பியபோது, அவரது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, திறந்து கிடந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த இமானுவேல் ஜெயசீலன் மற்றும் குடும்பத்தினர் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது, பீரோ உடைக்கப்பட்டு, ரகசிய அறையில் வைத்திருந்த 115 சவரன் தங்க நகைகள் மற்றும் ₹30 லட்சம் ரொக்கம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.

தகவலறிந்து சங்கர் நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது. தொடர்ந்து, அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை பெற்று விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், ஜெயசீலன் சர்ச்சுக்கு செல்வதை நன்கு அறிந்த நபர்கள் தான் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு இருக்க முடியும், என தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தப்பியோடிய கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர். பைனான்ஸ் அதிபர் வீட்டின் பூட்டை உடைத்து 115 சவரன் தங்க நகைகள், ₹30 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.



Tags : 115 shaving, Rs.
× RELATED திருவேங்கடம் அருகே நேற்றிரவு...