×

இந்திய ராணுவ முகாமில் போர் வெற்றிச்சின்னமாக திகழும் பாக். ராணுவ ஜீப்: 1971ம் ஆண்டு போரில் கைப்பற்றப்பட்டது

லே: கடந்த 1971ம் ஆண்டு பாகிஸ்தானுடன் நடந்த போரில், அந்நாட்டு ராணுவத்திடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஜீப், இந்திய ராணுவ முகாமில் இன்னும் போர் வெற்றிச் சின்னமாக இயங்கி கொண்டிருக்கிறது.  காஷ்மீரின் லே பகுதியில் இருந்து 40 கி.மீ தொலைவில் ராணுவத்தின் ‘3 கிரனெடியர் படைப் பிரிவு’ முகாம் உள்ளது. இங்கு, வில்லிஸ் ஜீப் ஒன்று இன்னும் பளபளப்புடன் இயங்கி கொண்டிருக்கிறது. இந்த ஜீப் கடந்த 1971ம் ஆண்டு பாகிஸ்தானுடன் நடந்த போரில், அந்நாட்டு ராணுவத்திடம் இருந்து கைப்பற்றப்பட்டது. இது இந்த ராணுவ முகாமில், இன்னும் போர் வெற்றிச் சின்னமாக உள்ளது. பாகிஸ்தானின் ஜர்பல் பகுதியில் இருந்து, ஷாகர்கர் எல்லை மீது தாக்குதல் நடத்த பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்த ஜீப்பில் வந்தனர்.

அவர்களை விரட்டியடித்த இந்திய ராணுவத்தின் கிரனெடியர் படைப் பிரிவினர், அந்த ஜீப்பையும் கைப்பற்றி தங்கள் முகாமுக்கு கொண்டு வந்து விட்டனர். அது அமெரிக்க வில்லிஸ் நிறுவனம் தயாரித்த ஜீப். அதற்கு ‘ஜர்பல் குயின்’ என பெயர் வைக்கப்பட்டது. 50 ஆண்டுகள் பழமையான அந்த ஜீப், இங்குள்ள முகாமில் நல்ல நிலையில் இயங்கி கொண்டிருக்கிறது. கிரனெடியர் படைப்பிரிவு முகாமுக்கு வரும் விஐபி.க்களிடம் இந்த ஜீப் போர் வெற்றிச் சின்னமாக காட்டப்படுகிறது. மேலும், மூத்த அதிகாரிகளுக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கும்போதும் இந்த ஜீப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ராணுவ முகாம் இந்தியாவின் எந்த பகுதிக்கு மாற்றுதலாகி சென்றாலும், அங்கும் இந்த ஜீப் கொண்டு செல்லப்படுகிறது. ஜெய்ப்பூர், குப்வாரா, சிம்லா, பூஞ்ச், மீரட், பெரோசாபூர் என பல இடங்களுக்கு இந்த ஜீப் சென்று வந்துள்ளது. பஞ்சாப் பெரோசாபூரில் இந்த படைப்பிரிவு இருந்தபோது, இந்த ஜீப்புக்கு பதிவு எண்ணும் பெறப்பட்டது.


Tags : Pak ,War Victory ,Indian Army Camp ,war , Pak , War Victory ,Indian Army Camp. Army Jeep,Captured,1971 war
× RELATED இந்திய -பாக் எல்லையில் சுரங்கப்பாதை கண்டுபிடிப்பு: இந்திய ராணுவம் ஆய்வு