×

காஷ்மீர், இமாச்சலில் திடீர் நிலநடுக்கம்

ஸ்ரீநகர்: காஷ்மீர், இமாச்சலில் நேற்று காலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் மக்கள் கடும் அச்சம் அடைந்தனர்.வடமாநிலங்களில் கடந்த சில மாதங்களாக அவ்வப்போது லேசான அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. இந்த வகையில் நேற்று காஷ்மீரின் தோடா மற்றும் கிஷ்த்வார் மாவட்டங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 8.04க்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 4.9 ஆக பதிவானது. சில நிமிடங்கள் நிலநடுக்கம் நீடித்தது. இதனால் மக்கள் அச்சம் அடைந்து, வீடுகளைவிட்டு வெளியே வந்தனர்.

இதேபோல், இமாச்சலின் சம்பா மாவட்டத்திலும் நேற்று அதிகாலை 5.30 மணி அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 3.4 ஆக பதிவானது. நிலநடுக்கத்தின் தாக்கம் அண்டை மாவட்டங்களிலும் உணரப்பட்டது என்று புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சம்பா மாவட்டம், நிலநடுக்கத்தினால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய அபாய பகுதியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இரு மாநிலங்களிலும் நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விவரங்கள் எதுவும் தெரியவில்லை.

Tags : Earthquake ,Kashmir ,Himachal , Earthquake , Kashmir, Himachal
× RELATED உத்தரகாண்டில் லேசான நிலநடுக்கம்