×

தாலிபான்களுடன் ரகசிய மீட்டிங் முதலில் அழைப்பு, இறுதியில் ரத்து: டிரம்ப் திடீர் நடவடிக்கை

வாஷிங்டன்: ஆப்கானிஸ்தானில் உள்ள தாலிபான் தலைவர்களுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் நடத்த இருந்த பேச்சுவார்த்தை திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.ஆப்கானிஸ்தானில் தாலிபன், ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா நீண்டக்காலமாக சண்டையிட்டு வருகிறது. ஆனால், அது அடர்ந்த மலைப்பிரதேசங்கள் என்பதால், முழுமையாக தீவிரவாதிகளை ஒழித்துக்கட்ட முடியவில்லை. இதனால் சண்டையும் முடிவடையவில்லை. ஆப்கானிஸ்தானில் தற்போது சுமார் 11 ஆயிரம் அமெரிக்க வீரர்கள் உள்ளனர். தொடர்ந்து வேற்று நாட்டில் தங்கியிருந்து சண்டையிட்டுக் கொண்டிருப்பதால், அமெரிக்க வீரர்களிடையே சலிப்பு ஏற்பட்டுள்ளதுடன், உள்நாட்டிலும் அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இதைத்தொடர்ந்து ஏற்கனவே தேர்தலின்போது தான் உறுதிமொழி அளித்தபடி, ஆப்கனில் இருந்து அமெரிக்க படைகளை திரும்ப பெறும் வகையில், அங்கு தீவிரவாதிகளுக்கு எதிரான சண்டையை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் முயன்று வருகிறார்.

இதன்படி, தாலிபான் தீவிரவாதிகளுடன் சமாதான பேச்சு நடத்தி, அவர்களை சரண் அடைய செய்வதுடன், பாதுகாப்பு பொறுப்பை ஆப்கன் அரசிடமே ஒப்படைப்பது தொடர்பாகவும் திட்டமிட்டு வருகிறார். இதற்காக தூதர் ஒருவரையும் அவர் நியமித்தார். அவர் தீவிரவாத அமைப்பு தலைவர்களுடன், கடந்த ஓராண்டாக பேச்சு நடத்தி வருகிறார். அதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்ட நிலையில், தாலிபான் தலைவர்களுடன் தானே நேரடியாக ஆலோசனை செய்ய டிரம்ப் முடிவு செய்தார். அமெரிக்காவின் மேரிலேண்ட் பகுதியில் உள்ள கேம்ப் டேவிட் பகுதியில் இதற்கான சந்திப்பு கூட்டம் நடக்க ஏற்பாடு செய்யப்பட்டது. தாலிபான் தலைவர்களுடனும் ஆப்கன் அதிபருடனும் தனித்தனியாக இந்த கூட்டத்தில் சந்தித்து பேச டிரம்ப் முடிவு செய்திருந்தார். நேற்று இரவு இந்த கூட்டம் நடக்க இருந்த நிலையில், திடீரென நேற்று மதியம் அதிபர் டிரம்ப் இந்த கூட்டத்தை ரத்து செய்தார். இதை டிவிட்டரில் அவர் அறிவித்தார்.

‘ஆப்கன் தலைநகர் காபூலில், கடந்த சில நாட்களுக்கு தாலிபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஒரு அமெரிக்க வீரர் உட்பட 11 பேர் உயிரிழந்தனர். பேச்சுவார்த்தை நடக்க உள்ள நிலையில் தாலிபன்களின் இந்த செயலை ஏற்றுக் கொள்ள முடியாது. இதனால் கூட்டத்தை ரத்து செய்துள்ளேன்’ என்று டிவிட்டர் பதிவில் டிரம்ப் தெரிவித்துள்ளார்.இதனால் சரியான திசையில் சென்றுக் கொண்டிருந்த அமைதிப்பேச்சு நடவடிக்கையில் திடீர் தடை ஏற்பட்டுள்ளதால், ஆப்கனில் மீண்டும் அமெரிக்காவின் சண்டை தீவிரமாகுமா என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.

Tags : meeting ,Taliban ,outbreak , Secret meeting, Taliban calls first, eventually canceled,Trump outbreak
× RELATED வாக்காளர்களுக்கு பணம் தருவதை...