×

சந்திரயான்-2 திட்டத்துக்கு பாராட்டு சூரியன் ஆய்வு திட்டத்தில் இணைந்து செயல்பட தயார்: இஸ்ரோவுக்கு நாசா அழைப்பு

வாஷிங்டன்: ‘‘சந்திரயான்-2 திட்டத்தை பாராட்டியுள்ள அமெரிக்காவின் நாசா அமைப்பு, சூரியன் பற்றிய ஆய்வில் இஸ்ரோவுடன் இணைந்து செயல்பட தயார் எனவும் அறிவித்துள்ளது. நிலவை பற்றி ஆராய சந்திரயான்-2 விண்கலத்தை இஸ்ரோ அனுப்பியது. கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை நிலவில் தரையிறங்கும்போது கடைசி நேரத்தில் விக்ரம் லேடரின் தகவல் தொடர்பு துண்டானது. தற்போது, சந்திரயான்-2 ஆர்பிட்டர் மூலம் விக்ரம் விழுந்த இடத்தை இஸ்ரோ கண்டுபிடித்துள்ளது. சந்திரயான்-2 திட்டம் முழு வெற்றி பெறவில்லை என்றாலும், இஸ்ரோவின் முயற்சியை அமெரிக்க விண்வெளி அமைப்பான நாசா பாராட்டியுள்ளது. அது டிவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ‘விண்வெளி கடினமானது. நிலவின் தென் துருவ பகுதியில் சந்திரயான்-2 விண்கலத்தை தரையிறக்கும் இஸ்ரோவின் முயற்சியை பாராட்டுகிறோம். உங்கள் பயணம் எங்களை ஊக்குவிக்கிறது. எதிர்காலத்தில் சூரியனை பற்றிய ஆய்வில் நாம் இணைந்து செயல்படுவதை நாங்கள் எதிர்பார்த்து இருக்கிறோம்,’ என குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகத்தின் மூத்த அதிகாரி ஆலிஸ் ஜி வெல்ஸ் டிவிட்டரில் விடுத்துள்ள செய்தியில், ‘சந்திரயான்-2 திட்டம் மூலம் இஸ்ரோ மேற்கொண்ட வியக்கத்தகு முயற்சியை பாராட்டுகிறோம். இத்திட்டம் இந்தியாவுக்கு முன்னேற்றமான திட்டம். விண்வெளி திட்டங்களை நிறைவேற்றுவதில் இந்தியா சாதனை படைக்கும் என்பதில் எங்களுக்கு சந்தேகம் இல்லை,’ என கூறியுள்ளார். நாசா விண்வெளி வீரர் ஜெர்ரி லினன்கர் அளித்த பேட்டியில், ‘‘விக்ரம் லேண்டரை நிலவின் மேற்பரப்பில் தரையிறக்கும் கடின முயற்சியில், கற்றுக் கொண்ட பாடம், அடுத்த திட்டங்களில் உதவியாக இருக்கும். நாம் மனம் தளரக் கூடாது. மிகவும் வித்தியாசமானதை செய்ய இந்தியா முயற்சிக்கிறது. எல்லாம் திட்டமிட்டபடி நடந்தபோது, லேண்டர் கடைசி நேரத்தில் மாயமாகிவிட்டது. ஆனால், மிகச்சிறந்த இந்த முயற்சி, இந்தியா விஞ்ஞானிகளின் பொறியியல் திறமை, விண்வெளியில் சூப்பர் பவர் ஆகும் லட்சியம் ஆகியவற்றை வெளிப்படுத்துகிறது’’ என கூறியுள்ளார்.

அடுத்து என்ன நடக்கும்?
விக்ரம் லேண்டர் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், அதனுடன் தொடர்புக் கொள்ளும் முயற்சியை இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக செய்து வருகின்றனர். இதன்படி, பெங்களூரில் உள்ள இஸ்ரோ தலைமையகத்தில் இருந்து விக்ரம் லேண்டருக்கு சமிக்கைகள் அனுப்பப்படும். அதற்கு பதில் கிடைக்கவில்லை என்றால், விக்ரம் லேண்டரில் இருக்கும் அவசர கால மாற்றுக் கருவிகளை இயக்க முயற்சி மேற்கொள்ளப்படும். அதுவும் பலனளிக்காவிட்டால், நிலவை சுற்றி வரும் ஆர்பிட்டர் மூலம் விக்ரம் லேண்டருக்கு சமிக்கைகள் அனுப்பப்பட்டு அதற்கு பதில் கிடைக்கிறதா என்று சோதிக்கப்படும். இதுவும் கைக்கொடுக்காவிட்டால், விக்ரம் லேண்டரின் உள்ளே இருக்கும் பிரக்யான் ரோவருடன் தொடர்பு ஏற்படுத்த முயற்சிக்கப்படும். விக்ரம் லேண்டர் சரியாக தரையிறங்கி இருந்தால், பெரிய அளவில் பிரச்னை இருக்காது. ஆனால், அது தலைகீழாக விழுந்திருக்கும்பட்சத்தில் அதை இயக்க முடியாது. ஆனால், நிலவில் விக்ரம் லேண்டர் மிக மெதுவாகத்தான் தரையிறக்கப்பட்டதால், அது தலைகீழாக விழுந்து சேதமடைந்திருக்க வாய்ப்பிருக்காது என்று விஞ்ஞானிகள் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Tags : NASA ,ISRO , NASA calls , ISRO , collaborate, Chandrayaan-2 mission
× RELATED நாளை விண்ணில் பாய்வதாக இருந்த...