×

தெலங்கானா கவர்னராக தமிழிசை பதவியேற்பு: ஐகோர்ட் தலைமை நீதிபதி பதவி பிரமாணம் செய்து வைத்தார்

திருமலை: தெலங்கானா மாநில கவர்னராக தமிழிசை சவுந்தரராஜன் நேற்று பதவி ஏற்றார். அவருக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜேந்திர சவுகான் பதவி பிரமாணம் செய்து வைத்தார். தமிழக பாஜவின் தலைவராக தமிழிசை சவுந்தரராஜன் கடந்த 2014ம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதி முதல் இருந்து வந்தார். அவரது பதவிக்காலம் வருகிற டிசம்பர் மாதத்துடன் முடிவடைய இருந்தது. இந்தநிலையில் தமிழிசை சவுந்தரராஜனை கடந்த 1ம் தேதி தெலங்கானா மாநில ஆளுநராக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நியமித்தார். கவர்னராக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து, கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தமிழிசை விடுவிக்கப்பட்டார். தமிழிசை கவர்னராக நியமிக்கப்பட்டதற்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விசிக தலைவர் திருமாவளவன் உட்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிலையில்,  டெல்லியில் உள்ள தெலங்கானா ராஜ்பவன் அதிகாரி வேதாந்திரி கடந்த 5ம் தேதி சென்னை லோகையா நாயுடு காலனியில் உள்ள தமிழிசையின் வீட்டுக்கு வந்து, கவர்னர் பதவி நியமன ஆணையை வழங்கினார். இதை தொடர்ந்து, தெலங்கானா கவர்னராக பதவி ஏற்கும் விழா நேற்று ஐதராபாத்தில் உள்ள ராஜ்பவனில் நடந்தது.முன்னதாக சிறப்பு விமானத்தில் ஐதராபாத் பேகம்பேட்டை விமான நிலையம்  வந்த தமிழிசை சவுந்தரராஜனை தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், சட்டபேரவை சபாநாயகர் போச்சாரம் சீனிவாஸ், மாநில அமைச்சர்கள், முதன்மை செயலாளர் எஸ்.கே.ஜோஷி, டிஜிபி மகேந்தர் ரெட்டி உள்ளிட்ட அதிகாரிகள் சால்வை அணிவித்து மலர் கொத்து கொடுத்து வரவேற்றனர். தொடர்ந்து விமான நிலைய வளாகத்தில் திறந்தவெளி ஜீப்பில் சென்று போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார். பின்னர் காலை  11 மணிக்கு ஐதராபாத்தில் உள்ள ராஜ்பவனில் பதவி ஏற்பு விழா நடந்தது. அவருக்கு தெலங்கானா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜேந்திர சவுகான், பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

விழாவில், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்,   இமாச்சல மாநில ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயா, மத்திய உள்துறை இணையமைச்சர் கிஷண்ரெட்டி, தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி, புதிய நீதிக்கட்சி நிறுவனத்தலைவர் ஏ.சி.சண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து நடந்த விருந்து நிகழ்ச்சியில் அனைவரும் கலந்து ண்டனர். கடந்த 2014 ஜூன் 2ம் தேதி தெலங்கானா மாநிலம் ஏற்பட்ட பிறகு ஒருங்கிணைந்த ஆந்திராவின் கவர்னராக இருந்த நரசிம்மன் ஆந்திரா, தெலங்கானா இரு மாநிலத்திற்கும் தொடர்ந்து கவர்னராக இருந்து வந்தார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஆந்திர மாநிலத்திற்கு பாஜவை சேர்ந்த மூத்த தலைவரான ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பிஸ்வ பூஷன் ஹரிச்சந்திரா நியமிக்கப்பட்டார்.

தொடர்ந்து தெலங்கானா மாநில ஆளுநராக நரசிம்மன் இருந்து வந்த நிலையில் கடந்த வாரம்  தமிழக பாஜ தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் தெலங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து நேற்று தெலுங்கானா மாநிலத்தின் 2வது மற்றும் முதல் பெண் கவர்னராக தமிழிசை சவுந்தரராஜன் பதவி ஏற்றுக்கொண்டார். இந்த பதவியேற்பு விழாவில் தமிழிசை சவுந்தரராஜன் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் தமிழக பாஜவை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.இரவு 7 மணிக்கு பிரகதி பவனில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இன்று சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குகிறது.

புதிய அமைச்சர்களுக்கு பதவிப்பிரமாணம்
தமிழிசை ஆளுநராக பதவியேற்ற நிலையில், நேற்று மாலை 4 மணிக்கு தெலங்கானா மாநில அமைச்சரவை விரிவாக்கம் நடைபெற்றது. இதில்,  தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவின் மகன் தாரகராமராவ் மற்றும் அரிஷ்ராவ்,  சபிதா இந்திராரெட்டி, கமலாகர், சந்திவதிராத்தோடு, அஜய்குமார் ஆகியோர்  அமைச்சர்களாக பதவி ஏற்றனர். அவர்களுக்கு தான் பதவி ஏற்ற முதல் நாளிளேயே கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதையடுத்து  கவர்னர் மாளிகையில் முதல்வர் சந்திரசேகரராவ் அமைச்சர்களை கவர்னருக்கு  அறிமுகம் செய்து வைத்தார். இதைத்தொடர்ந்து அமைச்சர்களுடன் குழு புகைப்படம்  எடுத்துக்கொண்டனர்.


Tags : Tejpal ,governor ,Telangana , IGP,sworn, Telangana,governor
× RELATED கொத்துக் கொத்தாக வாக்குரிமை மறுப்பு : தமிழிசை சௌந்தரராஜன் வேதனை