யுஎஸ் ஓபன் டென்னிஸ் பியான்கா சாம்பியன்: பைனலில் செரீனாவை வீழ்த்தி சாதனை

நியூயார்க்: யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில், 19 வயது இளம் வீராங்கனை பியான்கா ஆண்ட்ரீஸ்கு (கனடா) முதல் முறையாக கிராண்ட் ஸ்லாம் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தார்.பரபரப்பான இறுதிப் போட்டியில் அமெரிக்க நட்சத்திரம் செரீனா வில்லியம்சுடன் (37 வயது) மோதிய பியான்கா 6-3 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றி முன்னிலை பெற்றார். இரண்டாவது செட்டில் செரீனா கடும் நெருக்கடி கொடுத்த நிலையில், பதற்றமின்றி இயல்பான ஆட்டதை வெளிப்படுத்திய பியான்கா 6-3, 7-5 என்ற நேர் செட்களில் வெற்றியை வசப்படுத்தி யுஎஸ் ஓபன் கோப்பையை முத்தமிட்டார்.இப்போட்டி 1 மணி, 40 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. இந்த வெற்றியின் மூலமாக, கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் கனடா வீராங்கனை என்ற சாதனை பியான்கா வசமானது. 24வது கிராண்ட் ஸ்லாம் பட்டம் வெல்லும் கனவுடன் களமிறங்கிய செரீனா கடுமையாகப் போராடினாலும், இளம் வீராங்கனையின் அதிரடி ஆட்டத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் 2வது இடத்துடன் திருப்தி அடைந்தார்.

தொடர்ச்சியாக 4 பெரிய தொடர்களின் பைனல் வரை முன்னேறிய செரீனா, கோப்பையை கைப்பற்ற முடியாததால் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளார். 2006ம் ஆண்டு யுஎஸ் ஓபனில் ரஷ்யாவின் மரியா ஷரபோவா ‘டீன் ஏஜ்’ வீராங்கனையாக பட்டம் வென்றிருந்தார். அதன் பிறகு கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற முதல் பதின்ம வயது வீராங்கனை என்ற பெருமையும் பியான்காவுக்கு கிடைத்துள்ளது. புதிய சாம்பியனுக்கு டென்னிஸ் பிரபலங்கள் பலரும் ட்விட்டரில் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். மகளிர் ஒற்றையர் பிரிவு தரவரிசையிலும் பியான்கா 5வது இடத்துக்கு முன்னேறி உள்ளார். மர்ரே - மேட்டக் அசத்தல்: கலப்பு இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டியில் அமெரிக்காவின் பெதானி மேட்டக் சேண்ட்ஸ் - ஜேமி மர்ரே (இங்கிலாந்து) இணை 6-2, 6-3 என்ற நேர் செட்களில் சீன தைபேவின் ஹவோ சிங் சான் - மைக்கேல் வீனஸ் (நியூசிலாந்து) ஜோடியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.

Related Stories:

>