×

‘அல்வா’ தயாரிக்க பூசணி விற்பனை ஜோர்: சரஸ்வதி, ஆயுத பூஜைக்கு திருஷ்டி கழிக்க கிடைப்பதில் சிக்கல்?

சென்னை: ‘’அல்வா’’ தயாரிப்புக்கு, வெண் பூசணிக்காய்களை அதிகளவில் ஆந்திர, கேரள வியாபாரிகள் வாங்கிச் செல்வதால், சரஸ்வதி, ஆயுத பூஜைக்கு திருஷ்டி கழிக்க, பூசணிக்காய் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆந்திர மற்றும் கேரள மாநிலங்களில், வெண் பூசணிக்காய்களை பயன்படுத்தி, ‘’அல்வா’’ தயாரிப்பது வழக்கம். தமிழகத்திலும் பல ஓட்டல்கள் மற்றும் திருமணங்களில் பூசணி அல்வா செய்யப்பட்டு உணவுடன் வைக்கப்படுகிறது. கடந்த மாதம், கேரளா மற்றும் ஆந்திராவில் மழை பெய்ததால், குறைந்தளவில் பயிரிடப்பட்டிருந்த பூசணி செடிகள் பாதிக்கப்பட்டன.

இதனால், ஆந்திர, கேரள வியாபாரிகள் தமிழக மார்க்கெட்டுகளில் வியாபாரிகள் மூலம், வெண் பூசணிக்காய்களை அதிகளவில் வாங்கிச் செல்கின்றனர்.தமிழகத்தில் வரும் அக்டோபர் 7 மற்றும் 8ம் தேதி கொண்டாடப்பட உள்ள சரஸ்வதி, ஆயுத பூஜை விற்பனைக்கு, விவசாயிகள், பூசணிக்காய்களின் அறுவடை, விற்பனையை நிறுத்தி வைத்திருந்தனர். அதனால், மார்க்கெட்டுகளில் வெண் பூசணிக்காய் கிடைக்காமல் அருகில் உள்ள மாநில வியாபாரிகள் அவதிப்பட்டனர். இதனால், கிலோ ரூ15க்கு விற்கப்பட்ட பூசணிக்காய் கிலோ ரூ40 வரை உயர்ந்தது. இதையடுத்து, சரஸ்வதி, ஆயுதபூஜை விற்பனைக்காக, வெண் பூசணிக்காய்களை பயிரிட்டிருந்த விவசாயிகள், தற்போது, அவற்றை அறுவடை செய்து, ‘’அல்வா’’ வுக்காக ஆந்திர, கேரள வியாபாரிகளுக்கு அனுப்புகின்றனர்.

இதுகுறித்து, பூசணி விவசாயி ஒருவர் கூறுகையில், ‘’தமிழகத்தில், சரஸ்வதி, ஆயுத பூஜை கொண்டாட்டத்தின்போது விற்க, அதிகளவில் வெண் பூசணிக்காய் பயிரிடப்படும். நடப்பாண்டு, ஆந்திர, கேரள வியாபாரிகள், கிராமங்களுக்கு வந்து நேரடியாக, அதிக விலை கொடுத்து கொள்முதல் செய்கின்றனர். மேலும், தமிழகத்திலும் திருமண சீஸன் என்பதால், ‘’அல்வா’’ செய்ய வெண் பூசணிக்காயை அதிகளவில் வாங்குகின்றனர். இதனால், ஆயுத பூஜையின் போது, திருஷ்டி கழிக்க வெண் பூசணிக்காய்கள், எதிர்பார்த்த அளவு கிடைப்பதில் சிக்கல் நிலவும். அதுமட்டுமின்றி விலை உயரும்’’ என்றார்.

Tags : Alva ,Sarasvati , Pumpkin, Sales Jour
× RELATED வல்லவன் வகுத்ததடா விமர்சனம்