×

கருங்கல் அருகே பரபரப்பு: இறந்த மாட்டை வெட்டி இறைச்சி விற்பனை... அதிகாரியுடன் பொதுமக்கள் வாக்குவாதம்

கருங்கல்: கருங்கல் அருகே திக்கணங்கோடு பகுதியில் சந்திப்பையொட்டி தனியார் மருத்துவமனை ஒன்று உள்ளது. இதன் அருகில் உள்ள தோட்டத்தில் நேற்று இரவு நோய்வாய்ப்பட்டு இறந்த ஒரு மாட்டை கொண்டு வந்து போட்டு உள்ளனர். இதைக்கண்ட அந்த பகுதியினர் சுகாதார அதிகாரிக்கு தகவல் தெரிவித்தனர். இரவு 11 மணியாகி விட்டதால் தன்னால் இப்போது எதுவும் செய்ய முடியாது என்று அதிகாரி கைவிரித்து விட்டார். இதையடுத்து இன்று அதிகாலை அந்த பகுதியில் இறைச்சி விற்பவர்கள் இறந்த மாட்டை வெட்டி விற்பனைக்கு வைத்து உள்ளனர். அப்போது திடீரென காலை 7 மணிக்கு சுகாதார அதிகாரி சம்பவ இடத்துக்கு வந்துள்ளார். அப்போது இறந்த மாடு இறைச்சி துண்டுகளாக தொங்கி கொண்டிருந்தது. இதையடுத்து அந்த பகுதியில் திரண்ட பொது மக்கள் அதிகாரியை சூழ்ந்து கொண்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்கள் கூறும்போது, ‘இப்போது வந்து என்ன செய்வீர்கள். இறந்த மாடு இறைச்சியாக தொங்குகிறது.

இதை தெரியாமல் வாங்கி செல்லும் பொது மக்களுக்கு நோய்கள் ஏற்படும். ஒரு சுகாதார அதிகாரியாக இருந்து நீங்கள் பொது மக்களுக்கு என்ன சேவை செய்கிறீர்கள். இந்த இறைச்சியை பறிமுதல் செய்து ஆய்வு கூடத்துக்கு அனுப்புங்கள். சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுங்கள்’ என்று ஆவேசமாக பேசினர். இதையடுத்து எதுவும் பேச முடியாத அதிகாரி அங்கிருந்து நைசாக நழுவி சென்றுவிட்டார். பின்னர் அவரை செல்போனில் தொடர்பு கொண்டபோது அவர் போனை எடுக்கவில்லை. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் எதுவும் தெரியாததுபோல இறைச்சி வியாபாரி தனது வியாபாரத்தை கவனித்து கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ‘அதிகாரிகளின் அலட்சியப்போக்கு பொது மக்களின் உடல்நலத்துடன் விளையாடி வருவதை யாரிடம் கூறி அழுவது’ என சிலர் நொந்து கொண்டே அங்கிருந்து சென்றனர்.

Tags : blacksmiths ,dispute ,officer , Granite, meat sale
× RELATED உடல் உஷ்ணம் அதிகரித்து மூளை...