×

கரிவலம்வந்தநல்லூர் கோயிலில் இன்று மாலை ஆவணி தபசு காட்சி: பக்தர்கள் குவிகின்றனர்

சங்கரன்கோவில்: கரிவலம்வந்தநல்லூர் பால்வண்ணநாத சுவாமி கோயில் ஆவணி தபசு காட்சி இன்று மாலை நடக்கிறது. மாலை 6 மணிக்கு ஒப்பனை அம்பாளுக்கு முக லிங்கநாதர் வடிவமாக சுவாமி ரிஷப  வாகனத்தில் காட்சி அளிக்கிறார். இரவு 10 மணிக்கு  யானை வாகனத்தில் பால்வண்ணநாதராக அம்பாளுக்கு காட்சி  கொடுக்கும் 2வது தபசுகாட்சி நடக்கிறது. விழாவையொட்டி பக்தர்கள் குவிந்து வருகின்றனர். சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி கோயிலின் துணை கோயிலான கரிவலம்வந்தநல்லூர் ஒப்பனை அம்பாள் சமேத ஸ்ரீபால்வண்ணநாத சுவாமி கோயிலில் ஆவணி திருவிழா, கடந்த 27ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து விழா நாட்களில் அம்பாள், பல்வேறு வாகனங்களில் வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடந்தது.

11ம் திருநாளான நேற்றுமுன்தினம் மாலை(செப்.7) தேரோட்டம் நடந்தது.  பக்தர்கள் திரளா னோர் கலந்து கொண்டு வடம்பிடித்து தேர் இழுத்தனர். விழாவின் சிகர நிகழ்ச்சியான ஆவணி தபசு காட்சி இன்று (ஞாயிறு) நடைபெறுகிறது. இதையொட்டி காலை 10 மணிக்கு சுவாமி அம்பாள் முகலிங்கநாதர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. இதில் பக்தர்கள் திரளாக பங்கேற்று தரிசனம் செய்தனர். தொடர்ந்து பகல் 1.30 மணிக்கு ஒப்பனையம்மாள், தபசு மண்டபத்திற்கு எழுந்தருளல் நடந்தது. தொடர்ந்து இன்று மாலை 6 மணிக்கு ஒப்பனை அம்பாளுக்கு முக லிங்கநாதர் வடிவமாக சுவாமி ரிஷப வாகனத்தில் காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

இரவு 10 மணிக்கு மேல் 11 மணிக்குள் யானை வாகனத்தில் பால்வண்ணநாதராக அம்பாளுக்கு காட்சி கொடுக்கும் 2வது தபசு காட்சி நடக்கிறது. விழா நிறைவுநாளான  நாளை(திங்கள்) காலை 10 மணிக்கு சுவாமி, அம்பாளுக்கு அபிஷேக அலங்கார தீபாராதனை நடக்கிறது. இரவு 7 மணிக்கு சுவாமி, அம்பாள் எழுந்தருளும் சப்தா வர்ணம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் மற்றும் மண்டகப்படிதரரர்கள் செய்து வருகின்றனர்.

Tags : Devotees ,Karivalavandanallur temple , Kariwalavandanallur Temple, Avani Asapas
× RELATED கோவை வெள்ளிங்கிரி மலையில் ஏறிய 3 பக்தர்கள் மூச்சு திணறி பலி