×

திருப்பூர் மாவட்டத்தில் வெள்ள வேலமர பட்டைகளை உறித்து சாராயம் காய்ச்சுவது அதிகரிப்பு: மது விலக்கு போலீசார் கண்டுகொள்வதில்லை என புகார்

காங்கயம்: மாநில நெடுஞ்சாலை ஓரங்களில் உள்ள வெள்ள வேல மரத்தின் பட்டைகளை இரவு  நேரத்தில் மர்ம கும்பல் ஒன்று சாராயம் காய்ச்ச உறித்து செல்வதால்  அந்த மரங்கள் அழியும் அபாயத்தில் உள்ளது. திருப்பூர் மாவட்டம் காங்கயம், நத்தக்காடையூர், வெள்ளக்கோவில், சிவன்மலை குண்டடம், தாராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மானாவாரி விவசாய நிலங்களிலும், மாநில மற்றும் கிராம சாலை ஓரங்களிலும் அதிக அளவில் வெள்ள வேல மரங்கள் வளர்ந்து உள்ளன. விளைச்சல் நிலங்களில் உள்ள மரங்கள் ஆடுகளுக்கு நிழலாக இருக்க விவசாயிகள் வளர்க்கின்றனர்.

இந்த நிலையில், காங்கயம், படியூர், வெள்ளகோவில் மற்றும் பாப்பினி கிராமங்களில் கடந்த சில மாதங்களாக விவசாய தோட்டங்களில் உள்ள வளர்ந்த வெள்ள வேல மரத்தின் பட்டைகளை சாராயம் காய்ச்ச தொடர்ச்சியாக மர்ம கும்பல் ஒன்று இரவு நேரத்தில் தோட்டத்துக்குள் புகுந்து உறித்து செல்வதாக விவசாயிகள் புகார் தெரிவித்திருந்தனர். ஆனால் இது குறித்து காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்காததால் வேல மரத்தின் பட்டைகளை உறித்து செல்வது தற்போது அதிகரித்துள்ளது.

கடந்த ஒரு வாரமாக காங்கயம் வழியாக செல்லும் ஈரோடு-பழனி மாநில நெடுஞ்சாலையில் பரஞ்சேர்வழி பிரிவு, முள்ளிபுரம், வரதப்பம்பாளையம், ஊதியூர், வெள்ளகோவில் உள்ளிட்ட பகுதிகளில் நெடுஞ்சாலை ஓரத்தில் நன்கு வளர்ந்து 30 ஆண்டுகள் கடந்த வெள்ளவேல மரத்தின் பட்டைகளை, இரவு நேரத்தில் மர்ம கும்பல் ஒன்று சாராயம் காய்ச்ச உறித்து செல்வது அதிகரித்துள்ளது. 24 மணி நேரமும் போக்குவரத்து அதிகமுள்ள இந்த சாலையில் தொடர்ச்சியாக நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான 50க்கும் மேற்பட்ட மரங்களில் பட்டைகள் உறிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு பட்டைகள் உரிக்கப்படுவதால் நாளடைவில் மரம் மடிந்து விடுவதோடு, மழை பொழிவிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் வெள்ள வேலமர பட்டைகள் உரித்து எடுத்து செல்லும் போக்கு அதிகமாகியுள்ளதால், சாராயம் காய்ச்சி விற்பனை செய்வது காங்கயம் வட்டத்தில் உள்ள கிராமப்புறங்களில் அதிகரித்துள்ளது. மது விலக்கு போலீசார் கண்டுகொள்வதில்லை. அரசு உரிய நடவடிக்கை எடுத்து இந்த மரங்களை காப்பதோடு சாராயம் காய்ச்சும் நபர்களை கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : district ,Tirupur , Tirupur, Flood Velmara Bark, booze, increase
× RELATED திருப்பூர் மாவட்டத்தில் 5 எம்பி தொகுதி