×

ஹரியானாவில் பிரச்சாரத்தை தொடங்கினார் பிரதமர் மோடி: அரசின் 100 நாள் செயல்பாடுகளை சுட்டிக்காட்டி உரை... வரலாற்று சிறப்புமிக்க முடிவுகளை எடுத்துள்ளதாக பெருமிதம்

ஹரியானா: சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ள உள்ள ஹரியானாவில் பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். ரோடக் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் பங்கேற்றார். ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் உள்ளிட்ட பாரதிய ஜனதா தலைவர்கள் இதில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் உரையாற்றிய நரேந்திர மோடி; கடந்த சில மாதங்களில் ரோடக் வருவது இது மூன்றாவது முறை ஆகும். இந்த முறை, உங்களின் ஆதரவை கேட்டு வந்துள்ளேன். கேட்டதை விட கூடுதலாகவே ஹரியானா மக்கள் பாரதிய ஜனதாவுக்கு ஆதரவு அளித்துள்ளதாக கூறினார். ஹரியானாவில் முதல்வர் மனோகர் லால் கட்டார் ஆட்சியில் அனைத்து திட்டங்களும் மக்களை சென்றடைவதாக அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

2 வது முறையாக ஆட்சியமைத்த பின் முதல் 100 நாள்களில், வேளாண்மை, தேசப்பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்களில் முக்கிய முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டிருப்பதாகக் கூறினார். கடந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரில், ஏராளமான மக்கள் நலப்பணிகளுக்கான சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த 60 ஆண்டுகளில் எந்த கூட்டத்தொடரிலும் இப்படி நடந்ததில்லை. கடந்த 100 நாள்களில் எடுக்கப்பட்ட துணிச்சலான முடிவுகள் வருங்காலத்தில் பலன் அளிக்கும் என்று பெருமையுடன் பிரதமர் கூறினார். இந்தியாவிலுள்ள 130 கோடி மக்களும் புதிய தீர்வுகளை கண்டுபிடிக்க தொடங்கி இருப்பதாக அவர் கூறினார்.

ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் மக்களின் விருப்பங்களை நிறைவேற்ற, புதிய அணுகுமுறையுடன் பணியை தொடங்கியிருப்பதாக மோடி தெரிவித்தார். பொருளாதாரத்தை வலுப்படுத்தும் விதமாக பல்வேறு துறைகளின் வளர்ச்சிக்கு உதவும் விதத்தில் செயல்திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. வங்கி துறையை வலிமைப்படுத்தும் விதமாக வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவுகள் எடுக்கப்பட்டு இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார். ஹரியானா சட்டப்பேரவையின் பதவி காலம் முடிவடைவதை அடுத்து அக்டோபருக்குள் அந்த மாநிலத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. அதேபோல சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ள உள்ள மராட்டியம், ஜார்கண்ட் மாநிலங்களிலும் மோடி விரைவில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.


Tags : campaign ,Modi ,Haryana , Haryana, PM Modi, Historical results, proud
× RELATED பிரதமர் மோடி தமிழக மக்களுக்காக சுற்றி...