×

வால் பகுதி மட்டுமே கிடைத்துள்ளது கீழடியை முழுமையாக அறிய 20 ஆண்டு ஆய்வு செய்ய வேண்டும்

திருப்புவனம் : கீழடியில் தற்போது கிடைத்திருப்பது வால் பகுதி மட்டுமே. முழுமையாக அறிய 20  ஆண்டுகளுக்கு மேல் ஆய்வு செய்ய வேண்டுமென மதுரை எம்பி சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் 5ம் கட்ட அகழாய்வு நடந்து வருகிறது. கடந்த ஜூன் 13ல் தொடங்கிய இந்த அகழாய்வு மூலம் சுமார் 650 தொல்பொருட்கள் கிடைத்துள்ளன. பல்வகையான செங்கல் கட்டுமானச் சுவர்கள், தொட்டிகள், உறை கிணறு உள்ளிட்ட தொல்லியல் எச்சங்கள் கண்டறியப்பட்டன. இந்த மாத கடைசி வாரத்துடன் 5ம் கட்ட அகழாய்வு நிறைவு பெறும்.

இந்நிலையில், மதுரை எம்பி சு.வெங்கடேசன், அகழாய்வு முகாமிற்கு நேற்று வந்து தொல்பொருட்களை பார்வையிட்டார். அப்போது, அகழாய்வு காப்பாட்சியர் ஆசைத்தம்பி, தொல்பொருட்கள் குறித்து எம்பியிடம் விளக்கம் அளித்தார்.
பின்னர், நிருபர்களிடம் எம்பி சு.வெங்கடேசன் கூறியதாவது:  கீழடியில் மத்திய அரசின் இரண்டு கட்ட அகழாய்வு, அமர்நாத் ராமகிருஷ்ணா தலைமையில் நடந்தது. அப்போது தொழிற்சாலை இருந்ததற்கான கட்டுமான சான்று கிடைத்தது. பின், மூன்றாம் கட்ட ஆய்வுக்காக ஸ்ரீராமர் என்பவரை அதிகாரியாக மத்திய அரசு நியமித்தது. அவர், மூன்றாம் கட்ட ஆய்வில் எவ்வித கட்டுமான தொடர்ச்சியும் கிடைக்கவில்லை என இழுத்து மூடும் அறிக்கையை மத்திய அரசுக்கு அளித்தார்.

அதனைத்தொடர்ந்து, 4ம் மற்றும் 5ம் கட்ட அகழாய்வை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. மூன்றாம் கட்ட ஆய்வில் கட்டுமான தொடர்ச்சி இல்லை என தமிழருக்கு துரோகம் செய்யப்பட்டது. ஆனால், மாநில அரசு மேற்கொண்ட 5ம் கட்ட அகழாய்வில், பல்வேறு தொழிற்சாலைகள் இருந்ததற்கான, கட்டுமான சான்றுகளை கண்டறிந்து உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டப்பட்டுள்ளது. 300 மீ சுற்றளவு கொண்ட மைதானத்தில், இத்தனை கட்டுமான சான்றுகள் கிடைத்துள்ளன. இதற்கு முன்பு கிடைத்த அகழாய்வு பொருட்கள் கால பகுப்பாய்விற்காக அமெரிக்காவுக்கும், எலும்பு பொருட்கள் டெக்கான் பல்கலைக்கழகத்திற்கும் அனுப்பப்பட்டுள்ளன. நிறமாலை பகுப்பாய்வுக்காக இத்தாலில் உள்ள பைசாபாத்துக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த ஆய்வு அறிக்கையை தமிழக அரசு  உடனடியாக வெளியிட வேண்டும். கீழடியை பொறுத்தவரை 20 ஆண்டுகளுக்கு மேல் அகழாய்வு செய்தால்தான், முழுமையாக நாம் தெரிந்து கொள்ள முடியும். இப்போது நமக்கு கிடைத்திருப்பது வெறும் வால் பகுதிதான். தலைப்பகுதி வேண்டும் எனில், தொடர்ந்து அகழாய்வு நடத்த வேண்டும். தற்போது கிடைத்துள்ள பொருட்களை பார்க்கும்போது மிகவும் பிரமிப்பாகவும், ஆச்சர்யமாகவும் உள்ளது. எவ்வித இயந்திரமுமின்றி, கலைநயத்துடன் மண்பாண்டங்களை எப்படி தயாரித்தார்கள் என்பது வியத்தகு விஷயமாக உள்ளது. சுண்டு விரல் அளவு மட்டுமே உள்ள சிறிய பானை எதற்கு பயன்பட்டிருக்கும் என்பது ஆச்சரியமாக உள்ளது. எனவே, தமிழக அரசு போதிய நிதியை ஒதுக்கி, கீழடி மட்டுமல்லாமல், அதன் சுற்றுப்பகுதிகளான மணலூர், கொந்தகை, அகரம் போன்ற பகுதிகளிலும் தொடர் அகழாய்வு நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


Tags : Keeladi ,Survey ,Ventateshan MP,Madurai
× RELATED சென்னை உள்ளிட்ட இடங்களில்...