×

நேற்றும், இன்றும் எல்லையில் பதற்றம்: ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்...இந்தியா பதிலடி

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் எல்லையோர பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவத்தினர் நள்ளிரவு முதல் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருவதால் பதற்றம் நீடித்து வருகிறது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பூஞ்ச், ரஜௌரி உள்ளிட்ட எல்லைப் பகுதிகளில் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவத்தினர், இந்திய படைகள் மீது நேற்று நள்ளிரவு முதல் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதேபோல் சுந்தர்பானி, நவ்ஷேரா எல்லைப்புற கிராமங்கள் மீது பாகிஸ்தான் படையினர் அத்துமீறி பொதுமக்கள் குடியிருக்கும் பகுதிகளில் குண்டுவீசி தாக்குதல் நடத்தினர்.

இதற்கு பதிலடி தரும் வகையில் இந்திய ராணுவத்தினரும் பதில் தாக்குதல் நடத்தினர். இரு தரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருவதால், அங்கு குடியிருக்கும் மக்கள் அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர். இந்த  தாக்குதலில் காயமடைந்தவர்கள் குறித்தோ, உயிரிழந்தவர்கள் குறித்தோ இதுவரை எவ்வித தகவலும் வெளியாகவில்லை.

பாகிஸ்தான் தரப்பு தாக்குதலால், எல்லை பகுதியில் வசிக்கும் மக்கள் இடையே அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும், ஒருவரின் வீடு சேதம் அடைந்துள்ளதாகவும் ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, நேற்று செப்டம்பர் 7-ம் தேதி பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணா காட்டி, பூஞ்ச் செக்டார் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதற்கு இந்திய ராணுவமும் உடனடியாக பதிலடி கொடுத்தது. இந்த மோதல் பல மணி நேரம் நீடித்தது குறிப்பிடத்தக்கது. 


Tags : border ,army ,Pakistani ,Kashmir ,Jammu ,India , Tension on the border yesterday and today: Pakistani army infiltrates in Jammu and Kashmir ... India retaliates
× RELATED தமிழ்நாடு – ஆந்திர எல்லையான எளாவூரில் 32 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 பேர் கைது