×

விக்ரம் லேண்டரின் இருப்பிடன் கண்டறிப்பட்டது: தகவல் தொடர்பு இன்னும் கிடைக்கவில்லை...இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்

ஸ்ரீஹரிகோட்டா: நிலவை பற்றி ஆய்வதற்காக, சந்திரயான்-1 விண்கலம் கடந்த 2008ம் ஆண்டு அனுப்பப்பட்டது. இதன் ஆர்பிட்டர் செயற்கைகோள் நிலவின் சுற்றுவட்டபாதையை வெற்றிகரமாக சென்றடைந்து படங்களை எடுத்து அனுப்பியது.  இதனால், நிலவில்  ஆய்வுக்கலத்தை தரையிறக்கும் சந்திரயான்-2 திட்டத்துக்கு கடந்த 2008ம் ஆண்டே அனுமதி வழங்கப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இஸ்ரோ விஞ்ஞானிகள் மேற்கொண்ட முயற்சியில் சந்திரயான்-2 விண்கலம்  உருவாக்கப்பட்டது. இதில், நிலவை சுற்றும் ஆர்பிட்டர், நிலவில் தரையிறங்கும் ‘விக்ரம்’ லேண்டர், நிலவின் மேற்பரப்பில் ஆய்வு மேற்கொள்ளும் ‘பிரக்யான்’ என்ற ரோபோ வாகனம் ஆகிய 3 முக்கிய பாகங்கள் இடம் பெற்றிருந்தன. இவைகள்  ஒன்றாக  இணைக்கப்பட்டு ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்திலிருந்து கடந்த ஜூலை 22ம் தேதி வெற்றிகரமாக அனுப்பப்பட்டது. இத்திட்டத்துக்காக மொத்தம் ரூ.978 கோடி செலவிடப்பட்டது.

புவி சுற்றுவட்டப்பாதையை சென்றடைந்த சந்திரயான்-2 விண்கலம், படிப்படியாக ஒவ்வொரு சுற்றுவட்டபாதையாக உயர்த்தப்பட்டு, கடந்த ஆகஸ்ட் 20ம் தேதி நிலவின் சுற்றுவட்ட பாதையில் வெற்றிகரமாக நுழைக்கப்பட்டது. நிலவை சுற்றி வந்த  ஆர்பிட்டரில் இருந்து விக்ரம் லேண்டர் கடந்த 2ம் தேதி வெற்றிகரமாக பிரிந்தது. இதை நேற்று அதிகாலை 1.30 மணி முதல் 2.30  மணிக்குள் நிலவின் தென் துருவத்தில்  உள்ள மான்சினஸ்-சி,  சிம்பேலியஸ்-என் ஆகிய இரு பள்ளங்களுக்கு   இடையே அமைந்துள்ள சமவெளியில் தரையிறக்க விஞ்ஞானிகள் திட்டமிட்டனர். உலகத்திலேயே முதல் முறையாக நிலவின் தென் துருவத்தில் லேண்டரை தரை இறக்கும் வரலாற்று சிறப்புமிக்க இந்நிகழ்வை காண பிரதமர் மோடி  பெங்களூருவில் உள்ள இஸ்ரோ மையத்திற்கு நேற்று முன்தினம் இரவு வந்தார்.

அவருடன், தேர்வு செய்யப்பட்ட 60 இந்திய மாணவர்கள் இஸ்ரோவின்  சரித்திர சாதனையை இஸ்ரோ மையத்தில் இருந்தபடி பார்த்து கொண்டிருந்தனர். நிலவில் தரை இறங்கும் முன்பாக லேண்டரில் இருந்த அதிநவீன கதிர்வீச்சு கருவிகள்  நிலவின் தரை இறங்கும் பகுதியை தெளிவாக ஆய்வு செய்தது. தொடர்ந்து, அதிகாலை 1.38 மணி முதல் விக்ரம் லேண்டரை தரையில் இறக்கும் பணியை இஸ்ரோ விஞ்ஞானிகள் தொடங்கினர். விக்ரம் லேண்டரின் வேகத்தை குறைத்து பூஜ்ய  நிலைக்கு கொண்டுவரும் பணிகளை மேற்கொண்டனர். தென் துருவத்தில் விக்ரம் லேண்டரை தரை இறக்க முயன்ற கடைசி 15 நிமிடங்கள் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு மிகவும் சவாலாக இருந்தது. இந்த 15 நிமிடங்கள், லேண்டரில் உள்ள  இன்ஜின்கள் தானாகவே இயங்கக் கூடியவை. அதில் முதல் 11 நிமிடங்கள் மிகச் சரியாக தரை இறக்கும் பணிகள் நடந்தன.

மீதம் உள்ள 4 நிமிடங்கள் மட்டுமே உள்ள நிலையில், சரியாக அதிகாலை 1.58 மணி அளவில், நிலவில் இருந்து 2.1 கிலோ மீட்டர் தொலைவில் விக்ரம் லேண்டர் இருக்கும் போது அதனுடன் இருந்த சிக்னலை இஸ்ரோவின் தரை கட்டுப்பாட்டு  மையம் திடீரென இழந்தது. இதனைத்தொடர்ந்து விஞ்ஞானிகள் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து, இஸ்ரோ தலைவர் சிவன் கூறுகையில், “நிலவின் தரைப்பகுதியில் இருந்து 2.1  கிலோ மீட்டர் உயரத்தில் விக்ரம் லேண்டர்  இருந்தபோது  சிக்னல்  துண்டிக்கப்பட்டது. சிக்னலை மீட்க அனைத்து முயற்சிகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது,” என்றார்.

விக்ரம் லேண்டரின் சிக்னல்  துண்டிக்கப்பட்டாலும், நிலவை சுற்றிக் கொண்டிருக்கும் சந்திரயான்-2 விண்கலத்தின் ஆர்பிட்டர் நல்ல நிலையில் உள்ளது. அதில் உள்ள சக்தி வாய்ந்த  கேமிராக்கள் மூலம், மாயமான விக்ரம் லேண்டரை  கண்டறியும் முயற்சியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். மேலும், விக்ரம் லேண்டருக்கும் தொடர்ந்து சிக்னல்கள் அனுப்பப்பட்டு வந்தது. இந்நிலையில், நிலவுக்கு அருகே தொலைத்தொடர்பை இழந்த விக்ரம் லேண்டரின்  இருப்பிடன் குறித்து கண்டறியப்பட்டது என்றும் விக்ரம் லேண்டர் கண்டறியப்பட்ட போதிலும் தகவல் தொடர்பு இன்னும் கிடைக்கவில்லை என்றும் லேண்டருடன் தொடர்பு கொள்ள தொடந்து முயற்சித்து வருவதாகவும் இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.


Tags : location ,Vikram Lander ,President ,ISRO , Found with Vikram Lander's location: Communication not yet available ... ISRO Chairman Shiva Information
× RELATED பெங்களூரு ராமேஸ்வரம் கபே குண்டு...