×

அதிகரிக்கும் சாலையோர விளம்பர பலகை விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

கோவை : கோவை மாநகர் மற்றும் மாவட்ட பகுதிகளில் சாலையோர விளம்பர பலகைகள் நீதிமன்ற உத்தரவுப்படி அகற்றப்படாமல் உள்ளது, மேலும் சாலையோர பகுதிகளில் விளம்பர பலகைகள் வைப்பதும் அதிகரித்துள்ளது. இதனால் வாகனஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர்.  தேசிய  மற்றும் மாநில நெடுஞ்சாலைகள், நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள அரசு மற்றும்  தனியார் நிலங்கள் கட்டிடங்களின் மேல் தளம் மற்றும் போக்குவரத்து சிக்னல்கள்  ஆகியவற்றில் விளம்பர பலகைகள் டிஜிட்டல் பேனர்கள் வைக்க கூடாது என சென்னை  உயர்நீதிமன்றம் கடந்த 2017ம் ஆண்டு உத்தரவிட்டுள்ளது.

 இது தொடர்பாக விளம்பர பலகைகள் டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டு விதிமுறைகளை  மீறுபவர்கள் மீது, அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதை  தடுப்பவர்கள் மீது ஓராண்டிற்கான சிறை தண்டனை அல்லது 5,000 ரூபாய் அபராதம்  அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்.  கோவை மாவட்டத்தில் விதிமுறைகளை  மீறி விளம்பரதாரர்கள் இந்த விளம்பர பலகைகளை நிறுவப்பட்டு இருப்பது  கண்டறியப்பட்டால் உடனடியாக விளம்பரங்களை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.  அதற்குரிய செலவு தொகை சம்பந்தப்பட்ட அவரிடம் இருந்து வசூலிக்கப்படும்.  நெடுஞ்சாலைதுறை, காவல் துறை, கிராம ஊராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள்  மற்றும் கோவை மாநகராட்சி ஆகியவை இதற்கு தனி கவனம் செலுத்தி உடனடியாக  அனுமதி இல்லாத விளம்பரங்களை அகற்ற நடவடிக்கை எடுத்திட வேண்டும் என கோவை மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


alignment=



 இந்த உத்தரவுகள் இருந்தாலும் கூட சாலையோர பகுதிகளில் விளம்பர பலகை வைப்பது இன்னமும் அதிகரித்து வருகிறது, ஏற்கனவே வைக்கப்பட்ட விளம்பர பலகைகளும் இதுவரை பல இடங்களில் அகற்றப்படாமல் உள்ளது. குறிப்பாக கோவை மாநகர் பகுதிகளில் அவினாசி மேம்பாலம், வடகோவை மேம்பாலம், ஆர்.எஸ்.புரம், டவுன்ஹால், உக்கடம், ராமநாதபுரம், சிங்காநல்லூர், காந்திபுரம், சாய்பாபா காலணி, என்.எஸ்.ஆர் சாலை, திருச்சி சாலை உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் விளம்பர பலகைகளை காணமுடியும்.

 அதேபோல் நரசிம்மநாயக்கண்பாளையம், துடியலூர், பெரியநாயக்கண்பாளையம், சிறுவாணி சாலை, காரணம்பேட்டை, காரமடை, உள்ளிட்ட பல பகுதிகளிலும் நீதிமன்ற உத்தரவு காற்றில் பறக்கப்பட்டு விளம்பர பலகைகள் அகற்றப்படாமலும், மேலும் புதிதாக பல விளம்பர பலகைகளும் வைக்கப்பட்டுள்ளன. இதனால் இந்த பகுதிகளில் பயணிக்கும் வாகன ஒட்டிகளுக்கு கவனசிதறல் ஏற்பட்டு விபத்தில் சிக்குகின்றனர்.  இது குறித்து சமூக ஆர்வலர் மனோஜ் கூறியதாவது: கோவை மாநகர் பகுதியில் அதிகரித்து வரும் சாலையோர விளம்பர பலகைகளுக்கு முக்கிய காரணம் போலீசார் தான். விளம்பர பலகை வைக்க வேண்டும் என்றால் காவல்துறையினரின் தடையில்லா சான்று பெற வேண்டும், அந்த சான்றிதழ் கொடுப்பதுடன் காவல்துறையினர் கண்டுகொள்ளுவதில்லை, மாநகரின் எந்த பகுதிகளில் வைக்கலாம் என இடத்தை தேர்வு செய்வது அதற்கான சான்றிதழ் கொடுப்பது மாநகராட்சி இதன் பிறகே மாவட்ட நிர்வாகம் விளம்பர பலகைகளை வைப்பதற்கு அனுமதி அளிக்கிறது.

ஆக அனுமதி விளம்பர பலகைகளை வைப்பதற்கு அனுமதி அளிப்பது மாவட்ட நிர்வாகம் தான். உயர்நீதிமன்ற உத்தரவுப்படி மாவட்ட நிர்வாகம் இதுவரை விளம்பர பலகைகளை இன்னமும் அகற்றவில்லை, பேரூராட்சி, ஊராட்சி, மாநகராட்சி, நகராட்சி உள்ளிட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதே தவிற அதனை கண்காணித்து விளம்பர பலகைகள் அகற்றப்பட்டதா என மாவட்ட நிர்வாகம் கவணிக்க தவறிவிட்டது.  அதே போல் விளம்பரதாரர்கள் விளம்பர பலகைகளை வைப்பதற்கு அனுமதிக்கோரி ஒரு இடத்தை சொல்வார்கள், ஆனால் அனுமதி கிடைத்ததும் விளம்பர பலகைகளை அந்த இடத்தில் வைக்காமல் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படும் வகையிலும், வாகன ஒட்டிகளின் கவனத்தை சிதறடிக்கும் வகையிலும், பாதசாரிகளுக்கு நடப்பதற்கு கூட வழியில்லாத வகையிலும் தான் இந்த விளம்பர பலகைகள் வைப்படுகிறது.

 இது தொடர்பாக காவல்துறை தரப்பிலும் எந்த நடவடிக்கைகளும் எடுப்பதில்லை. அதே போல் ஒரு விளம்பர பலகை வைப்பதற்கு எழு நாட்கள் மட்டுமே அனுமதியுள்ளது ஆனால் சிலர் மாதக்கணக்கில் அங்கு விளம்பர பலகைகளை வைக்கின்றனர்.  அதுமட்டுமல்ல அதே இடத்தில் நிரந்தரமாக வேற வேற விளம்பர பலகைகள் வைக்கப்படுகின்றன. இதனை தடுத்து வாகன ஒட்டிகள் விபத்தில் சிக்காமல் இருக்க, பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் இருக்கவும் மாவட்ட கலெக்டர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

 கோவை மாநகரின் சுமார் 30க்கும் மேற்பட்ட சிக்னல்களில் மேல்பகுதிகளில் விளம்பர பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. இதனை அகற்றும் விதமாக மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டிருந்தாலும், மாநகராட்சிக்கு விளம்பரத்தால் வரும் வருவாய் பாதிக்கப்படுகிறது என்பதால் விளம்பரதாரர்களுக்கு கூடுதல் அவகாசம் வழங்கப்படுகிறது. இதன் காரணமாகவே தான் விளம்பர பலகைகள் இன்னமும் பல சிக்னல்களில் அகற்றப்படவில்லை என சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.  இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘கோவை மாநகரில் மாநகராட்சிக்குட்பட்ட ஐந்து மண்டல பகுதிகளிலும் சாலையோர விளம்பர பலகைகள், சிக்னல்களில் உள்ள விளம்பர பலகைகள், தனியார் கட்டிடங்களில் நெடுஞ்சாலையோரம் உள்ள விளம்பர பலகைகள் ஆகியவற்றை அகற்றக்கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

 அதிகாரிகளும் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதே போல் நடைபாதைகளில் வைக்கப்பட்ட விளம்பர பலகைகள் பெரும்பாலும் மாநகர் பகுதிகளில் அகற்றப்பட்டுவிட்டது. விரைவில் விதிமுறைகளை மீறி வைக்கப்பட்டுள்ள அனைத்து விளம்பர பலகைகளும் அகற்றப்படும். ஏற்கனவே இது தொடர்பாக குழு அமைக்கப்பட்டு மாநகராட்சி நிர்வாகம் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது, ’’ என்றார்.  இது குறித்து போக்குவரத்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘கோவை மாநகர் பகுதியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக விபத்து எண்ணிக்கை குறைந்துள்ளது.

பெரும்பாலான விபத்துகள் போக்குவரத்து விதிமுறைகளை மீறி வேகமாக செல்வது, மது அருந்திவிட்டு வாகன ஒட்டுவது, ஹெல்மட் அணியாமல் பயணிப்பது, செல்போன்கள் பேசிக்கொண்டு செல்வதால் ஏற்படுகின்றது. சாலையோர விளம்பரபலகைகளை பார்த்து அதனால் கவனசிதறலால் ஏற்படும் விபத்துகள் குறைவே. எனினும் எந்த ஒரு விபத்தும் ஏற்படாத வண்ணம் பாதுகாப்பது காவல்துறையின் கடமை. சாலையோர விளம்பர பலகைகள் பெரும்பாலும் அகற்றப்பட்டுவிட்டன. சில விளம்பர பலகைகளுக்கு மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி சார்பாக முறையான அனுமதியுள்ளது இதனை அவர்கள் ரத்து செய்தால் மட்டுமே அகற்ற முடியும்,’’ என்றார்.

Tags : Motorists ,billboard crash , Coimbatore,Road Accidents ,advertisement board
× RELATED பிரதமர் அடிக்கல் நாட்டியும்...