×

கிருஷ்ணகிரி மாவட்டத்தில்தொடரும் துயரம் மனித- வன உயிரின மோதல்களால் பரிதவிக்கும் வனப்பகுதி கிராமங்கள்

*6 ஆண்டுகளில் 70 பேர் உயிரிழப்பு
*நிரந்தர தீர்வுக்கு வழிபிறக்குமா?

கிருஷ்ணகிரி : தமிழகத்தின் வடக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் மனித, வன உயிரின மோதல்கள் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. இதில் வட மாவட்டமான கிருஷ்ணகிரியில் மனித-வன உயிரின மோதல்களால் கடந்த 6வருடங்களில் 70 பேர் உயிரிழந்துள்ளனர். ெதாடரும் துயரத்திற்கு எப்போது தீர்வு கிடைக்கும் என்ற பரிதவிப்பில் மக்கள் காத்திருக்கின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மொத்த பரப்பளவான 5.43 லட்சம் ஹெக்டேரில் 1.45 ஹெக்டேர் பரப்பளவு வனப்பகுதியாக உள்ளது. 7 வனச்சரகங்கள் கொண்ட இம்மாவட்டத்தில் 115 காப்புகாடுகள் உள்ளன.

தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்குட்பட்ட ஜவளகிரி, அய்யூர், நொகனூர், மரக்கட்டா, உரிகம் உள்ளிட்ட வனப்பகுதிகளில் யானைகள் நடமாட்டம் அதிகமுள்ளது.  இதில் யானைகளால் விவசாயிகளும், விவசாய விளை பொருட்களும் பாதிக்கப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஊடேதுர்க்கம் காட்டில் மட்டும் சுமார் 30 யானைகள் உள்ளன. இந்நிலையில் ஆண்டுதோறும் அக்டோபர் மாத இறுதியில் கர்நாடக மாநிலம் பன்னார்கட்டா வனப்பகுதியில் இருந்து சுமார் 100 யானைகள் உணவிற்காக கிருஷ்ணகிரி மாவட்ட வனப்பகுதிக்கு வருகிறது.

இவ்வாறு வரும் யானைகள் மாநில எல்லையில் ராகி பயிர் அறுவடையை குறி வைத்தே வருகிறது. இவை சுமார் 4 மாதம் இந்த பகுதியில் முகாமிட்டு, விவசாய விளை பொருட்களை நாசம் செய்துவது தொடர்கதையாக உள்ளது. தற்போது யானைகளுக்கு வனப்பகுதியில் உணவு, தண்ணீர் போன்றவை இல்லாததால் அடிக்கடி வனத்தை விட்டு கிராமப்புறங்களுக்கு கூட்டம், கூட்டமாக வரத்தொடங்கியுள்ளது. அவ்வாறு யானைகள் கிராமப்புறங்களுக்கு வராமல் தடுக்க, வனப்பகுதியை சுற்றி அகழி வெட்டுவது, மின்சார வேலி அமைப்பது, கற்பாறைகளை கொண்டு சுவர் எழுப்புவது போன்ற பணிகளை வனத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.


alignment=



ஆனாலும் விவசாயிகள் பலர் ஆடு, மாடுகளை வனப்பகுதியில் மேய்ப்பதற்காக அகழி உள்ள பகுதியில் மண்ணை கொட்டி மேடாக்கி விடுகின்றனர். அதன் வழியாக யானைகள் வந்து பயிர்களை சேதம் செய்துவிடுகிறது. இப்படி வரும் யானைகள் மனிதர்களையும் கொன்றுவிடுகிறது. இந்த வகையில்  காட்டு யானைகளால் கடந்த 6 ஆண்டுகளில் ₹70 கோடி ரூபாய் அளவுக்கு பயிர் சேதம் ஏற்பட்டுள்ளது. இதே போல் கடந்த 11 ஆண்டுகளில் காட்டு யானைகள் தாக்கியதில் இம்மாவட்டத்தில் மட்டும் 70க்கும் மேற்பட்டோர் பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இவர்களுக்கெல்லாம் வனத்துறை சார்பில் இழப்பீடு வழங்கப்படுகிறது. ஆனால் பல்வேறு அலைக்கழிப்புக்கு பிறகு வழங்கப்படும் அந்த இழப்பீட்டு தொகை போதுமானதாக இல்லை என்றும், 50 சதவீதம் அளவுக்கு கூட இழப்பீடு தொகை வழங்கப்படுவதில்லை என்பதும் பாதிக்கப்பட்ட மக்களிடம் தொடரும் குமுறலாக உள்ளது. எனவே தொடரும் வனஉயிரின மோதல்களுக்கும் அதனால் ஏற்படும் இழப்புகளுக்கும் அரசு சார்பில் நிரந்தர தீர்வு காணப்போவது எப்போது என்ற எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர் மக்கள்.

7முறை கிணற்றில்  விழுந்த யானைகள்

கடந்த 2007ம் ஆண்டு ராயக்கோட்டை அருகே முத்தம்பட்டியில் கிணற்றில் விழுந்த யானை உயிருடன் மீட்கப்பட்டது.  கடந்த 2011ம் ஆண்டு டிசம்பர் மாதம் 29ம் தேதி ராயக்கோட்டை அருகே பீர்ஜேப்பள்ளியில் 60 அடி ஆழ தண்ணீர் இல்லாத கிணற்றில் 3 வயது குட்டி யானை விழுந்து உயிர் இழந்தது. இதே போல கடந்த 2014ம் ஆண்டு மார்ச் மாதம் 5ம் தேதி அஞ்செட்டி அருகே 30 அடி ஆழ கிணற்றில் விழுந்த 6 வயது ஆண் யானையும், அதே மாதம் 26ம் தேதி அஞ்செட்டி அருகே 30 அடி ஆழ கிணற்றில் விழுந்த 2 பெண் யானைகளும் உயிருடன் மீட்கப்பட்டன.

 2014ம் ஆண்டு ஜூலை மாதம் 18ம் தேதி தளி அருகே கிணற்றுக்குள் விழுந்த 2 வயது குட்டி யானை மீட்கப்பட்டது. ராயக்கோட்டை அருகே வெப்பாலம்பட்டி மற்றும் பாவாடரப்பட்டியில்  கிணற்றில் விழுந்த யானை மீட்கப்பட்டுள்ளது. இதுவரை கடந்த 10 ஆண்டுகளில் 7 முறை கிணற்றில் யானைகள் விழுந்துள்ளது.  ஒரு முறை குட்டி யானையின் வயிற்று பகுதியில் கிணற்றில் கிடந்த கூர்மையான கல் குத்தி, உயிர் இழந்தது.

நிரந்தர தீர்வுக்கு இதுதான் வழி

வனத்துறை சார்பில் மனித, வன உயிரின மோதலுக்கு தீர்வுகாண, ‘களிறு’ திட்டம், காடுகளில் தண்ணீர்த்தொட்டி அமைத்தல், யானைகள் தீவன மேம்பாட்டு திட்டம், ‘ஏர்லிவார்னிங் சிஸ்டம்’  ‘சென்சார்’ அகழி வெட்டுதல், சோலார் மின்வேலி, மூலிகை துணி கட்டுதல் என புதுப்புதுத் திட்டங்களை வனத்துறை அமல்படுத்தியும், ஒரு பலனுமில்லை. வனத்தில் நிலவும் வறட்சியை போக்கும் வகையில் வனவிலங்குகளுக்கு பிடித்த உணவு வகைகளை தேவையான அளவுக்கு வனப்பகுதிகளிலேயே பயிரிடுவது, தேவையான அளவுக்கு தண்ணீர் வசதி செய்து தரவேண்டும்.  மற்றும் அதன் வலசை பாதைகளை மீட்பது தான் தீர்வாக இருக்கும் என்கின்றனர் வன உயிரின ஆர்வலர்கள்.

கடந்த மாதம் அலற வைத்த ‘கொம்பன்’  
ஓசூரில் கடந்த மாதம் (ஆகஸ்ட்) வனப்பகுதியை ஒட்டி சுற்றித்திரிந்த கொம்பன் மற்றும் மார்க் என்ற இரண்டு காட்டுயானைகள் விளைநிலங்களை சேதப்படுத்தியதோடு, மூன்றுபேரை தூக்கிவீசியும் மிதித்தும் கொன்றதால் மக்கள் அச்சத்தில் உறைந்தனர். அந்த யானைகளை பிடிக்க வனத்துறைக்கு கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் கும்கி யானைகள் துணையுடன் சுமார் 100க்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியர்கள் அந்த இரண்டு காட்டு யானைகளை பிடிக்கும் பணியில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

அடிமாட்டு விலைக்கு நிலங்களை விற்கிறோம் விவசாயி கண்ணீர்

தேன்கனிக்கோட்டை விவசாயி கிருஷ்ணப்பா கூறுகையில், ‘‘கடந்த 5 ஆண்டுகளாக, எங்கள் பகுதிக்கு வருடத்திற்கு 8 மாதங்கள் தினம்தோறும் யானை கூட்டம் புகுந்து பயிர்களை நாசம் செய்வதோடு, மனித உயிரிழப்பும் ஏற்பட்டு, குடும்பங்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி விடுகிறது. குறிப்பாக இந்த யானைகளால் பயிர்கள் நாசமாவதோடு, போதிய மழையும் இல்லாததால் விவசாயம் செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். எங்கள் ஊராட்சிக்குட்ட லிங்கதீரணப்பள்ளி, திம்மசந்திரம், மேலகவுண்டனூர் உள்ளிட்ட கிராமத்தை சேர்ந்த விவசாயிகளின் வாழ்வாதாரம் இந்த யானைகளால் மிகவும் பாதித்துள்ளது. யானைகளின் அட்டகாசத்தால் சில விவசாயிகள் தங்கள் நிலங்களை அடிமாட்டு விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்,’’ என்றார்.

உயிருக்கு உத்திரவாதமில்லை பயிருக்கு நிவாரணமில்லை  விவசாய சங்கதலைவர் ஆதங்கம்

ராமகவுண்டர் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் ராமகவுண்டர் கூறுகையில், ‘‘கிருஷ்ணகிரி மாவட்டத்தின் நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பங்கு வனப்பகுதியாக உள்ளது. இங்கு யானைகளால் நாசமாகும் விளை பயிர்களுக்கு உரிய இழப்பீடு இல்லை. விவசாயிகளின் உயிருக்கும் உத்தரவாதம் இல்லை. கர்நாடக மாநிலத்தில் உளள காப்பு காடுகளில் பழங்கள் ஏலம் விடப்பட்டன. இதனால் யானைகளுக்கு போதிய உணவுகள் இல்லை. இதனால் யானைகள் அடர்ந்த வனப்பகுதியை விட்டு குக்கிராமங்களை ஒட்டி உள்ள வனப்பகுதிக்கு வருகின்றன.  ஆண்டுக்கு சராசரியாக 12 முதல் 14 பேர் யானை தாக்கி இறக்கிறார்கள். எனவே,     வன விலங்குகளை பராமரிப்பதற்காக அளிக்கப்படும் நிதியை முழுமையாக செலவிட்டு, அவை  ஊருக்குள் வராமல் தடுக்க வேண்டும்,’’ என்றார்.

வலசைப்பாதைகளை அழித்ததால் அபாயம்

யானைகள் காடுகளின் காவலனாக திகழ்கிறது. சமீபகாலமாக காடுகளுக்கும், யானைகளுக்கும் இணைப்பு பாலமாக உள்ள வலசைப்பாதைகள், துண்டாடப்படுகின்றன. இதனால், குறுகிய காடுகளில் வாழும் போது உணவு தேவைக்கு ஊருக்குள் படையெடுக்கின்றன. மனிதர்களால் ஏற்படுத்தப்படும் காட்டுத்தீ, விறகு சேகரிப்பதாக யானைகளின் உணவுத்தாவரங்களை அழிப்பது, காடுகளில் விளையும் பொருட்களை சேகரித்து விற்பது, பிளாஸ்டிக் பைகளை காடுகளில் போடுவது என காடுகளுக்கும், காட்டு விலங்குகளுக்குமான அச்சுறுத்தல், உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

காட்டுத்தீ, காடுகளுக்குள் மாடு மேய்ப்பது, விறகு சேகரிப்பு, காடுகளுக்குள் அமைந்துள்ள கிராமங்கள், களைச்செடிகள் என பல விதமான அச்சுறுத்தல்கள், காட்டு யானைகளுக்கு உள்ளன. இதனால், உணவுப் பற்றாக்குறை ஏற்படும்போது, விவசாயப் பகுதிகளில் விருப்ப உணவுகள் இருப்பதைப் பார்த்து யானைகள் படையெடுக்கிறது என்கின்றனர் இயற்கை ஆர்வலர்கள்.


Tags : Wilderness villages ,Krishnagiri district ,human-wildlife conflict , Krishnagiri ,human,wildlife ,accident
× RELATED கிருஷ்ணகிரி அருகே பாம்பு கடித்த பெண்ணுக்கு சிகிச்சை