×

கடலூர் மண்டல பத்திர பதிவுத்துறையில் முறைகேடு அரசுக்கு கோடிக்கணக்கில் வருவாய் இழப்பு

சாமானிய மக்களின் நிலம், வீடு, மனை கனவுகளை நனவாக்கும்  பத்திரப்பதிவு துறை அலுவலகங்கள், வாய்மையே வெல்லும்  என்ற அரசு முத்திரையுடனும்  காந்தியடிகள் படத்துடனும் இயங்கி வருகின்றன. அரசுக்கு பெரும் வருவாய் ஈட்டித்தரும் காமதேனுவாக கருதப்படும்  இத்துறை  சுயநல கும்பலின் கைகளில் சிக்கி  கபளீகரம் செய்யப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

குறிப்பாக, கடலூர் மண்டல பத்திரப்பதிவு துறையில் நடைபெற்று வரும்  முறைகேடுகளால் தமிழக அரசுக்கு கோடிக்கணக்கில் வருவாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாக பல்வேறு அமைப்புகள்  ஆளுநர் முதல்  ஊழல் கண்காணிப்பு தலைமையகம் வரை முறையிட்டுள்ளன. அதனால்தான் கடந்த சில மாதங்களாக லஞ்ச ஒழிப்புத்துறையின் பார்வை கடலூர் மண்டல பத்திரப்பதிவு துறையின் மீது பதிந்துள்ளது. தொடர்ந்து கடலூர் மண்டலத்திற்குட்பட்ட பத்திரப்பதிவு அலுவலகங்களில் அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு வருகின்றன.

கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், விழுப்புரம், திண்டிவனம், கள்ளக்குறிச்சி ஆகிய பகுதிகளை உள்ளடக்கியது  கடலூர் மண்டல பத்திரப்பதிவுத்துறை. இத்துறையின்  மண்டல துணைத் தலைவர் கடலூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறார். அவருக்கு அடுத்ததாக மாவட்ட பதிவாளர்கள் என  நிர்வாகத்திற்கு 6 பேரும், தணிக்கைக்கு 5 பேரும் பணியாற்றி வருகின்றனர். கடலூர்  மண்டலத்தின் கீழ் 60 பத்திரப்பதிவு அலுவலகங்கள் சார்பதிவாளர்கள் தலைமையில்  செயல்படுகின்றன.  இதுதான் கடலூர் மண்டல பத்திரப்பதிவுத்துறையின் நிர்வாக இயந்திரம்.

இந்நிலையில்,   கடந்த இரண்டு ஆண்டுகளில்  கடலூர் பத்திரப்பதிவு மண்டலத்தில் நூற்றுக்கணக்கான மனைப்பிரிவுகள் (பிளாட்டுகள்) பல  பெயர்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவைகளுக்கான டி.டி.சி.பி அங்கீகாரம், மனைப்பிரிவுகள் அங்கீகாரம், மனை மதிப்பு, லேஅவுட்டுக்காக   அரசுக்கு வழங்க வேண்டிய செஸ் வரி  நிர்ணயம் செய்ததில் கூட்டணி சேர்ந்து முறைகேடுகள் நடந்துள்ளன. விதிமுறைகளுக்கு புறம்பாக அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் வகையில்,  சந்தை விலை மதிப்பை குறைத்து மதிப்பீடு செய்து அதன் மூலம் பல கோடி பண ஆதாயம் அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

உண்மையான மதிப்பீட்டை காட்டிலும் மிக குறைவாக அங்கீகாரம் அளித்து ரியல் எஸ்டேட் அதிபர்களுக்கு ஆதரவாகவும் தங்கள் சுய லாபத்திற்காகவும்  தங்கள் பதவிகளை பயன்படுத்திய அதிகாரிகள் சிலரால் கோடிக்கணக்கில் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்ய வருவோரை சிசிடிவி கேமரா மூலம் புகைப்படம் எடுத்து வருகின்றனர். இதற்காக பதிவு செய்ய வருபவர்களிடம் ரூ.50 வசூல் செய்யப்பட்டு வருகிறது.  இதன் சிடி எந்த பயனாளிக்கும் அளிக்கப்படுவதில்லை. இப்பணியை செய்திட தனியார் நிறுவனங்களுக்கு  அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கடலூர் மண்டலம் உள்பட  தமிழ்நாடு முழுவதும்   கடந்த 3 ஆண்டுகளாக வசூலிக்கப்பட்ட பணம்  முறையாக  அரசு கஜானாவில் செலுத்தப்படாமல்  அதில்   ஒரு பெருந்தொகை மேற்கண்ட அதிகாரிகளுக்கும், துறை அமைச்சருக்கும் கமிஷனாக சென்று விடுகிறது  என அங்கு பணிபுரியும் கடைநிலை ஊழியர்கள் ஆதங்கத்தோடு கூறுகின்றனர். இதில் சம்பந்தப்பட்ட  தனியார்  கம்பெனிகள் மீது உரிய விசாரணை மேற்கொண்டால் மிகப்பெரிய ஊழல் அம்பலத்திற்கு வரும் என்றும் அவர்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.

இது போக பலதரப்பட்ட செலவு கணக்குகளுக்கான  டெண்டரிலும் கோடிக்கணக்கான ரூபாய்  கமிஷன் அதிகாரிகள் முதல் மேல்மட்டம் வரை பாய்வதாகவும் கூறப்படுகிறது.  இது போக  கடலூர் மண்டல பத்திரப்பதிவுத்துறையில்  பண ஆதாயத்திற்காக அலுவலர்களை பணிமாற்றம் செய்வதற்கு ரூ  5 லட்சம் முதல் ரூ  10 லட்சம் வரை பணம் பெற்றுக்கொண்டு  அரசின் உத்தரவுகளுக்கு எதிராக பணிமாறுதல்கள் நடைபெறுவதாக கூறப்படுகிறது. மேலும்  நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத மனைகளையும் பதிவு செய்து விதிகள் மீறப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. காட்டுமன்னார்கோவில், சிதம்பரம், வளவனூர், கடலூர் ஜே 1, ஜே 2, செஞ்சி, வானூர், மரக்காணம் ஆகிய  ஊர்களில் நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத மனைகளை கடலூர் மண்டலத்தில் உயர் அதிகாரியின்  துணையுடன் பதிவு செய்யப்பட்டுள்ளதாக  ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ள புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டிலேயே கடலூர் பதிவு மண்டலத்தில் மட்டும் தான் அதிகமாக  லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு நடந்து வருகிறது. அதற்கு காரணம் உயர் அதிகாரிகள் தங்கள் கீழுள்ள அதிகாரிகளை பயன்படுத்திக் கொண்டு ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்டுவருவதாகவும், இவர்களுக்கு சென்னை தலைமை பத்திரப்பதிவு துறை கூடுதல் பதிவாளரும், பத்திரப்பதிவுத்துறை அமைச்சரும் துணை போவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்த திடுக்கிடும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக கடலூர் அனைத்து பொது நல இயக்கங்களின் கூட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள், தமிழக ஆளுநர், தலைமை செயலாளர், அரசு முதன்மை செயலாளர்,  பத்திரப்பதிவுத்துறை இயக்குநர், ஊழல் கண்காணிப்புத்துறை இயக்குநர் ஆகியோருக்கு மனுக்கள் அனுப்பியுள்ளனர்.

‘சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும்’

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் சேகர் கூறுகையில், கடலூர் மண்டல பத்திரப்பதிவு துறையில் நடந்த முறைகேடுகளால் அரசுக்கு கோடிக்கணக்கில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதை உரிய ஆதாரங்களுடன்  சென்னை ஆலந்தூரில் ஊழல் கண்காணிப்புத்துறை இயக்குநர் அலுவலகத்தில் கடந்த ஜூலை மாதம் 20ம் தேதி மனு அளித்தேன். அந்த மனுமீது நடவடிக்கை எடுத்து இப்புகார்கள் குறித்து  பத்திரப்பதிவுத்துறையின் இயக்குநர் விசாரணை நடத்த வேண்டுமென ஜூலை 30ம் தேதி ஊழல் கண்காணிப்பு அலுவலகம் உத்தரவு பிறப்பித்துள்ளது

.இந்த மெகா ஊழலில் பத்திரப்பதிவுத்துறையின் தலை முதல் அதிகாரிகள் வரை சிலந்தி வலை பின்னலென ஊழல் வலை விரித்து கூட்டாக செயல்பட்டுள்ள நிலையில், அவர்களே அவர்கள் மீதான புகாரினை விசாரிப்பது பொறுத்தமாக இருக்காது. எனவே சிபிஐ புலனாய்வு அமைப்பு விசாரிக்க வேண்டும். அப்போதுதான் உண்மை நிலை வெளிக்கொணரப்படும் என்றார்.

‘அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்’

அனைத்து பொதுநல இயக்க கூட்டமைப்பு தலைமை ஒருங்கிணைப்பாளர் வெண்புறாகுமார் கூறுகையில், பத்திரப்பதிவுத்துறை முறைகேடுகள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளன. அரசுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை தடுக்கவும், அரசு ஆணையை மீறுபவர்கள் மீதும், மாமூல் வேட்டை நடத்துபவர்கள் மீதும்   உரிய நடவடிக்கை எடுத்து கடலூர் மண்டல பத்திரப்பதிவுத்துறையை காப்பாற்றிட தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றார்.

Tags : revenue ,government,Cuddalore registration office,registration office,Irregularities
× RELATED திருப்பரங்குன்றத்தில் பங்குனி பெருவிழா தேரோட்டம் கோலாகலம்