×

நாட்டின் பேச்சுரிமையை பறிக்க தேசத் துரோக தடுப்பு சட்டம் பயன்படுத்தப்படுகிறது: நீதிபதி தீபக் குப்தா அதிருப்தி

அஹ்மதாபாத்: அண்மை காலங்களில் நாட்டின் பேச்சுரிமையை பறிப்பதற்கு தேசத் துரோக தடுப்பு சட்டத்தை பயன்படுத்துவது அதிகரித்து வருவதாக உச்சநீதிமன்ற நீதிபதி தீபக் குப்தா அதிருப்தி தெரிவித்துள்ளார். குஜராத்தின் அஹ்மதாபாத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் தேசத் துரோக தடுப்பு சட்டம் மற்றும் பேச்சுரிமை குறித்து உச்சநீதிமன்ற நீதிபதி தீபக் குப்தா உரையாற்றினார். அப்போது பேசிய அவர் அதிக இடங்களில் வெற்றி பெறுபவர் ஆட்சி அமைக்கும் முறையின் கீழ் பெரும்பான்மையின் கருத்து சட்டம் ஆகிவிட முடியாது என்றும் சிறுபான்மைக்கும் கருத்து தெரிவிக்கும் உரிமை இருக்கிறது என்று அவர் கூறினார்.

மாற்று கருத்து தெரிவிப்போரை தேச விரோதிகள் என்றும் குறிப்பிடும் போக்கு அதிகரித்து வருவதாக நீதிபதி கவலை தெரிவித்தார். சமூக வலைத்தளங்களில் மாற்று கருத்து தெரிவிப்போர்களை கேலி செய்து வரும் போக்கு அதிகரித்து வருவதால் மக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க அச்சப்படுவதாக அவர் குறிப்பிட்டார். மாற்று கருத்து தெரிவிக்கும் உரிமை அரசியல் அமைப்பு சட்டத்தில் இடம் பெற்றுள்ள மிக முக்கிய உரிமை என்று குறிப்பிட்ட நீதிபதி, ஒருநபர் சட்டத்தை மீறாமல் வன்முறையை தூண்டாமல் மாற்று கருத்து தெரிவிக்கவும் அதை பரப்பவும் அனைத்து உரிமையும் இருப்பதாக அவர் கூறினார். தேச துரோக சட்டங்கள் வெளிநாட்டினர் ஆட்சியின்போது அறிமுகப்படுத்த பட்டத்தை நினைவு கூர்ந்த குப்தா, அந்த ஆட்சியாளர்கள் கருத்து சுதந்தரத்தை பறிப்பதற்காகவே இந்த சட்டங்களை கொண்டு வந்ததாக அவர் கூறினார்.

அரசியல் தலைவர்களை விமர்ச்சிப்பது அவதூறு ஆகுமே தவிர தேச துரோகம் ஆகாது என்று அவர் கூறினார். நாட்டின் சட்ட ஒழுங்கை பாதுகாக்க போதிய காவலர்கள் இல்லை என்று குறை கூறும் காவல்த்துறையினருக்கு தேச துரோக வழக்குகளை பதிவு செய்ததற்கு போதிய ஆட்கள் இருப்பதாக அவர் தெரிவித்தார். நீதித்துறையும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டது இல்லை என்று கூறிய நீதிபதி, விமர்சனங்கள் நீதித்துறை மீதும் சிறப்பாக செயல்பட உதவும் என்றும் அவர் கூறினார்.


Tags : Deepak Gupta , Justice Deepak Gupta, dissatisfaction , anti-treason law
× RELATED போக்சோ சட்டத்தில் கைதான அதிமுக நிர்வாகி நீக்கம்: ஓபிஎஸ், இபிஎஸ் அறிவிப்பு