×

மாவட்ட தலைநகராக இருந்தும் பயனில்லை பாடாய்படுத்துது பாதாள சாக்கடை திட்டம்

* சிவகங்கை பகுதி மக்கள் கடும் அவதி
* நகராட்சியை கண்டித்து போராட முடிவு

சிவகங்கை : சிவகங்கை நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் கடந்த 12 ஆண்டுகளாக முடிவடையாமல் இழுபறியில் உள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிடைந்து வருகின்றனர். சிவகங்கை நகருக்கு வரலாற்று பெருமை உள்ளது. மாவட்ட தலைநகராக இருந்தும் இங்கு இதுவரை பாதாள சாக்கடை திட்டம் இழுபறியாகவே உள்ளது. இந்நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன. சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். ரூ.23.5 கோடியில் பாதாள சாக்கடை திட்டத்திற்கான பணிகள், தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சி திட்டத்தின் கீழ் கடந்த 2007 மார்ச்சில் தொடங்கப்பட்டன.

நகராட்சியில் குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் இப்பணிகள் செய்யப்பட்டு வந்தது. கழிவுநீர் வெளியேற்றும் கட்டமைப்பு பணிகள், ஆள் நுழைவு தொட்டிகள், கழிவுநீர் போக்கு குழாய்கள், வீட்டு இணைப்புக்கான குழாய் அமைக்கும் பணிகள், கழிவுநீரேற்று நிலையம் உள்ளிட்ட 90 சதவீத பணிகள் முடிக்கப்பட்டன.

சுத்திகரிப்பு நிலையமும் இழுபறி:

ஒப்பந்தப்படி 2009ல் பணி முடிந்திருக்க வேண்டும். ஆனால் மூன்றாம் கட்ட பணியான கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பது, சுத்திகரிப்பு செய்யப்பட்ட நீரை பயன்படுத்துவது உள்ளிட்டவைகளுக்கான பணி முடிவடைவதில் தொய்வு ஏற்பட்டது. சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்காக இரண்டு இடங்கள் தேர்வு செய்யப்பட்டு செயல்படுத்த முடியாமல் தடைபட்டது. மீண்டும் 2011ல் சிவகங்கை அருகே அரசணி கிராமத்தில் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டன. இதற்கு எதிர்ப்பு எழுந்ததால் மீண்டும் திட்டத்தில் தொய்வு ஏற்பட்டது. சுத்திகரிப்பு நிலைய பிரச்னை கடந்த 2015ம் ஆண்டு முடிவுக்கு வந்து பணிகள் தொடங்கப்பட்டன. ஆனால் சுத்திகரிப்பு நிலைய பணிகளும் 4 ஆண்டுகளாக முடிவடையவில்லை.

மாவட்ட நிர்வாகம் அலட்சியம்:

12 ஆண்டுகளாகியும் திட்டம் இழுபறியில் உள்ளதால் பல இடங்களில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் நிலை ஏற்பட்டுள்ளது. நகரின் பல இடங்களில் கழிவுநீர் குழாய் இணைக்கப்படாமலேயே சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அவைகள் மீண்டும் தோண்டப்பட்டு சேதமடையும் நிலை ஏற்பட்டுள்ளது. சுத்திகரிப்பு நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்த பின்னரே பணிகளை தொடங்கியிருக்க வேண்டும். பல நகரங்களில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு சுத்திகரிப்பு செய்த நீர் மரங்கள் மற்றும் விவசாயத்திற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் சிவகங்கையில் மாவட்ட நிர்வாகத்தின் அலட்சியத்தால் அரசு சார்ந்த துறைகளே இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கால தாமதப்படுத்தின.

நகரில் தேங்கும் கழிவுநீர்:

மழை பெய்யும் நேரங்களில் நகரில் பல இடங்களில் பாதாள சாக்கடை தொட்டியில் இருந்து கழிவுநீர் பெருக்கெடுத்து சாலைகளில் ஓடுகிறது. இதனால் சாலைகள் குண்டும், குழியுமாய் காணப்படுகிறது. ஏற்கனவே கழிவுநீர் செல்லும் வகையில் உள்ள கால்வாய்கள் அனைத்து இடங்களிலும் இருந்தன. சில இடங்களில் 10 அடி அகலம் வரையில் இருந்த இக்கால்வாய்கள் அருகிலுள்ள தனியாரின் ஆக்கிரமிப்புகளால் தற்போது மிகச்சிறிய அளவிலான கால்வாய்களாக காட்சியளிக்கின்றன. பல இடங்களில் கால்வாய்களே இல்லாத நிலையும் ஏற்பட்டுள்ளது. கழிவுநீர், மழை நீர் சென்று வந்த கால்வாய்கள் அனைத்தும் ஆக்கிரமிப்பு மற்றும் அடைபட்டு போயுள்ளதால் நகர் முழுவதும் பல இடங்களில் கழிவு நீர் செல்ல வழியில்லாமல் தேங்கி நிற்கிறது.

தெப்பக்குளம் அருகில், பஸ் ஸ்டாண்ட் பின்புறம், ஆவரங்காடு பகுதி, உழவர் சந்தை பின்புறம், சி.பி.காலனி, நேருபஜார் பகுதி, 15வது வார்டு பகுதியில் பலமாதங்களாக கழிவு நீர் செல்ல வழியின்றி உள்ளன. இதுபோல் குப்பைகள் அள்ளப்படாமல் தாமதம் செய்வதால் அவைகள் கால்வாய்க்குள் கிடக்கின்றன. இக்கால்வாயில் அள்ளப்படாத குப்பைகள் மற்றும் பாலித்தீன் பைகளும் தேங்கியிருப்பதால் கழிவுநீர் முற்றிலும் செல்ல முடியாத நிலையில் துர்நாற்றம் வீசுகிறது. கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் நிலையும் உள்ளது. கழிவுநீர் கால்வாய்களை சுத்தம் செய்ய எந்த நடவடிக்கையும் இல்லை.

நகராட்சி 1வது வார்டு பகுதியான சி.பி காலனி பகுதியில் பாதாள சாக்கடைக்காக கட்டப்பட்ட கால்வாய் பணிகள் முடிவடையாமல் கழிவு நீர் செல்ல வழியின்றி சாலை ஓரத்திலேயே தேங்கி நிற்கிறது. கழிவு நீர் தேங்கி நிற்கும் பள்ளத்தில் தான் குடிநீர் குழாய் இணைப்பும் உள்ளது. குடிநீரில் கழிவு நீர் கலப்பதாலும், மழைக்காலங்களில் சாலையோரத்தில் தேங்கும் கழிவுநீராலும் மர்ம காய்ச்சல் ஏற்பட்டு இப்பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவது ஆண்டுதோறும் வழக்கமாகிவிட்டது.

மயானத்தில் கழிவுகள்:

கலெக்டர் அலுவலகத்தின் எதிரே உள்ள மயானம்தான் நகரின் பெரும்பாலான மக்களுக்கானது. மயானத்தின் முன்புறம் சிவகங்கை நகரில் அள்ளப்படும் செப்டிக் டேங்க் கழிவுகள் கொட்டப்படுகிறது. மழை நேரத்தில் இந்த கழிவுகள் அனைத்தும் மழை நீரோடு சி.பி காலனிக்குள் செல்கிறது. கழிவு நீர் வெளியேற வழியின்றி சாலையோரத்திலேயே கிடப்பதால் மழை பெய்யும் நாட்களில் நீர் அதிகரித்து வீடுகளுக்குள் செல்கிறது. இது குறித்து இப்பகுதி மக்கள் பல முறை வலியுறுத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதுபோல் நகரின் பல்வேறு பகுதிகளில் பாதாள சாக்கடை திட்ட குளறுபடியால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே, நகரில் விரைந்து பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வீட்டு உரிமையாளர்களிடம் வசூல் திமுக நகர் செயலாளர் துரை ஆனந்த் கூறியதாவது:

பாதாள சாக்கடை திட்ட குளறுபடியால் கழிவுநீர் செல்ல வழியில்லாத நிலையில் லேசான மழை பெய்தாலே சாலைகளில் மழை நீரோடு, கழிவு நீரும் சேர்ந்து செல்கிறது. நகர்ப்பகுதியில் பல்வேறு இடங்களில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் கடும் சுகாதாரக்கேடு நிலவி வருகிறது. பாதாள சாக்கடை திட்டத்தில் தொடர்ந்து ஏற்படும் தாமதத்தால் இத்திட்டத்தின் நிலையே கேள்விக்குறியாகியுள்ளது. திட்டத்தை விரைந்து முடிப்பது குறித்து உறுதியான முடிவெடுத்து செயல்படுத்த வேண்டும். பல ஆண்டுகளாக இழுபறியில் உள்ள இத்திட்டத்தால் டெபாசிட் கட்டியும், வீட்டு கழிவு நீர் குழாய்களை பாதாள சாக்கடையில் இணைக்க முடியாமல் ஆண்டுக்கணக்கில் காத்திருக்கும் அவதி ஏற்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் வீடுகளுக்கான குழாய் இணைப்பு கொடுக்கப்பட்டு வருகிறது. இப்பணியை தனியார் செய்து வருகின்றனர். இவர்கள் தங்கள் விருப்பத்திற்கு வீட்டின் உரிமையாளர்களிடம் பணம் வசூல் செய்கின்றனர். இதனால் வீட்டின் உரிமையாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். பணம் வசூல் செய்வது குறித்து விசாரிக்க வேண்டும். ஏற்கனவே கட்டணம் செலுத்தியவர்களிடம் வசூல் செய்யக்கூடாது. பாதாள சாக்கடை பணிகளை விரைவில் முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

விரைவில் செயல்பாட்டுக்கு வரும்

சிவகங்கை நகராட்சி கமிஷனர் அயூப்கான் கூறியதாவது, ‘‘பாதாள சாக்கடை பணிகள் ஏற்கனவே பல முறை பல்வேறு பிரச்னைகளால் தாமதப்பட்டு தற்போது விரைந்து பணிகள் நடந்து வருகிறது. சுத்திகரிப்பு நிலையத்திற்கான பெரும்பாலான பணிகள் முடிவடைந்து விட்டன. வீட்டு குழாய் இணைப்பு பணிகள் தற்போது நடந்து வருகின்றன. அவையும் சில மாதத்தில் முடிவடைந்து விடும். இதனால் விரைவிலேயே பாதாள சாக்கடை திட்டம் செயல்பாட்டுக்கு வந்துவிடும்’’ என்றார்.

Tags : district ,capital , Sivagangai ,Under Ground Drainage System , sewage Project
× RELATED திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே...