×

ஒருபுறம் கடின உழைப்பாளிகள்... மறுபுறம் கொள்ளை கும்பல்... அதிகரிக்கும் வட மாநிலத்தவர்கள் எண்ணிக்கை

*2021ல் கோடியை தாண்டும்!

* தொடரும் குற்ற செயல்களால் மக்கள் அச்சம்
* கட்டுப்பாடுகள் விதிக்குமா அரசு?


சேலம்: “வந்தாரை வாழ வைக்கும் தமிழகம்’’ என்பது வாதத்திற்கு பேசும் வார்த்தை அல்ல. நூற்றுக்கு நூறு உண்மையும் கூட. சினிமாவில் மட்டுமல்ல, கட்டுமானம், ஜவுளி ஆலைகள், ஆயில் தொழிற்சாலைகள் உள்ளிட்ட அனைத்து தொழில்களிலும் வட மாநிலத்தவர்களை நாம் அரவணைத்துக் கொள்கிறோம். வட மாநிலங்களில் நிலவும் வறட்சி மற்றும் தொழில் இன்மையால், சமீபகாலமாக தமிழகத்திற்கு அங்கிருந்து வருவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

 ஒடிஷா, ஜார்கண்ட், அசாம், பீகார், குஜராத், ராஜஸ்தான், உத்தரபிரதேசம், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள், தமிழகத்தை நோக்கி படையெடுத்து வருகிறார்கள் என்றால் அதை யாராலும் மறுக்க முடியாது. தமிழகத்தில் ஏப்ரல், மே மாதங்களில் தண்ணீர் தட்டுப்பாடு இருக்கிறது என்றால், வட மாநிலங்களில் ஆண்டு முழுவதும் வறட்சியாக இருப்பதுவும் அவர்கள் இடம் பெயருவதற்கு முக்கிய காரணமாக அமைகிறது. அம்மாநிலத்தில் வேலையே கிடையாது. கிடைக்கும் வேலைக்கு மிக குறைவாகவே சம்பளம் கொடுக்கின்றனர்.


alignment=



 இதனால், தென் மாநிலங்களை நோக்கி வட மாநில இளைஞர்கள், வேலைக்காக வருகின்றனர். தமிழகத்தில் பிற மாநிலங்களை விட நல்ல சம்பளம் வழங்கப்படுகிறது. அது, கட்டுமான தொழிலாக இருந்தாலும் சரி, டெக்ஸ்டைல்ஸ் தொழிலாக இருந்தாலும் சரி தினமும் ₹500க்கு குறைவில்லாமல் சம்பளம் பெறுகின்றனர். இதனால் தான், தமிழகத்திற்கு மிக அதிகபடியானோர் வேலைக்காக வருகிறோம் என்கின்றனர் .கடந்த 2001ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரியை அடக்கிய தென்னிந்தியாவில் வட மாநிலத்தவர்கள், 58.20 லட்சம் பேர் இருந்தனர். இதுவே 2011ம் ஆண்டு கணக்கெடுப்பில் 20 லட்சம் அதிகரித்து, 77.50 லட்சம் பேராக உயர்ந்தனர். வரும் 2021ம் ஆண்டு கணக்கெடுப்பு நடக்கும் போது, முன்பை விட சுமார் 30 லட்சம் வட மாநிலத்தவர்கள் அதிகரித்திருப்பார்கள் என உத்தேசமாக கணக்கிடப்பட்டுள்ளது.

ஒடிஷா, ஜார்க்கண்ட், மேற்கு வங்கத்தில் வேலையின்றி தவிக்கும் இளைஞர்கள், இங்கு கட்டுமான வேலைக்கு வந்தவுடன் தினமும் 12 முதல் 16 மணி நேரம் வரை உழைக்கிறார்கள். இதற்கு ₹1000 வரையில் கூலியும் பெறுகிறார்கள். கடுமையான உழைப்பாளியாக விளங்கும் இந்த வட மாநில தொழிலாளர்களை கட்டிட கான்டிராக்டர்கள் பாராட்டுகிறார்கள். உள்ளூர் தொழிலாளர்கள், 8 மணி நேரத்திற்கு மேல் வேலை பார்ப்பது கிடையாது. அதனால், 100க்கு 80 சதவீத கட்டுமான நிறுவனத்தினர் வட மாநில தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்திக் கொள்கின்றனர்.

இப்படி ஒருபுறம் நல்ல உழைப்பாளியாகவும், தங்களின் குடும்ப வறுமையை போக்க ஊர்விட்டு ஊர் வந்து பிழைப்பவர்களாகவும் வட மாநில தொழிலாளர்கள் இருக்கின்றனர். ஆனால், மறுபுறத்தில் இதே வட மாநிலத்தவர்கள், தென்னிந்தியாவில் கொள்ளை, கொலை உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டு மக்களை பீதியடைய செய்கிறார்கள். இத்தகைய குற்றங்களில் ஈடுபடும் நபர்களால் தான், அனைத்து வட மாநில தொழிலாளர்களையும் சந்தேகக் கண்ணோடு பார்க்க வேண்டியுள்ளது.

குறிப்பாக தமிழகத்தில் தொடர்ந்து, வங்கி கொள்ளை, ஏடிஎம் கொள்ளை, ரயில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதிலும், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, கோவை, திருப்பூர், கரூர் உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களில் வட மாநிலத்தவர்களின் கொள்ளை சம்பவங்கள் அதிகளவு நடந்து வருகிறது. இதனால் மக்கள் அச்சத்தில் இருக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் தமிழகத்தில் ரயில்களில் பெண் பயணிகளிடம் நகை பறிக்கும் சம்பவங்களில் பீகார், உத்தரபிரதேசம், மகராஷ்டிரா கொள்ளையர்கள் ஈடுபடுகின்றனர்.

அவர்களை சொந்த ஊர்களில் இருந்து பிடித்து வரும் போலீசார், சிறையில் அடைக்கின்றனர். ஆனால், அடுத்த ஓராண்டிற்குள் ஜாமீனில் வெளி வந்து, தலைமறைவாகி விடுகின்றனர். கிருஷ்ணகிரியில் வங்கி சுவரில் துளையிட்டு கொள்ளை, சேலம், தர்மபுரி, நாமக்கல் மாவட்டங்களில் ஏடிஎம் கொள்ளை மற்றும் சாலையில் நடந்து செல்லும் பெண்களிடம் நகை பறிப்பு போன்ற குற்றச் செயல்களிலும் வட மாநில கொள்ளையர்கள் ஈடுபட்டுள்ளனர். ஒரு கும்பலாக வந்து, 500 பவுன், 1000 பவுன் கொள்ளையடித்து விட்டு தப்புவதை வழக்கமான கொண்டுள்ளனர். விமானத்தில் பறந்து வந்து, நகை பறிப்பில் ஈடுபட்டு தப்பிச் சென்ற வட மாநில கொள்ளையனும் இருக்கின்றான்.


alignment=



இந்த கொள்ளையர்கள், தங்கள் பகுதியை சேர்ந்த கட்டுமான தொழிலாளர்களை உளவாளிகளாகவும் பயன்படுத்திக் கொள்கின்றனர். அதனால், வட மாநில தொழிலாளர்களிடமும் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டியுள்ளது. இதை தான், நம் காவல்துறையும் வலியுறுத்துகிறது. அதேவேளையில் அரசும் உரிய கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.


வட மாநிலங்களில்  தமிழர்களின் நிலை?

தமிழ்நாடு, கேரளாவை சேர்ந்தவர்கள், வட மாநிலங்களில் வேலை பார்க்கிறார்கள். ஆனால், அதன் எண்ணிக்கை சமீபகாலமாக வெகுவாக குறைந்து வருகிறது.



2001ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு படி வட மாநிலத்தில் தமிழர்கள் 8.20 லட்சம் பேர் இருந்தனர். இதுவே 2011ம் ஆண்டு கணக்கெடுப்பில் 7.80 லட்சமாக குறைந்தது. வரும் 2021ம் ஆண்டு கணக்கெடுப்பில் மேலும் குறைந்து 5 லட்சத்திற்குள்ளாக மாறும் நிலை ஏற்பட்டுள்ளது. காரணம், தமிழகத்தை சேர்ந்தவர்கள் அம்மாநிலங்களுக்கு வேலை தேடி சென்றால், இரண்டாம் தர மக்களாக நடத்தப்படுகிறார்கள். ஆனால், தமிழகத்தில்  சரி சமமாக நடத்துவதுடன்,பாதிக்கப்பட்டால் அவர்களுக்காக குரலும் கொடுக்கிறோம்.


பவாரியா கொள்ளை கும்பல்

உத்தரபிரதேசத்தை சேர்ந்த பவாரியா கும்பல், கொலை மற்றும் கொள்ளையில் ஈடுபட்டது தான், தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சி அலைகளை உண்டாக்கியது. கடந்த 10 ஆண்டுக்கு முன் காஞ்சிபுரத்தில் அதிமுக எம்எல்ஏ ஒருவரை வீடு புகுந்து கொலை  செய்ததுடன், நகை-பணத்தை கொள்ளையடித்து சென்றது.


அதில் ஈடுபட்ட ஆசாமிகளை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறினர். அதேபோல் சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் தாள முத்துநடராஜன் வீட்டிற்குள் நள்ளிரவில் துப்பாக்கியுடன் புகுந்த கொள்ளையர்கள், காவலாளியை கொலை செய்ததுடன், தாளமுத்துநடராஜனையும் துப்பாக்கியால் தாக்கி கொலை செய்து விட்டு, நகை, பணத்தை கொள்ளையடித்து தப்பி சென்றது. அதன்பிறகு விழித்துக்கொண்ட தமிழக அரசு, ஓய்வு பெற்ற டிஜிபி ஜாங்கிட் தலைமையில் தனிப்படை அமைத்து, பல மாதங்களாக உ.பி.,யில் முகாமிட்டு பவாரியா கொள்ளை கும்பலை கூண்டோடு பிடித்தனர். 2 பேர் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.


நிலையாக ஓரிடத்தில் இருப்பதில்லை

ஜவுளி உற்பத்தியாளர் மோகன்ராஜ் கூறுகையில், “கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்திற்கு வடமாநிலத்தவர் வேலைக்கு வந்தபோது, நமது தொழிலாளர்களுக்கு கொடுத்த சம்பளத்தில் பாதி கொடுத்தாலே போதும் என்ற நிலை இருந்தது. தற்போது, நமது ஆட்களுக்கு இணையான சம்பளம் கேட்கின்றனர்.


நமது ஆட்கள் ஒரு வேலையை செய்யும்போது, நேரத்தை விரயப்படுத்துவது, குறித்த நேரத்திற்குள் வேலையை முடிக்காமல் விடுவது, அதிக அட்வான்ஸ் தொகை கேட்பது உள்ளிட்ட காரணங்களால் வடமாநிலத்தவரை வைத்து வேலை செய்யவே உரிமையாளர்கள் விரும்புகின்றனர்.


இவர்கள் தங்குமிடம், அரிசி கொடுத்தால் மாதம் 30 நாளும் விடுமுறை இல்லாமல் வேலை செய்கின்றனர். கடந்த 2 வருடங்களுக்கு முன்பு, வேலைக்கு வரும் தொழிலாளர்களிடம் ஆதார் கார்டு வாங்கி கொண்டு வேலை கொடுத்து வந்தோம். ஆனால் விடுமுறைக்கு ஊருக்கு சென்றவர்கள், திரும்ப வரவில்லை. விசாரித்தபோது, ஆதார் அட்டையை கொடுத்து விட்டு வேலை செய்வதில் அவர்களுக்கு உடன்பாடு இல்லை என தெரிந்து கொண்டோம். இதனால்தான், நிலையாக ஓரிடத்தில் வேலை செய்யாமல், மாறிக்கொண்டே இருக்கின்றனர். ஜவுளி உற்பத்தி தொழில்களை பொறுத்தவரை சேலத்தில் 40 சதவீதம் வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்,’’ என்றார்.

கட்டுப்படுத்த என்ன வழி ?

தமிழகத்தில் கட்டுமான தொழிலில் வட மாநிலத்தவர்கள் அதிகரிப்பதை கட்டுப்படுத்த 2 வழிகள் உள்ளன. மகராஷ்டிரா, ஹரியானா மாநிலங்களில் உள்ளது போல், உள்மாநிலத்தவருக்கு 80 சதவீத பணி என்னும் (1979ம் ஆண்டு) புலம்பெயரும் தொழிலாளர்களுக்கான வரன்முறை சட்டத்தை கட்டாயமாக அமல்படுத்த வேண்டும். இதை செய்தால், பிற மாநிலத்தவர்கள் 20 சதவீதம் மட்டுமே கட்டுமான தொழிலில் வேலை பார்க்க முடியும். மற்றொன்று,தற்போது வேலை பார்க்கும் வட மாநில தொழிலாளர்களை முறைப்படுத்தி நல வாரியத்தில் பதிவு செய்ய வேண்டும்.


இந்த இரண்டையும் செய்ய அரசு முன்வந்தால், ஒரு வரன்முறைக்குள் வட மாநில தொழிலாளர்கள் வருவார்கள் என்கின்றனர் கட்டுமான தொழிற்சங்க நிர்வாகிகள்.


அதிகமாக வருவதேன்? இன்ஜினியர் பேட்டி

சேலம் சிவில் இன்ஜினியர்ஸ் சங்க நிர்வாகி பழனிவேல் கூறுகையில், ‘‘கடந்த 5 ஆண்டுகளில் வட மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வரும் கட்டுமான தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இவர்கள் பெரும்பாலும் தொழிற்சாலை, மேம்பாலம் கட்டுதல் உள்பட பெரிய அளவிலான கட்டுமான பணிகளில் ஈடுபடுகின்றனர். தமிழக கட்டுமான தொழிலாளர்களின் வேலை தான் தரமாக இருக்கும். ஆனால்,சமீபகாலமாக இவர்கள் வேலையில் சுணக்கம் காட்டி வருகின்றனர்.  வட மாநிலங்களைவிட இங்கு ஆண்டு முழுக்க வேலை கிடைப்பதாலும், அனைத்து வசதிகள் இருப்பதாலும் வட மாநிலத்தவர்கள் வருகை அதிகரிக்கிறது,’’ என்றார்.

இங்கு எப்படியோ... அப்படியே வெளிநாட்டில்...

“திரைகடலோடியும் திரவியம் தேடு’ என்ற பழமொழி உண்டு. இந்தியாவை சேர்ந்தவர்கள், வெளி நாட்டிற்கு செல்லாம். ஆனால் இந்தியாவில் உள்ள வட மாநிலத்தவர்கள், தமிழகத்திற்கு வரக்கூடாதா? என்ற கேள்வியும் எழாமல் இல்லை. வடமாநில தொழிலாளர்கள் எவ்வாறு குறைந்த ஊதியத்திற்கு சுரண்டப்படுகிறார்களோ?, அதேபோல வெளிநாடு சென்றுள்ள நமது சகோதரர்களின் உழைப்பும் சுரண்டப்படுகிறது. வளைகுடா நாடுகளில் சுமார் 85 லட்சத்திற்கும் மேலான இந்திய தொழிலாளர்கள் பணியாற்றி வருவதாக ஒரு ஆய்வு கூறுகிறது.

‘வெறும் கண்காணிப்பு மட்டுமே’ - காவல்துறை

வட மாநில தொழிலாளர்கள் எவ்வளவு பேர் ஒவ்வொரு நகரிலும், மாவட்டத்திலும் உள்ளனர் என்ற கணக்கெடுப்பு ஏதும் நடைமுறையில் இல்லை. ஆனால், அவர்களை தொடர்ந்து கண்காணிக்கும் பணியில் மட்டும் ஈடுபட்டுள்ளோம் என்கின்றனர் காவல்துறை உயர் அதிகாரிகள். கொள்ளை, திருட்டு சம்பவங்கள் நடப்பதை தடுக்கவும், சட்டம் ஒழுங்கை நிலை நாட்டவும், இத்தகைய கண்காணிப்பு பணியில் மட்டும் ஈடுபடுகிறோம் என்றனர்.

கேரள நகை கடையில்  3.5 கிலோ கொள்ளை

கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில் கடந்த ஜூலை 30ம் தேதி நகைக்கடையில் 3.5 கிலோ நகையை வட மாநில கொள்ளையர்கள் கொள்ளையடித்துக் கொண்டு காரில் தப்பினர். அந்த கொள்ளையர்களை சேலம் மாநகர போலீசார், உத்தமசோழபுரத்தில் மடக்கி பிடித்தனர். அதில், மகராஷ்டிரா மாநிலம் சாங்கிலி மாவட்டத்தை சேர்ந்த கணபதி ஜாதோ, பிரசாத் ஜாதோ, ஆகாஷ் காரத், காதா சாகிப் பிரபாகர் கெய்க்வாட் ஆகிய 4 பேரை கைது செய்து, கொள்ளையடிக்கப்பட்ட 3.5 கிலோ நகை, ₹13.10 லட்சம் பணத்தை மீட்டனர்.

சென்னையில் 5 பேர் என்கவுன்டர்

சென்னையில் கடந்த 2012ம் ஆண்டு பெருங்குடி பாங்க் ஆப் பரோடா வங்கியில் ₹19 லட்சமும், கீழ்கட்டளை ஐஓபி வங்கியில் ₹14 லட்சமும் வட மாநில கொள்ளையர்களால் கொள்ளையடிக்கப்பட்டது. இதனை விசாரித்த சென்னை போலீசார், வேளச்சேரியில் ஒரு வீட்டில் பதுங்கி இருந்த வட மாநில கொள்ளையர்களை சுற்றி வளைத்தனர். இருதரப்பிற்கும் துப்பாக்கி சண்டை நடந்ததில், கொள்ளையர்களான பீகார் மாநிலத்தை சேர்ந்த அபய்குமார், வினய்குமார், வினோத்குமார், ஹரீஸ்குமார், மேற்கு வங்கத்தை சேர்ந்த சார்க்கியாயோ ஆகிய 5 பேர் என்கவுண்டர் செய்யப்பட்டனர். இச்சம்பவத்திற்கு பின் வட மாநில கொள்ளையர்கள் நடமாட்டம் குறைந்தது. ஆனால், தற்போது அது மறைந்து, அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

சேலம் ரயில் கொள்ளையில் வட மாநிலத்தவர்கள் கைது

சேலத்தில் இருந்து 2016ம் ஆண்டு ஆகஸ்ட் 8ம் தேதி இரவு சென்னை எழும்பூருக்கு சென்ற எக்ஸ்பிரசில் ரிசர்வ் வங்கி பணம் ₹342 கோடி கொண்டுச் செல்லப்பட்டது. ஓடும் ரயிலில் மேற்கூரையில் துளையிட்டு ₹5.78 கோடி பணத்தை கொள்ளையடித்துச் சென்றுவிட்டனர். இவ்வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து, 2 ஆண்டுக்கு பின் 2018ல் மத்திய பிரதேசத்தை சேர்ந்த பார்த்தி இன கொள்ளை கும்பலான மோஹர்சிங், தினேஷ், ரோஹன் உள்ளிட்ட 7 பேரை கைது செய்தனர். இந்த வழக்கில் துப்பு துலக்குவதில், சிபிசிஐடி போலீசார் மிகவும் சிரமப்பட்டனர்.


எந்த தொழிலில் அதிகம்

சேலம், திருப்பூர், கோவை, ஈரோடு, திண்டுக்கல், கரூர் மாவட்டங்களில் உள்ள நூற்பாலைகள், ஆயத்தஆடை தொழிற்சாலைகளில் வட மாநில தொழிலாளர்கள் அதிகளவில் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் பெண் தொழிலாளர்கள் அதிகளவில் இருக்கின்றனர். அதேபோல், கட்டுமானம், கல்குவாரிகள், ஜவுளியின் உப தொழில்களான தறிப்பட்டறைகள், வாஷிங் பட்டறைகள், சாயப்பட்டறைகள்,  கார்மென்ட்ஸ் உள்ளிட்ட தொழில்களிலும் ஏராளமான வடமாநில தொழிலாளர்கள்  ஈடுபட்டுள்ளனர். 3 வேளை சாப்பாடு, உரிய சம்பளம் கொடுத்தால், கடுமையாக உழைக்கின்றனர்.

Tags : robbery ,Northerners , Salem,North Indians,Population increases
× RELATED சென்னை தாம்பரம் அருகே படப்பை பஜாரில்...