×

திருமங்கலம் பகுதியில் உணவு, நீர் தேடி வந்து உயிரை விடும் மான்கள்

*கடந்த வாரத்தில் 15 மான்கள் பலி

திருமங்கலம் :  திருமங்கலம் பகுதியில் உணவு, தண்ணீர் தேடி ஊருக்குள் வரும் மான்களின் இறப்பை தடுக்க உடனே வனச்சரக பணிகளை துவங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.மான்களில் புள்ளிமான், கவுரிமான், சாம்பார் மான், கடா என பல வகைகள் உள்ளன. ஆண் மான்களுக்கு மட்டுமே சிறிய சிறிய கிளையுடன் கொம்பு இருக்கும். பெண் மான்களுக்கு கொம்புகள் இருப்பதில்லை. இவைகள் அடர்ந்த வனம் மற்றும் காட்டுப்பகுதியில் கூட்டம் கூட்டமாக வசிக்கக்கூடியவை. கொம்பு, தோல், இறைச்சி போன்றவற்றிற்காக மான்கள் வேட்டையாடப்பட்டு வருகின்றன. தவிர மான் கொம்பு தற்காப்பு கலைக்கு பயன்படுத்தப்படுகிறது.

மேலும் தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் சமூகவிரோத கும்பல் துப்பாக்கியுடன் வனத்திற்குள் புகுந்து மான்களை வேட்டையாடி வருகிறது. இது ஒருபுறமிருக்க, வனப்பகுதியில் நிலவும் வறட்சியால் உணவு, தண்ணீர் தேடி ஊருக்குள் வரும்போது நாய், மனிதர்களால் வேட்டையாடப்பட்டு வருவது தொடர்கிறது. மதுரை மாவட்டம், திருமங்கலம் பகுதியில் சிவரக்கோட்டை, நேசநேரி, ராயபாளையம், மீனாட்சிபுரம், எஸ்பி நத்தம், காமாட்சிபுரம், கரிசல்களாம்பட்டி, கள்ளிக்குடி கண்மாய் மற்றும் காட்டுப்பகுதியில் மான், காட்டுபன்றி, மயில்கள் போன்றவைகள் அதிகமான உள்ளன. மான்கள் 20 முதல் 30 வரை கூட்டம் கூட்டமாக உணவு, தண்ணீர் தேடி வருவது வழக்கம்.

தனியாக வரும்போது அவை நாய்களுக்கு இரையாகி வருகின்றன. திருமங்கலம் அடுத்த கட்ராம்பட்டியில் கடந்த 2ம் தேதி தண்ணீர் தேடி வந்த பெண் புள்ளிமான் நாய்கள் கடித்ததில் இறந்தது. இதுபோல் கடந்த 2 வாரத்தில் 15க்கும் மேற்பட்ட மான்கள், நாய்களிடம் சிக்கி இறந்துள்ளது வனவிலங்கு ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வனவிலங்கு ஆர்வலர்கள் கூறுகையில், ‘‘நீர்நிலைகள், வனப்பகுதி ஆக்கிரமிக்கப்பட்டு வருவதாலே மான்கள் ஊருக்குள் வந்து இறக்கின்றன. இதனை தடுக்க நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பை அகற்றி தண்ணீரை சேமிக்க வேண்டும்.

வனத்துறையினர் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தோம். இதை ஏற்று திருமங்கலத்தை தலைமையிடமாக கொண்டு வனச்சரகம் அமைக்க மாவட்ட நிர்வாகத்திற்கு ஆர்டிஓ பரிந்துரை செய்துள்ளார். இதனை காலம் தாழ்த்தாமல் உடனடியாக துவக்கி மான்களை பாதுகாக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்’’ என்றனர்.


Tags : Thirumangalam , Deers ,thirumangalam ,food ,water
× RELATED மேலூர் பகுதியில் நாய்கள் கடித்து குதறியதால் 2 புள்ளி மான்கள் பலி