×

தொடர் முகூர்த்தம், வரத்து குறைவு எதிரொலி செவ்வாழை ‘செம ரேட்’ தார் ரூ.1,000ஐ தாண்டியது

*விவசாயிகள் மகிழ்ச்சி

வத்தலக்குண்டு :  தொடர் முகூர்த்தம் மற்றும் வரத்து குறைவு எதிரொலியாக வத்தலக்குண்டு வாழைக்காய் மார்க்கெட்டில் செவ்வாழை தாரின் விலை ரூ.1,000ஐ தாண்டியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டுவில் உள்ள வாழைக்காய் மார்க்கெட்டிற்கு சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து வாழைத்தார்கள் விற்பனைக்கு வருகின்றன. குறிப்பாக செவ்வாழை, பூவன், ரஸ்தாளி, நாட்டுப்பழம் உள்ளிட்ட வாழைத்தார்கள் அதிகளவில் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.

திண்டுக்கல், தேனி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான வியாபாரிகள், இங்கு வந்து வாழைத்தார்களை வாங்கி செல்கின்றனர். கடந்த சில நாட்களாக வரத்து குறைவாலும், முகூர்த்த தினங்கள் எதிரொலியாகவும் வாழைத்தார்களின் விலை கடுமையாக உயர்ந்து விற்பனையாகிறது. நேற்று மார்க்கெட்டில் ஒரு செவ்வாழை தாரின் விலை ரூ.ஆயிரத்தை தாண்டி விற்பனையானது. ரஸ்தாலி வாழைத்தார் ரூ.800க்கு விலைபோனது. ஒட்டு நாட்டுப்பழ வாழைத்தார் ரூ.400க்கும், கற்பூரவள்ளி ரூ.800க்கும் விற்பனையானது.

இந்த விலை நிலவரம் தொடர்ந்து 2 மாதங்களுக்கு நீடிக்கும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர். வாழைத்தார்களின் திடீர் விலை ஏற்றத்தால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். வாழை விவசாயி இளங்கோவன் கூறுகையில், ‘‘வறட்சியான சூழ்நிலையில் வாழையை காப்பாற்ற லாரி தண்ணீரை விலைக்கு வாங்கி செலவு செய்துள்ளோம். கணக்கு பார்த்தால் பெரிய அளவில் வாழை விவசாயிகள் லாபம் அடைந்திருக்க முடியாது. எனவே அரசு நெல்லுக்கு நிர்ணயம் செய்வது போல், வாழைக்கும் விலை நிர்ணயம் செய்ய வேண்டும்’’ என்றார்.

Tags : Series counterpart , Good rate,Red Bananas,Festival days
× RELATED கார், வேன் மோதி தீப்பிடித்து எரிந்தது