திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோயிலில் கடற்பாறைகள், மரங்களில் கண்கவர் கலைமிகு சிற்பங்கள்

மதுரை :  திருப்புல்லாணி ஆதிஜெகநாதப் பெருமாள் கோயிலில் கடற்பாறைகளிலும், மரங்களிலும் கலைமிகு சிற்பங்கள் வடிக்கப்பட்டிருப்பது பழமைக்கு பெருமை சேர்க்கிறது. ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவன தலைவர் வே.ராஜகுரு கூறியதாவது: திருப்புல்லாணி ஆதிஜெகநாதப் பெருமாள் கோயிலானது, பாண்டிய நாட்டில் உள்ள 18 திவ்ய தேசங்களில் தொன்மை வாய்ந்தது. இவ்வூரில் தவமிருந்த புல்லவர், கண்ணுவர், காலவர் என்ற மூன்று முனிவர்களுக்காக திருமால் அரசமரமாக இங்கு காட்சியளித்தார். அவரே ஆதிஜெகநாதப் பெருமாளாக பக்தர்களுக்கு இங்கு அருள் பாலிக்கிறார். சீதையை மீட்க ராமபிரான் இலங்கைக்குச் செல்லும் வழியில், இத்தலத்தில் உள்ள பெருமாளை வணங்கி, ராவணனை வதம் செய்ய அவரால் கொடுக்கப்பட்ட ‘கோதண்டம்’ என்ற வில்லைப் பெற்றதாகக் கூறப்படுகிறது.

பின்பு கடலைக் கடக்க வழி சொல்லவேண்டும் என்று கடலரசனான வருணனை வேண்டி, 7 நாட்கள் நாணல் புல்லை தலையணையாகக் கொண்டு படுத்து உறங்கியதால், இவ்வூருக்கு ‘திருப்புல்லணை’,  ‘தர்ப்பசயனம்’ பெயர்களுண்டு. திருமால், இங்கு ஆதிஜெகந்நாதப் பெருமாளாக அமர்ந்த கோலத்திலும், பட்டாபிஷேக ராமராக நின்ற கோலத்திலும், தர்ப்பசயன  ராமராக கிடந்த கோலத்திலும் காட்சி தருகிறார். இங்கு சிற்பங்கள் உள்ள தூண்கள் வரியோடிய உறுதியான கடற்கரைப் பாறைகளைக் கொண்டு செய்யப்பட்டுள்ளன. ஆலய நுழைவாயிலின் இருபக்கமும் உள்ள தூண்களில் பெரிய யாளிகள், ராமர், லட்சுமணர் சிற்பங்கள் உள்ளன. ராமர், லட்சுமணரின் கால் விரல் நகம் கூட மிக நுட்பமாக செதுக்கப்பட்டுள்ளது. விஜயநகர, நாயக்க மன்னர்கள் காலத்தில் இது அமைக்கப்பட்டிருக்கிறது.

பட்டாபிஷேக ராமர் சன்னதி கொடிமரம் அருகில் உள்ள தூணில், குதிரையில் வாளை ஏந்திய நிலையில் செல்லும் பெண், ஆதிஜெகநாதப் பெருமாள் சன்னதி கருவறையின் நுழைவு வாயிலில் உள்ள இருதூண்களில் ஒன்றில் யானைமேல் அமர்ந்த நிலையில் ஆணும், மற்றொன்றில் பெண்ணும் உள்ளனர். இவர்கள்  விஜயநகர, நாயக்க மன்னர் மற்றும் ராணிகளாக இருக்கலாம். பட்டாபிஷேக ராமர் சன்னதி நுழைவாயில் தூணின் பின்புறம், வலதுகாலைத் தூக்கி தவம் செய்யும்  முனிவர் சிற்பம் உள்ளது. இது மாமல்லபுரம் அர்ச்சுனன் தபசு காட்சி போல உள்ளது. அவர் காலின் கீழ் வராகம் (பன்றி) உள்ளது. வராகம் விஜயநகர மன்னர்களின் சின்னமாகும்.

மரச்சிற்பங்கள்:

இக்கோயில் ராஜகோபுரம் ஐந்து தளங்களுடன் அமைக்கப்பட்டுள்ளன. முதல் தளத்தில் தேக்கு மரங்களில் ஆன மரச்சிற்பங்கள் அதிகளவில் உள்ளன. ஏனைய தளங்களில் ஓரிரு சிற்பங்களே காணப்படுகின்றன. முதல் தளத்தில் புல்லாகிய பாம்பு படுக்கையில் கிடந்த நிலையில் இருக்கும் ராமரின் வலதுபுறம், ராவனணின் தம்பி விபீடணன் கைகூப்பிச் சரணடைந்த நிலையில் இருக்க, அவரின் இடதுபுறம் வருணபகவான் தன் மனைவியுடன் கைகூப்பிச் சரணடையும் காட்சி இருக்கிறது.

அரச மரத்தடியில் அமர்ந்திருக்கும் ஆதிஜெகநாதப் பெருமாளை ராமபிரான் வணங்கி இராவண வதம் செய்ய அவரால் கொடுக்கப்பட்ட ‘கோதண்டம்’ வில்லைப் பெறும் காட்சி உள்ளது. இவையிரண்டும் கோயில் தல வரலாற்றை வெளிப்படுத்தும் விதத்தில் உள்ளன. கி.பி.1646 முதல் கி.பி.1676 வரை போகலூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட திருமலை ரெகுநாத சேதுபதி, திருப்புல்லாணி கோயிலில் உள்ள காங்கேயம் மண்டபம், நுழைவுவாயில் கோபுரம், கண்ணாடி மண்டபம், தாயார் சந்நிதி, பெருமாள் சந்நிதி, ஆண்டாள் சந்நிதி, திருச்சுற்று மதில்கள், ராஜகோபுரம், சக்கரத்தீர்த்தம், மடைப்பள்ளி ஆகிய கட்டுமானங்களைச் செய்தார் என தளசிங்கமாலை என்ற நூல் கூறுகிறது.

அதாவது பட்டாபிஷேக ராமர் ஆலயம் தவிர்த்து ஏற்கனவே இருந்த கோயிலின் பிற பகுதிகள் திருமலை ரெகுநாத சேதுபதியால் புனரமைக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. எனவே இந்த மரச் சிற்பங்கள் திருமலை ரெகுநாத சேதுபதி காலத்தைச் சேர்ந்ததாகக் கருதலாம். 350  ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த இந்த மரச் சிற்பங்கள் சேதுபதி மன்னர்கள் கால சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளன. தமிழகத்தில் மரத்திலான சிற்பங்கள் மிகச் சில கோயில்களில் மட்டுமே காணப்படுகிறது. அவற்றில் இக்கோயில் முக்கியத்துவம் பெறுகிறது.  இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Tags : Thiruppulani Adigeganatha Perumal Temple , thirupullani ,Perumal Temple,artistic sculptures
× RELATED சிற்பங்கள் உடைந்தும் கண்டுகொள்ளாத...