×

வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி பேரீட்சை சாகுபடியில் அசத்தும் லாரி டிரைவர்

நாமக்கல் : நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த விவசாயி பேரீட்சை பழம் சாகுபடி செய்து லாபம் ஈட்டி வருகிறார். வாழ்நாள் முழுவதும் பலன் தரக்கூடிய பயிர் என்பதால் இதன் பரப்பளவை அதிகப்படுத்தவும் உத்தேசித்து வருகிறார்.நாமக்கல் மாவட்டம் ராயர்பாளையத்தை சேர்ந்தவர் கணேசன். இவருக்கு சொந்தமாக ராயர்பாளையத்தில் 8 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்தில் பேரீட்சை பழம் விவசாயம் செய்து வருகிறார். ரிக் உரிமையாளராகவும் அதன் ஓட்டுனராகவும் உள்ளார்.

நாமக்கல் மாவட்டத்தில் நெல், வாழை, கரும்பு, வெற்றிலையும், மரவள்ளி கிழங்கு கொல்லிமலையில் மா, பலா, அன்னாசி மற்றும் மூலிகைகளும் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதிலிருந்து தனித்து நிற்க வேண்டும் என்று எண்ணிய கணேசன், ரிக் வண்டியில் ஓட்டுனராக குஜராத், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கு போர்வெல் அமைக்க அவ்வப்போது  செல்வார். அப்போது பாலைவனத்தில் விளைந்திருந்த பேரீட்சை பழத்தை பார்த்து நமது ஊரிலும் பேரிட்சை விவசாயம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.

 பல்வேறு தேடலுக்கு பின், கடந்த 2010ம் ஆண்டு கலிபோர்னியா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் இருந்து பரி, ஹனி என்ற இரண்டு வகை பேரீட்சை கன்றுகளை இறக்குமதி செய்து நடவு செய்தார். நடவு செய்த 5 ஆண்டுகளுக்கு பின் பலன் தர ஆரம்பித்தது. 8 ஏக்கர் நிலத்தில் 400 பேரீட்சை கன்றுகளை நடவு செய்துள்ளார். இது வாழ்நாள் முழுவதும் பலன் தரக்கூடிய பயிராகும். ஒவ்வொரு ஆண்டு மார்ச் மாதம் பூ வைத்து 130 நாட்கள் கழித்து ஜூன், ஜூலையில் அறுவடைக்கு பேரீட்சை பழங்கள் தயாராகும். நன்கு வளர்ந்த ஒரு மரத்தில் இருந்து 120 கிலோ பேரீட்சை கிடைக்கும். தற்போது ஒரு கிலோ ₹300க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய பகுதிகளுக்கும் சிங்கப்பூர், மலேசியா மற்றும் ஸ்ரீலங்கா ஆகிய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து கணிசமாக லாபம் ஈட்டி வருகிறார். நன்கு வளர்ந்த மரத்தில் பேரீட்சை பழங்களை சாப்பிட பறவைகள் வரும் என்பதால் அதை வலை போர்த்தி பாதுகாக்க வேண்டி உள்ளது என்றார். இது குறித்து நாமக்கல் மாவட்ட தோட்டக்கலை துறை துணை இயக்குனர் கண்ணன் கூறுகையில், ‘நாமக்கல் மாவட்டத்திலேயே முதன் முறையாக விவசாயி கணேசன், பேரீட்சை சாகுபடியில் ஈடுபட்டு மற்ற விவசாயிகளுக்கு முன்னோடியாக திகழ்ந்து வருகிறார். தோட்டக்கலைத் துறை, அவருக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக உள்ளது,’ என்றார்.

Tags : lorry driver , namakkal ,lorry Driver,good yiled,Date Palm,Cultivation
× RELATED மனைவியுடன் தொடர்பு வைத்ததால்...