ஐஆர்சிடிசி.,யில் சேவை கட்டண விதிப்பால் ஆன்லைன் ரயில் டிக்கெட் புக்கிங் குறைந்ததா?

சேலம் : ஐஆர்சிடிசி.,யில் சேவை கட்டணம் விதிப்பால் ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்வது குறைந்துள்ளதா? என ரயில்வே உயர் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.இந்திய ரயில்வே துறையில், பொதுமக்கள் தங்களது பயணத்தை முடிவு செய்து, 120 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்து கொள்ள வசதி வழங்கப்பட்டுள்ளது. இதற்காக முக்கிய ரயில்வே ஸ்டேஷன்களில் முன்பதிவு மையங்கள் இயங்கி வருகிறது. அங்கு காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை (ஞாயிறு மட்டும் பாதி வேலை நாள்) டிக்கெட் முன்பதிவு செய்துகொள்ளலாம்.

இதுபோக தட்கல் டிக்கெட் முன்பதிவு, ஒவ்வொரு ரயிலுக்கும் 24 மணி நேரத்திற்கு முன்பாக, அதாவது ஒரு நாள் முன்பு செய்ய வேண்டும். நேரடியாக ரயில்வே ஸ்டேஷனுக்கு சென்று டிக்கெட் முன்பதிவு செய்வது போல், ஆன்லைனில் ரயில்வே துறையின் அங்கமாக விளங்கும் ஐஆர்சிடிசி இணையதளத்திற்கு சென்றும் முன்பதிவு செய்து கொள்ளலாம். சமீபகாலமாக ஐஆர்சிடிசி.,யில் முன்பதிவு செய்வோரின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது. ரயில்வே ஸ்டேஷன் முன்பதிவு மையங்களில் காத்திருக்க வேண்டிதிருப்பதால், ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு மோகம் அதிகரித்துள்ளது.

அதிலும், செல்போன்களில் ஐஆர்சிடிசி வசதியை ஏற்படுத்திக் கொண்டு, பலரும் டிக்கெட் முன்பதிவு செய்கின்றனர். கடந்த 3 ஆண்டுக்கு முன்பு, ஐஆர்சிடிசி.,யில் ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்ய சேவைக்கட்டணம் வசூலிக்கப்பட்டது. அப்போது ஏசி பெட்டி முன்பதிவுக்கு ₹40ம், ஏசி அல்லாத பெட்டி முன்பதிவிற்கு ₹20ம் சேவைக்கட்டணம் வசூலித்தனர். பின்னர், ஆன்லைன் டிக்கெட் முன்பதிவை அதிகரிக்கச் செய்ய, சேவை கட்டண விதிப்பை ரத்து செய்து ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டது.

இதன்பின், நாடு முழுவதும் ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்வோரின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்தது. அதிலும் தட்கல் டிக்கெட் முன்பதிவில் பெரும்பாலானவை ஆன்லைனில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் மீண்டும் கடந்த 1ம் தேதி முதல் ஐஆர்சிடிசி ஆன்லைன் ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு சேவைக்கட்டணம் விதிக்கப்பட்டு வருகிறது. ஏசி பெட்டிக்கு ₹30 மற்றும் ஜிஎஸ்டியும், ஏசி அல்லாத பெட்டிக்கு ₹15 மற்றும் ஜிஎஸ்டியும் விதிக்கப்படுகிறது. இந்த சேவை கட்டண விதிப்பிற்கு பின், ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு சற்று குறைந்திருப்பதாக கூறப்படுகிறது. ஒவ்வொரு டிக்கெட்டிற்கும் ₹15, ₹30 அதிகமாக கொடுப்பதற்கு பதிலாக, நேரடியாக ரயில்வே ஸ்டேஷன் முன்பதிவு மையத்திற்கு சென்று பதிவு செய்து கொள்ளலாம் என பலரும் செல்வதாக கூறப்படுகிறது. இதனால், டிக்கெட் கவுன்டர்களில் கூட்டம் அதிகளவு காணப்படுகிறது.

ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவுக்கு சேவை கட்டணம் விதிக்கப்பட்டு, ஒரு வாரம் நிறைவடைந்த நிலையில், அதன் பயன்பாடு குறைந்துள்ளதா? என்பதை ரயில்வே உயர் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். சேவை கட்டண விதிப்பின் மூலம் ரயில்வேக்கு கூடுதல் வருவாய் கிடைக்கிறது. அதே வேளையில், இதன்காரணமாக பஸ் போக்குவரத்திற்கு பயணிகள் மாறிச் செல்கிறார்களா? எனவும் அதிகாரிகள் குழு ஆய்வு செய்கிறது. இதுபற்றி ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், ‘‘ஆன்லைன் டிக்கெட் முன்பதிவுக்கு சேவை கட்டணம் விதிக்கப்பட்டுள்ளதால், அதன் பயன்பாடு குறைந்துள்ளதா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒரு வார காலத்தில் எத்தனை சதவீதம் குறைந்துள்ளது. அதனை மேம்படுத்த செய்ய வேண்டியவை பற்றி ஆய்வு செய்கின்றனர்,’’ என்றனர்.

Related Stories:

>