×

புதுச்சேரி அரசியலில் மீண்டும் பரபரப்பு ரேஷன் அரிசி வழங்க கவர்னர் கிரண்பேடி மறுப்பு: ராஜ்நிவாசில் இருந்து பாதியில் வெளியேறிய முதல்வர், அமைச்சர்கள்

புதுச்சேரி: புதுச்சேரியில் ரேஷன் கடைகளில் அரிசி வழங்க கவர்னர் கிரண்பேடி மறுத்து விட்டார். இதனால் ராஜ்நிவாசில் கவர்னருடன் சந்திப்பில் இருந்து முதல்வர், அமைச்சர்கள் பாதியில் வெளியேறினர். புதுச்சேரியில் இலவச அரிசி வழங்குவது தொடர்பாக கவர்னர் கிரண்பேடிக்கும், ஆளும் அரசு தரப்புக்கும் இடையே மோதல் இருந்து வருகிறது. இதனால் இலவச அரிசி வழங்குவதில் சிக்கல் நீடித்து வருகிறது. இதனிடையே அரிசிக்கு பதிலாக  வங்கியில் பணம் செலுத்தலாம் என கவர்னர் கிரண்பேடி பரிந்துரைத்தார். அரிசி விலையில் அவ்வப்போது மாற்றம் வருவதால் பணம் வழங்கினால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.  மக்களின் கருத்தை ஏற்று,  அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் அரிசியே வழங்க சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதை தொடர்ந்து, கவர்னர் கிரண்பேடியை நேரில் சந்தித்து வலியுறுத்த முதல்வர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் முடிவெடுத்தனர்.  அதன்படி நேற்று மதியம் 1 மணிக்கு நாராயணசாமி தலைமையில் அமைச்சர்கள் மல்லாடி கிருஷ்ணாராவ், கந்தசாமி, ஷாஜகான், வைத்திலிங்கம் எம்பி மற்றும் திமுக எம்எல்ஏக்கள் ஆகியோர் ராஜ்நிவாசுக்கு சென்றனர். அங்கு கவர்னர்  கிரண்பேடியை சந்தித்து இலவச அரிசி தொடர்பான தீர்மானத்தை வழங்கி அனுமதி கேட்டனர். ஆனால் ஆளும் அரசின் கோரிக்கையை கிரண்பேடி ஏற்கவில்லை. இதனால் பேச்சுவார்த்தையில் இருந்து பாதியிலேயே முதல்வர், அமைச்சர்கள்,  எம்எல்ஏக்கள் வெளியேறினர். அதன்பிறகு, முதல்வர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறுகையில், ‘புதுச்சேரி மாநில மக்கள் அனைவரும் அரிசிதான் கொடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருக்கிறார்கள். இதுதொடர்பாக விவாதித்து, சட்டசபையில் தீர்மானம்  நிறைவேற்றி, அந்த தீர்மானத்தின்  நகலை கவர்னரிடம் கொடுத்தோம்.  ஆனால், எங்கள் கோரிக்கையை நிராகரித்து விட்டார். இதனால் நாங்கள் அனைவரும் வெளிநடப்பு செய்து வந்திருக்கிறோம்’ என்று விளக்கினார்.



Tags : Karnapedi ,Puducherry , Puducherry ,politics , Governor Karnapady,Rajnivas
× RELATED புதுச்சேரியில் வாக்குப்பதிவு...