×

கர்நாடக தகுதி நீக்க எம்எல்ஏக்கள் வழக்கு உச்சநீதிமன்றத்தில் வரும் 11ம் தேதி விசாரணை

பெங்களூரு: கர்நாடகாவில் பதவியிழந்த முன்னாள் எம்.எல்.ஏக்கள்  தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் 11ம் தேதி  நடக்கிறது.கடந்த ஜூலை 1ம் தேதி காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த  ஆனந்த்சிங் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து  சபாநாயகரிடம் கடிதம்  கொடுத்தார். அதை தொடர்ந்து 6ம் தேதி 12 பேரும், 9ம் தேதி இருவரும், 10ம்  தேதி 2 பேர் எனவும்  மொத்தம் 15 பேர் ராஜினாமா கடிதம் கொடுத்தனர். இதனால்  மஜத-காங்கிரஸ் கூட்டணி பேரவையில் பெரும்பான்மை பலமிழந்தது.
கடந்த  18ம் தேதி தனது அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தை முதல்வராக இருந்த  எச்.டி.குமாரசாமி  தாக்கல் செய்தார். அதன் மீது விவாதம் நடந்தது. கடந்த  23ம் தேதி நடந்த வாக்கெடுப்பில் குமாரசாமி தலைமையிலான அரசு  பெரும்பான்மையை  இழந்தது.
இதனிடையில் கடந்த ஜூலை 25ம் தேதி கொறடா உத்தரவை மீறியதாக  காங்கிரஸ் சார்பில் கொடுத்த புகாரை பரிசீலனை செய்த அப்போதைய சபாநாயகர்  கே.ஆர்.ரமேஷ்குமார், கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் ரமேஷ் ஜாரகிஹோளி  உள்பட 14 பேரின் எம்எல்ஏ பதவியை  பறித்து உத்தரவிட்டார். பதவி பறிக்கப்பட்ட அனைவரும் வரும் 2023ம்  ஆண்டு வரை தேர்தலில் போட்டியிட தடை விதித்ததுடன், அரசு பதவிகள்  வகிப்பதற்கும் தடை விதித்தார்.

சபாநாயகரின் உத்தரவை ரத்து  செய்யக்கோரி பாதிக்கப்பட்ட 17 பேரும் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்  செய்துள்ளனர். அம்மனு இன்னும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமல் நிலுவையில்  உள்ளது. தாங்கள் தாக்கல் செய்துள்ள மனுவை  அவசர மனுவாக ஏற்று விசாரணை  நடத்தும்படி பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் இரண்டு முறை உச்சநீதிமன்றத்தில்  சிறப்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை ஏற்ற நீதிமன்றம், வழக்கு  பட்டியலில் சேர்க்கும்படி நீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவிட்டது. இந்த  உத்தரவை ஏற்று வழக்கு பட்டியலில் சேர்த்துள்ள பதிவாளர் செப்டம்பர் 11ம்  தேதி நீதிபதிகள் என்.வி.ரமணா மற்றும் அஜய்ரஸ்தோகி  ஆகியோர் அமர்வு முன்  விசாரணை நடைபெறும் என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். மனுதாரர்கள்  சார்பில் மூத்த வக்கீல் முகுல்ரோத்தகி ஆஜராகி வாதம் செய்கிறார்.

Tags : eligibility hearing ,Karnataka ,Supreme Court , MLAs ,remove Karnataka ,eligibility,11th
× RELATED விவிபேட் எந்திரத்தில் பதிவாகும்...