×

கல்வெட்டு ஆய்வாளர்கள் கிளையை சென்னையில் ஏன் அமைக்க கூடாது?: தொல்லியல் துறைக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

சென்னை: கல்வெட்டு ஆய்வாளர்கள் கிளையை சென்னையில் ஏன் அமைக்கக் கூடாது என்று தொல்லியல் துறைக்கு உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.பல்லாவரம் நகராட்சிக்கு உட்பட்ட ஜமீன் பல்லாவரம் வார்டு எண் 11, 12, 13, 14, 16, 17 ஆகிய ஆறு வார்டுகளில், சர்வே எண் 56 மற்றும் 63ல் உள்ள 59 ஏக்கர் நிலங்கள் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன. கடந்த 2010ம் ஆண்டு  முதல் இந்த பகுதிகளில் உள்ள நிலங்களை யாரும் விற்கவோ, வாங்கவோ, வீடு கட்டவோ அல்லது வீட்டை புதுப்பிக்கவோ கூடாது என்று தொல்லியல் துறை அதிகாரிகள் அறிவித்தனர். தொல்லியல் துறையின் இந்த அறிவிப்பை எதிர்த்து இப்பகுதி மக்கள் சார்பில், பல்வேறு போராட்டங்களும் நடத்தப்பட்டன. இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இந்த நிலத்தை தாம்பரம் கோட்டாட்சியர் தலைமையில் தொல்லியல் துறையினர் அளவீடு செய்து, அறிக்கை சமர்ப்பிக்குமாறு  உத்தரவிட்டது.இந்த வழக்கு மீண்டும் நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு சார்பில் உதவி சொலிசிட்டர் ஜெனரல் ஜி.கார்த்திகேயன் ஆஜராகி, பல்லாவரத்தில் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள  இடங்களை சுற்றி வேலி அமைப்பதற்காக தொல்லியல் துறையினரும், வேலையாட்களும் சென்றபோது அந்த பகுதியில் உள்ளவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், வேலி அமைக்கும் பணியை மேற்கொள்ள முடியவில்லை. போலீஸ்  பாதுகாப்பு கிடைக்கும் பட்சத்தில் வேலி அமைக்க முடியும். பெரும்பாலான மக்கள் தங்களின் வீடுகள் பாதிக்கப்படக்கூடாது என்று தெரிவித்துள்ளனர் என்று நீதிபதியிடம் கூறினார்.

அப்போது, தமிழக அரசு சார்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் நர்மதா சம்பத் ஆஜராகி, தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இடத்தில் வேலி அமைக்கும்போது உரிய போலீஸ் பாதுகாப்பு தரப்படும் என்று உறுதியளித்தார்.வழக்கை விசாரித்த நீதிபதி அளித்த உத்தரவு வருமாறு:சம்பந்தப்பட்ட இடத்தை சுற்றி பாதுகாப்பு வேலி அமைத்தால் மட்டுமே அகழ்வாராய்ச்சி பணிகளை மேற்கொள்ள முடியும். அந்த பகுதி பாதுகாக்கப்பட வேண்டும் என்று தொல்பொருள் ஆய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே, குறிப்பிட்ட  இடத்தில் வேலி அமைக்கும் பணி நடக்கும்போது செயின்ட் தாமஸ்மலை டிஎஸ்பி உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். பல்லாவரத்தில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுகளின் பதிவுகள் ஆங்கிலேயர் காலத்தில் சென்னையில்தான் ஆய்வு செய்யப்பட்டன. அதன் பிறகுதான் மைசூருக்கு மாற்றப்பட்டது. இந்தியாவில் கண்டுபிடிக்கப்படும் பெரும்பாலான கல்வெட்டுகள்  தமிழில்தான் உள்ளது. மைசூரில் கல்வெட்டு ஆய்வாளர்கள் 2 பேர் மட்டுமே உள்ளதாக இங்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களால் தமிழக அரசு கேட்கும் தகவல்களை தர முடியவில்லை. கல்வெட்டுகளிலிருந்து எடுக்கப்படும் பதிவுகளை 75 ஆண்டுகளுக்குள் டிஜிட்டல்  முறைக்கு மாற்ற வேண்டும். இல்லையென்றால் அவை தானாக அழிந்துவிடும்.

எனவே, கல்வெட்டுகளின் ஒரிஜினல் பதிவுகளை விரைந்து ஆய்வு செய்ய தேவையான பணியாளர்களை நியமித்தால்தான் அந்த பதிவுகளை பாதுகாக்க முடியும். இங்கிருந்து எடுத்துச் செல்லப்பட்ட கல்வெட்டுகளின் பதிவுகளை தமிழக அரசுக்கு  எப்போது தருவது என்பது குறித்து செப்டம்பர் 29ம் தேதி தொல்லியல்துறை அதிகாரிகள் தெரிவிக்க வேண்டும்.இந்த வழக்கில் மைசூரில் உள்ள கல்வெட்டு ஆய்வாளர்கள் கிளையின் இயக்குநரையும் சேர்க்கிறோம். பெரும்பாலான கல்வெட்டுகளில் தமிழ் மட்டுமே உள்ளதால் அவற்றை ஆய்வு செய்ய கூடுதல் ஆய்வாளர்கள் எப்போது நியமிக்கப்படுவார்கள்.  கல்வெட்டு ஆய்வாளர்கள் கிளையை சென்னையில் ஏன் அமைக்க கூடாது, அனைத்து தமிழ் கல்வெட்டுகளையும் ஏன் சென்னைக்கு மாற்றக்கூடாது, இந்த கேள்விகளுக்கு தொல்லியல்துறை வரும் 25ம் தேதிக்குள் பதில் தரவேண்டும்.இவ்வாறு  உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Tags : inspectors ,branch ,Chennai ,Archeology Department ,High Court , Inscription , branch,Chennai?
× RELATED நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் 174 பதற்றமான வாக்குசாவடிகள்