×

ஆஞ்சநேயர் கோயில் சத்தியத்துக்கு கட்டுப்படும் மக்கள் திருட்டு, குற்றச்செயல்களை விசாரிக்க போலீஸ் நுழையாத அதிசய கிராமங்கள்: சித்தூர் அருகே வியக்க வைக்கும் சம்பவம்

சித்தூர்: சித்தூர் அருகே திருட்டு, குற்றச்செயல்களை விசாரிக்க போலீசாரே நுழையாத அதிசய கிராமங்கள் குறித்த தகவல் கிடைத்துள்ளது.  ஆந்திர மாநிலத்தில் திருட்டு உட்பட குற்றச்செயல்கள் தொடர்பாக இதுவரை போலீசாரே நுழையாத கொத்தகூப்பலவாரிப்பல்லி, தாசரேப்பல்லி,  வெங்கலப்பல்லி,  ஊட்டூரு,  பெத்தூரு,   காயிதி,  திகுவாப்பல்லி, போய்யகொண்டா,  கொள்ளும்பல்லி என அடுத்தடுத்து அமைந்த அதிசய கிராமங்கள் குறித்து தெரிய வந்துள்ளது. இந்த கிராமங்கள் ஆந்திர மாநிலம் சித்தூரில்  இருந்து 100 கி.மீ தொலைவில் சவுடேப்பல்லி மண்டலத்தில் அமைந்துள்ளன. இதில் கொத்தகூப்பலவாரிப்பல்லியில் 600 ஆண்டுகள் பழமையான ராஜநாள பண்ட ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ளது. ஒரு பசு மாட்டை அடித்து கொன்றதற்காக வருந்திய விவசாயி கட்டிய கோயில்தான் ராஜநாள பண்ட ஆஞ்சநேயர் கோயில். இக்கோயில் அருகில் கிராமங்களுக்கு உள்ளேயும் இதுவரை எந்த குற்றச்செயலும் நடந்ததில்லை. அதனால் தங்கள் கிராமங்களில் போலீசார் இதுவரை நுழைந்ததே இல்லை என்று பெருமை பொங்க கூறுகின்றனர் இக்கிராமங்களை சேர்ந்த மக்கள்.

இக்கிராமங்களை சேர்ந்தவர்கள் யாரும் எதற்காகவும் போலீஸ் நிலையம் சென்று புகார் கொடுத்ததில்லையாம். தங்கள் கிராமத்தில் யாராவது தவறு செய்தாலோ,  குற்றம் நடந்தாலோ உடனடியாக அக்கிராம மக்கள், சந்தேகத்துக்கு உள்ளானவர்களை ராஜநாள பண்ட ஆஞ்சநேயர் சுவாமி கோயிலுக்கு மறுநாள் அழைத்து வந்து  சத்தியம் செய்ய  சொல்கிறார்கள். இந்த சத்தியத்துக்கு கட்டுப்படும் மக்கள் குற்றம் செய்திருந்தால் அதனை ஒப்புக்கொள்வதுடன், பொருளை திருடியவர் அதை எங்கு திருடினார்களோ அங்கு வைத்துவிட்டு சென்று விடுவார்களாம். இதனால் இக்கிராமங்களில் குற்றங்களும் நடப்பதில்லை. இதுதொடர்பாக கோயில் தர்மகர்த்தா வெங்கட்ரெட்டி கூறுகையில், ‘சமீபத்தில் எங்கள் கிராமத்தை சேர்ந்த  நாகராஜ் என்பவரின் வீட்டில் ₹75 ஆயிரம் திருட்டு போனது. பணம் பறிகொடுத்த நாகராஜ் என்னிடம் தெரிவித்து கிராம மக்கள் அனைவரையும் அழைத்து சத்தியம் செய்ய சொன்னார். நானும் அதுபற்றி கிராமத்தில் தெரிவித்தேன். அதற்கு மறுநாளே  நாகராஜ் வீட்டின் அருகே திருடப்பட்ட ₹75 ஆயிரத்தை  திருடியவர்களே வைத்துவிட்டு சென்று விட்டனர். இதுபோன்று பல சம்பவங்கள் நடந்துள்ளன. இத்தகைய சிறப்புமிக்க கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி கடைசி வாரத்தில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள்  திருவிழா நடைபெறுகிறது’ என்றார். இக்கோயிலுக்கு இடது புறத்தில்  பாறை மீதே  குளம் அமைந்துள்ளது.  இந்த குளம் இதுவரை வற்றியதே இல்லையாம். கடும் வறட்சி நிலவும் காலங்களிலும் குளத்தில் தண்ணீர் ததும்பி நிற்கும் என்கின்றனர் கிராம மக்கள்.

சத்தியம் செய்ய திரளும் மக்கள்
இக்கோயிலுக்கு  ஒவ்வொரு சனிக்கிழமை அன்றும்  சத்தியம்  செய்ய ஏராளமான பொதுமக்கள் வருகின்றனர். அவ்வாறு சத்தியம் செய்ய வரும்போது,  அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. அதில் பலர் அப்போதே குற்றத்தை ஒப்புக் கொண்டு சத்தியம் செய்யாமல் திரும்பிச் சென்றுள்ளனர். ஒவ்வொரு  சனிக்கிழமையும் குறைந்தது 10க்கும் மேற்பட்டோர் சத்தியம் செய்ய  வருகின்றனர்.  இதற்கு முன்பு சுற்றுப்புற கிராம மக்கள் மட்டுமே இந்த  கோயிலுக்கு வந்து கொண்டிருந்தனர். தற்போது சித்தூர் மட்டுமின்றி, கடப்பா, கர்னூல் என அண்டை மாவட்டங்கள் மட்டுமின்றி கர்நாடக மாநில பகுதிகளிலிருந்தும்  ஏராளமானவர்கள்  சத்தியம் செய்ய வருகின்றனர். ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை அன்று மட்டுமே சத்தியம் செய்ய  அனுமதிக்கப்படுகின்றனர்.

Tags : villages ,Chittoor , Miraculous villages , enter,robbery ,murder of people , Anjaneyar Temple, near Chittoor
× RELATED திருப்பத்தூரில் 14 கிராமங்கள் தேர்தல் புறக்கணிப்பு