×

நிலவை நெருங்கிய சந்திரயான்- 2 இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு மோடி, ராகுல் பாராட்டு

புதுடெல்லி: நிலவில் தரையிறங்கியபோது சந்திரயான் 2 விண்கலத்தின் விக்ரம் லேண்டரின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் விஞ்ஞானிகள் முயற்சி தோல்வியடைந்தது. எனினும் இஸ்ரோ விஞ்ஞானிகளின் முயற்சிக்கு பிரதமர் மோடி உள்ளிட்டோர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக இந்திய விஞ்ஞானிகள் நிலவுக்கு சந்திரயான் 2 என்ற விண்கலத்தை அனுப்பினர். நேற்று  அதிகாலை இந்த விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டரை நிலவில் தரையிறக்க பெங்களூரில் உள்ள இஸ்ரோ மையத்தில் இருந்து சிவன் தலைமையிலான விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டனர். விக்ரம் லேண்டர் தரையிறங்க கடைசி 4 நிமிடங்கள் இருந்தபோது அதில் இருந்து சிக்னல் கிடைக்கவில்லை. இதனால் விஞ்ஞானிகள் அதிர்ச்சியடைந்தனர். இது தொடர்பாக பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர் தங்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர். பெங்களூரில் உள்ள இஸ்ரோ மையத்தில் இந்த நிகழ்வை பார்த்துக்கொண்டிருந்த பிரதமர் மோடி இஸ்ரோ விஞ்ஞானிகளை பாராட்டி கருத்து தெரிவித்தார். அவர் கூறியதாவது: நிலவில் தரையிறங்கும் சந்திரயான் 2 திட்டத்திற்கு ஏற்பட்ட தடையை நினைத்து விஞ்ஞானிகள் மனம் தளர வேண்டாம். புதிய விடியல் நமக்கு காத்திருக்கிறது. நிலவின் தரையை நாம் நெருங்கிவிட்டோம். இன்றைய நிகழ்வின் மூலம் நம்மை சிறப்பாகவும் வலிமையாகவும் மாற்ற முயற்சித்துள்ளோம். விண்வெளியில் சிறப்பான திட்டம் விரைவில் நம்மை அடைய இருக்கிறது. இந்த திட்டம் மற்றும் விஞ்ஞானிகளால் நாடே பெருமை அடைகிறது. சிறப்பான முயற்சி மேற்கொண்டோம்.  நமது பயணம் தொடரும், நான் மட்டுமின்றி நாடே உங்களுடன் இருக்கிறது. இவ்வாறு மோடி தெரிவித்தார்.

பாஜ தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித்ஷா வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘சந்திரயான் 2 நிலவை தொட்டது ஒவ்வொரு இந்தியனும் பெருமை கொள்ள வேண்டிய விஷயம். விஞ்ஞானிகளின் கடுமையான உழைப்புக்கு நாடே துணை நிற்கிறது. விஞ்ஞானிகளின் எதிர்கால முயற்சிக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்,’ என தெரிவித்தார்.காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் தனது டிவிட்டர் பதிவில் `சந்திரயான் 2 திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த நமது விஞ்ஞானிகள் கடுமையான உழைப்பை கொடுத்துள்ளனர். உங்களுடைய ஆர்வம் மற்றும் அர்ப்பணிப்பு ஒவ்வொரு இந்தியனையும் பெருமை கொள்ள செய்கிறது. இந்த முயற்சி இந்தியாவின் விண்வெளி திட்டத்திற்கு தடையாக இருந்த பல்வேறு தடைகளை அகற்றியுள்ளது’ என தெரிவித்துள்ளார்.உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் சார்பில் முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் `இஸ்ரோ விஞ்ஞானிகளால் நமது நாடே பெருமை கொள்கிறது’ என குறிப்பிடப்பட்டுள்ளது. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில் `விஞ்ஞானிகள் மனம் தளரவேண்டாம். நமது விஞ்ஞானிகள் வரலாறு படைத்துள்ளனர். அவர்களது பணி சிறப்பானது, ஜெய்ஹிந்த்’ என தெரிவித்துள்ளார்.
 மார்க்சிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், `போராட்டம் தொடரும் என்பதை தான் நமது விஞ்ஞானிகளின் முயற்சி காட்டுகிறது. அடுத்த நடவடிக்கை சிறப்பானதாக இருக்கும் என நம்புகிறேன்’ என குறிப்பிட்டுள்ளார். இதேபோல் மத்திய குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியும் `நமது விஞ்ஞானிகளை நினைத்து நாம் பெருமை கொள்வோம், நமது விண்வெளி திட்டம் வலிமை மற்றும் சிறப்படைந்துள்ளது’ என டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

ஆர்பிட்டர் 95 சதவீத ஆராய்ச்சிகளை தொடரும்

விக்ரம் லேண்டருடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில், நிலவை சுற்றி வரும் சந்திரயான்-2 ஆர்பிட்டர், திட்டத்தின் 95 சதவீத ஆராய்ச்சிகளை தொடர்ந்து மேற்கொள்ளும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சந்திரயான் -2 திட்டத்தில் விக்ரம் லேண்டர் தரையிறங்குதல், பிரக்யான் ரோவர் பாறைகளை சேகரித்து வருவது திட்டத்தின் 5 சதவீத செயல்திட்டம் மட்டுமே. மீதமுள்ள 95% ஆய்வு பணியை சந்திரயான்-2ன் ஆர்பிட்டர் நிலவை சுற்றி வந்து மேற்கொள்ளும். இனி வரும் ஆண்டுகளில் சந்திரயான்-2 ஆர்பிட்டர் புகைப்படங்களை எடுத்து பூமிக்கு அனுப்பும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

குறையின்றி அனுப்ப ஒத்திவைத்த திட்டம்
சந்திரயான்-2 விண்கலத்தை கடந்தாண்டு அக்டோபர் மாதமே ஏவ இஸ்ரோ திட்டமிட்டிருந்தது. ஆனால், ராணுவ உபயோகத்துக்காக கடந்தாண்டு மார்ச் மாதம் இஸ்ரோ அனுப்பிய ஜிசாட்-6ஏ செயற்கைகோளின் தகவல் தொடர்பு துண்டானது. இதனால், சந்திரயான்-2 திட்டத்தில் எந்த குறையும் ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக அதை ஏவும் திட்டத்தை இஸ்ரோ இந்தாண்டு ஜூலை மாதத்துக்கு ஒத்திபோட்டது. பல கட்ட சோதனைகள் நடத்தப்பட்டு, விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான்-2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் தகவல் தொடர்பு துண்டானது இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

கண்ணீர் விட்ட சிவன் கட்டியணைத்த மோடி
சந்திரயான்-2 விண்கலத்தின் லேண்டர் விக்ரம் நிலவில் இருந்து 2.1 கி.மீட்டர் தொலைவில் இருக்கும் போது, அதன் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதனால் விஞ்ஞானிகள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, விக்ரம் தரையிறங்குவதை காண பெங்களூருவில் உள்ள இஸ்ரோ தலைமையகத்துக்கு வந்திருந்த பிரதமர் மோடி, செயற்கைக்கோள் கட்டுப்பாட்டு அறையில் இருந்து விஞ்ஞானிகளை ஊக்குவிக்கும் விதத்தில் உரையாற்றினார். அதன் பின்னர், புறப்படுவதற்காக காரை நோக்கி சென்றார் மோடி. அவரை வழியனுப்ப சென்ற இஸ்ரோ தலைவர் சிவன், மோடியை பார்த்து  கண்ணீர் விட்டு அழுதார். உடனே, சிவனை தன் தோள் மீது சாய்த்து கட்டி அரவணைத்த மோடி, அவரது தோள்களில் தட்டி ஆறுதல் கூறி தேற்றினார்.

Tags : Modi ,scientists ,Rahul ,ISRO , Modi, Rahul,congratulate, 2 ISRO,scientists
× RELATED நம் நாட்டின் பன்முகத்தன்மை குறித்து...