×

யுஎஸ் ஓபன் டென்னிஸ் 5வது முறையாக பைனலுக்கு முன்னேறினார் ரபேல் நடால்: மெட்வதேவுடன் பலப்பரீட்சை

நியூயார்க்: யுஎஸ் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் விளையாட, ஸ்பெயின் நட்சத்திரம் ரபேல் நடால் 5வது முறையாக தகுதி பெற்றார்.அரை இறுதியில் இத்தாலியின் மேட்டியோ பெரட்டினியுடன் (24வது ரேங்க்) மோதிய ரபேல் நடால் (2வது ரேங்க்), டை பிரேக்கர் வரை இழுபறியாக நீடித்த முதல் செட்டில் 7-6 (8-6) என வென்று முன்னிலை பெற்றார். இரண்டாவது செட்டிலும் பெரட்டினி கடும் நெருக்கடி கொடுத்த நிலையில், அவரது சர்வீஸ் ஆட்டத்தை முறியடித்த நடால் 6-4 என கைப்பற்றி முன்னிலையை அதிகரித்துக் கொண்டார்.அதே வேகத்துடன் 3வது செட்டில் புள்ளிகளைக் குவித்த அவர் 7-6 (8-6), 6-4, 6-1 என்ற நேர் செட்களில் வெற்றியை வசப்படுத்தி, 5வது முறையாக யுஎஸ் ஓபன் பைனலுக்கு முன்னேறினார். இப்போட்டி 2 மணி, 35 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. 18 கிராண்ட் ஸ்லாம் சாம்பியன் பட்டங்களை வென்ற சாதனையாளரான நடால் 2010, 2013, 2017ல் யுஎஸ் ஓபன் கோப்பையை முத்தமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக நடந்த முதல் அரை இறுதியில் ரஷ்ய வீரர் டானில் மெட்வதேவ் (5வது ரேங்க்) 7-6 (7-5), 6-4, 6-3 என்ற நேர் செட்களில் பல்கேரியாவின் கிரிகோர் திமித்ரோவை (78வது ரேங்க்) வீழ்த்தி முதல் முறையாக கிராண்ட் ஸ்லாம் போட்டித் தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். சாம்பியன் யார் என்பதை தீர்மானிப்பதற்கான பைனலில் ரபேல் நடால் - டானில் மெட்வதேவ் மோதுகின்றனர்.கபால் - பாரா அசத்தல்: ஆண்கள் இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டியில் நம்பர் 1 ஜோடியான ஜுவன் செபாஸ்டியன் கபால் - ராபர்ட் பாரா (கொலம்பியா) இணை 6-4, 7-5 என்ற நேர் செட்களில் ஸ்பெயினின் மார்செலோ கிரானோலர்ஸ் - ஹொரேசியோ ஸெபலாஸ் (அர்ஜென்டினா) ஜோடியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

Tags : Rafael Nadal ,finals ,US Open , Rafael Nadal,advanced, final , US Open
× RELATED தமிழ்நாடு அணியை வீழ்த்தி 47வது முறையாக...