×

‘ஆளை தூக்கும்’ நகரமாகும் தூங்கா நகரம் 8 மாதங்களில் 80 கொலைகள்: 98 சம்பவங்களில் 3,255 பவுன் நகைகள் கொள்ளை

மதுரை:தமிழகத்தில் ‘தூங்கா நகரம்’ எது என்று கேட்டால், அசந்து தூங்குபவர்கள் கூட எழுந்து ‘மதுரை’ என்பார்கள். அந்தளவுக்கு எந்நேரமும் மக்கள் நடமாட்டம் இருந்து கொண்டே இருக்கும். தற்போதும் இந்நகர மக்கள் தூங்காமலே இருக்கின்றனர். அதற்கு தொழில் உள்ளிட்ட காரணங்கள் இல்லை. சர்வசாதாரணமாக வீதிகளில் நடக்கும் கொலைகள், வழிப்பறி சம்பவங்கள், வீடுகளை உடைத்து நடக்கும் கொள்ளை சம்பவங்களே இதற்கு முக்கிய காரணம். கடந்த 8 மாதங்களில் 80 கொலைகள் நடந்துள்ளது போலீசாரின் கண்காணிப்பை கேள்விக்குறியாக்கி உள்ளது. கொய்யாவுக்காக கொலையா?: மதுரையில் கடந்த சில மாதங்களாக நடந்த சில கொலைகளை பார்ப்போம்.* மதுரையில் புதூர் சிவானந்த நகர் டாஸ்மாக் கடையில் கொய்யாப்பழ துண்டுக்காக, கொடிக்குளம் பகுதியை சேர்ந்த கார் டிரைவரான சிவாவை (22), துண்டுதுண்டாக ஒரு கும்பல் வெட்டிக் கொன்றது. மதுரை, செல்லூர், சத்தியமூர்த்தி நகரில் வீட்டில் தனியாக இருந்த உசேன் மனைவி மம்தா பீவியை (87), மர்ம கும்பல் கழுத்தை நெரித்துக் கொன்று 8 பவுன் நகையை எடுத்துச் சென்றது. பழிக்குப்பழியாக...:  மதுரை அனுப்பானடியை சேர்ந்த ரவுடி டேங்க் குமரன் (எ) குமரன் (28), பழிக்குப்பழியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். மதுரை ஒத்தக்கடை அருகே திருமோகூரைச் சேர்ந்த முருகன் மனைவி கவுசல்யாவை (22), நகைக்காக உறவினர் கழுத்தை நெரித்துக் கொன்றார். மதுரை முத்துப்பட்டி கண்மாய்கரையைச் சேர்ந்த சதீஸ்குமார் (25). இவர் தெற்குமாரட் வீதி பாண்டிய வெள்ளார் சந்திப்பில் நடந்து வரும்போது, டூவீலரில் வந்த 4 பேர் அவரை வழிமறித்து கொலை செய்தனர்.

மதுரை அ.கோவில்பட்டி ராம்பு (23), ஆத்திக்குளம் தினேஷ்,  திருநங்கை அல்போன்சா, புதூரைச் சேர்ந்த பால் வியாபாரி, மதுரை அண்ணாநகர்  கட்டை முத்து, ஜெய்ஹிந்த்புரம் ராமர், மதுரை கிருஷ்ணாபுரம் காலனி பாரதி  தெருவைச் சேர்ந்த மாரிமுத்து(50),  மதுரை மதிச்சியம் ராமராயர் மண்டபம்  பகுதியை சேர்ந்த மணிகண்டன் (35) கொலை செய்யப்பட்டனர். அனுப்பானடியைச் சேர்ந்த காளீஸ்வரன் மனைவி லதாவை, நடத்தையில் சந்தேகப்பட்ட கணவரே மண்ணெண்ணெய் ஊற்றி கொலை செய்தார். உசிலம்பட்டி அருகே பசுக்காரன்பட்டியைச் சேர்ந்த திராவிட மணி மனைவி உமாதேவி (45), ஓட்டலில் சப்ளையர் உட்பட நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் மட்டும் கடந்த 8 மாதங்களில் 80 கொலைகள் அரங்கேறியுள்ளன. கொள்ளைக்கும் குறைவில்லை...: கொலைகள் மட்டுமல்லாது  வழிப்பறியும், கொள்ளைச்சம்பவங்களும் குறைவின்றி நடந்து வருகிறது. கடந்த 8  மாதங்களில் மட்டும் 98 சம்பவங்கள் நடந்துள்ளன. இதில் 3,255 பவுன் நகைகள்  இழப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் கரிமேடு பகுதியில் தேவி  என்பவர் வீட்டை உடைத்து 10 பவுன் நகை கொள்ளை, காமராஜர்புரம் பகுதியைச்  சேர்ந்த தங்கவேல் என்பவரது வீட்டிற்குள் புகுந்து 418 பவுன் நகைகள், ₹8  லட்சம் கொள்ளை என தொடர்ந்த 10 சம்பவங்களில் 525 பவுன் நகைகள் கொள்ளை போயின.  பிப்ரவரி மாதத்தில் அதிகபட்சமாக 14 சம்பவங்களில் அடகுகடை கொள்ளை சம்பவம்  உட்பட 1,827 பவுன் நகைகள், ₹12.65 லட்சம் பணம் கொள்ளை போயின.  மார்ச்  மாதத்தில் 10 சம்பவங்களில் 123 பவுன் நகைகள், ஏப்ரல் மாதத்தில் 11  சம்பவங்களில் 112 பவுன் நகைகள், ₹14 லட்சம் ரொக்கம், மே மாதத்தில் 16  சம்பவங்களில் 157 பவுன் நகைகள், ஜூன் மாதத்தில் 11 சம்பவங்களில் 204 பவுன்  நகைகள், ஜூலை மாதத்தில் 10 சம்பவங்களில் 130 பவுன் நகைகள், ஆகஸ்ட்  மாதத்தில் 16 சம்பவங்களில் 289 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளன.  இந்த வருடத்தில் 8 மாதத்தில் 98 சம்பவங்களில் 3,255 பவுன் நகைகள்,  ₹2.34 கோடி பணத்தை மக்கள் இழந்துள்ளனர்.

மதுரையில் கீரைத்துறை மற்றும் புதூர் பகுதிகளில் பழிக்குப்பழி கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதுபோன்ற சம்பவங்களில் மட்டும் கடந்த 2 ஆண்டுகளில், 50க்கும் மேற்பட்ட கொலைகள் நடந்துள்ளன. கொலை, கொள்ளை அன்றாட சம்பவம் போல நடப்பதால், பொதுமக்கள் வெளியில் நடமாடவே அச்சப்படும் சூழல் உள்ளது. மேலும், மாலை, இரவு நேரங்களில் தனியாக செல்லும் பெண்களை குறி வைத்து வழிப்பறியும் நடந்து வருகிறது. எனவே, மாநகராட்சியான மதுரையில் போலீசார் தினந்தோறும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட வேண்டும். கொலை, கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுவோரை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டுமென ேகாரிக்கை எழுந்துள்ளது. ‘வைரல் கொலைகள்’: மதுரை, புதூர் ராமவர்மா நகரைச் சேர்ந்த பைனான்சியர் ராஜா (35), நள்ளிரவில் ஓட ஓட விரட்டி ஒரு கும்பலால் கொலை செய்யப்பட்டார். மதுரை, புதூர் காந்திபுரம் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகமும் (22) இதே முறையில் கொலையானார். கண்காணிப்பு கேமராக்களில் பதிவான இந்த கொலைக்காட்சிகள், சமூக வலைத்தளங்களிலும் வைரலாக பரவின. கஞ்சா விற்பனை கனஜோர்: மதுரைக்கு ஆந்திரா, கேரளாவில் இருந்து அதிகளவு கார்களில் கஞ்சா கடத்தி வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 8 மாதங்களில் போதை தடுப்பு பிரிவு போலீசார் சோதனையில் 325 பேரை கைது செய்து, அவர்களிடமிருந்து 1,960 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மத்திய போதை தடுப்பு நுண்ணறிவு போலீசார் சோதனையில் 15 பேரை கைது செய்து, அவர்களிடமிருந்து 350 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மதுரை நகர் போலீசார் 138 பேரை கைது செய்து 780 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். புறநகரில் 234 பேரை கைது செய்து, 478 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த வருடத்தில் மட்டுமே 712 பேரை கைது செய்து, 3,568 கிலோ கஞ்சா, 17 கார்கள், 26 டூவீலர்களை போலீஸ் பறிமுதல் செய்திருக்கிறது.

திருந்தினால் மறுவாழ்வு: மதுரை போலீஸ் துணை கமிஷனர் சசிமோகன் கூறும்போது, ‘‘குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் 1,000 நபர்களை கண்டறிந்து அவர்களிடமிருந்து உறுதிமொழி பத்திரம் எழுதி வாங்கப்பட்டுள்ளது. இவர்களை ஒரு வருடம் வரை போலீசார் கண்காணித்து வருவார்கள். அதில் சிறு குற்றம் செய்வது தெரிந்தால் பத்திரத்தை ரத்து செய்து, அவர்களை கைது செய்து சிறையில் அடைப்போம். இதன்படி 8 மாதத்தில் 100க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். திருந்தி வரும் நபர்களுக்கு மறுவாழ்வு நடவடிக்கைகளிலும் கூடுதல் கவனம் காட்டுகிறோம்’’ என்றார்.

போலீஸ் ஸ்டேஷன் பக்கத்துல ‘சதக்’
மதுரை செல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் அஜித் (23). இவர் ஒரு வழக்கு தொடர்பாக தல்லாகுளம் காவல்நிலையத்தில் கையெழுத்து போட்டு விட்டு வரும்போது, வெட்டி கொலை செய்யப்பட்டார். இதேபோல் சோழவந்தான் பகுதியில் பாபு என்பவரும்  கொலை செய்யப்பட்டார்.

கூலிப்படை வைத்து கணவர் கொலை
மதுரை, பாலமேடு பகுதியை சேர்ந்தவர் மதுரைவீரன். சொத்துக்காக மனைவி மற்றும் மகள் தூண்டுதலின் பேரில், இவரை கூலிப்படைக்கும்பல் வீட்டு வாசலில் வைத்தே கொலை செய்து தப்பியது. மதுரை பாலமேடு, புதூர், கிருஷ்ணபுரம் காலனி உள்ளிட்ட பகுதிகளில் நடந்த கொலைகளில் குற்றவாளிகளை பிடிக்க அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களின் பதிவுகள் போலீசுக்கு உதவியாக இருந்தது. இதனால் உடனடியாக குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதேபோல் ஜெய்ஹிந்த்புரம், விளக்குத்தூண் பகுதியில் நடந்த கொள்ளை சம்பவத்திலும் சிசிடிவி கேமராக்கள் மூலம் தான் குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டனர். எனவே, முக்கிய வீதிகள், இடங்களில் சிசிடிவி வைக்க வேண்டுமென போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

மதுரை கிருஷ்ணாபுரம் காலனி பாரதி தெருவைச் சேர்ந்தவர் மாரிமுத்து (50). இவர் அங்குள்ள வணிக வளாகம் ஒன்றில் டீக்கடை நடத்தி வந்தார். கடைக்கு வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் தங்களுக்கு, ‘ஓசி டீ தரவில்லை’ எனக்கூறி மாரிமுத்துவை சரமாரியாக கத்தியால் குத்தி விட்டு தப்பியது.

பெருகி வரும் சிறார் குற்றவாளிகள்
சமூக ஆர்வலர் முத்துக்குமார் கூறும்போது, ‘‘மதுரை மாவட்டத்தில் வழிப்பறி, திருட்டு, கொள்ளை, கொலை சம்பவங்கள் வருடத்திற்கு வருடம் அதிகரித்து வருகிறது. தற்போது பழைய குற்றவாளிகள் பலரும் சிறையில் உள்ளனர். வெளியில் இருப்போரும் தங்கள்  தொழிலை மாற்றி, மாவட்டம் விட்டு மாவட்டம் சென்று வேலை பார்த்து திருந்தி வாழ்ந்து வருகின்றனர். ஆனால் தற்போது புதிய குற்றவாளிகள் அதிகளவில் உருவாகி வருகின்றனர். பெரும்பாலும் 18 வயதிற்கு கீழ் உள்ள நபர்கள் மது, கஞ்சா போதைகளில் கொலை குற்றங்களில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே போலீசார் ரோந்து பணியை திவீரப்படுத்தி,  குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை பெற்றுத் தருவதில் கூடுதல் வேகம் காட்ட வேண்டும்’’ என்றார்.

போலீசார் தீவிர ரோந்து மதுரை கமிஷனர் பேட்டி
மதுரை போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் கூறும்போது, ‘‘மதுரை நகரில் குற்றங்களை குறைக்க போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. வீதிகள்தோறும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணிகள் நடந்து வருகின்றன. மேலும் வார்டுகள்தோறும் எஸ்ஐ மற்றும் போலீசார் பொறுப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு முழுமையாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. 24 மணி நேரமும் ரோந்து பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. கொலை உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை உடனுக்குடன் கண்டறிந்து கைது செய்து சிறையில் அடைத்து வருகிறோம்’’ என்றார்.

டோல்கேட்டில் ‘டுமீல்’.. குப்பையில் குண்டு
மதுரை போடி லைன் பகுதியில் வீட்டில் வைத்திருந்து பொருட்களை குப்பையில் கொண்டு வீசியபோது அது வெடித்துச் சிதறியது. இது பழிக்குப்பழியாக கொலை செய்ய தயாரிக்கப்பட்ட குண்டு எனத் தெரியவந்தது. இதுபோன்று கடந்த 10 வருடங்களில் 15க்கும் மேற்பட்ட தொடர் வெடிகுண்டு சம்பவங்களும் மதுரையை மிரட்டி வருகின்றன.  மதுரை, தேனி, விருதுநகர் மாவட்டங்களில்  பலர் அனுமதி இல்லாமல் கள்ளத்துப்பாக்கிகளை பயன்படுத்தி பல்வேறு செயல்களில்  ஈடுபட்டு வருகின்றனர். எனவே, வெடிகுண்டு, கள்ளத்துப்பாக்கி பயன்படுத்தி பலர் சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கடைசியாக நெல்லையில் நடந்த கொலை வழக்கில் ஆஜராகி விட்டு வந்த பிரபல ரவுடி எண்ணூர் தனசேகரன் உள்ளிட்ட 7 பேர் திருமங்கலம் டோல்கேட்டில் கட்டணம் கொடுக்காமல் தகராறு செய்து, பொதுமக்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் 7 பேர் சிக்கினர். மதுரையில் வெளிமாநில கள்ளத்துப்பாக்கிகள் புழக்கமும் அதிகரித்துள்ளது.


Tags : Dunga ,city ,murders ,robberies , Dunga City , deadliest city,80 years, 80 murders,3,255 pound ,jewelery robberies,98 cases
× RELATED சென்னை கண்ணகி நகரில் போலீசார் மீது கஞ்சா போதை ஆசாமிகள் தாக்குதல்