×

பொள்ளாச்சியை மிஞ்சினால் பொல்லாப்பு

பொள்ளாச்சியில் இளம்பெண்கள் பாலியல் பலாத்கார சம்பவம் காவல் துறைக்கு பெரிய தலைவலியை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்ட இளம்பெண் ஒருவரின் பெயரை கூறி விட்டார் என்று கடைசியில் எஸ்.பி. தலைக்கே ஆபத்து வந்தது. இந்த பிரச்னைக்கு பிறகு இளம்பெண்கள், சிறுமிகள், பெண் குழந்தைகள் மீதான பாலியல் புகார்களில் போலீசார் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவு வந்துள்ளது. இந்த நிலையில், சமீபத்தில் குமரி மாவட்டம் கருங்கல் காவல் நிலைய பகுதிக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த பிளஸ் 2 மாணவி ஒருவர் திடீரென மாயமாகி மீட்கப்பட்டார். விசாரணையில் பள்ளி மாணவர்கள் மற்றும் தொழில் நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள் சிலர் மாணவியை மிரட்டி, பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. இது தொடர்பாக 3 பேரை, போக்சோ சட்டப்பிரிவின் கீழ் போலீசார் கைது செய்தனர். ஆனால் இந்த சம்பவத்தில் ஏராளமான மாணவர்களுக்கு தொடர்பு உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. கருங்கல் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்திய போது, 10க்கும் மேற்பட்டவர்களின் பெயர்களை பாதிக்கப்பட்ட மாணவி கூறி இருக்கிறார். பின்னர் குளச்சல் அனைத்து மகளிர் போலீசாருக்கு விசாரணை மாறிய பின்னர், இந்த எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது. தொடர்ந்து விசாரணை நடத்தினால் பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை மிஞ்சி விடும். பொள்ளாச்சியை மிஞ்சினால் பொல்லாப்பு வந்து விடும் என்பதால், 3 பேரோடு நிறுத்திக் கொண்டது காவல்துறை. இதை பயன்படுத்தி காவல்துறையில் உள்ள சிலர், விசாரணைக்காக வந்த மாணவர்களிடம் ஆயிரக்கணக்கில் சம்திங் பெற்றுக்கொண்டு அமைதியாகி விட்டனர். ஆனால் இப்போது இந்த விவகாரத்தின் முழு விவரங்களை நீதிமன்றத்துக்கு எடுத்து செல்ல சிலர் தயாராகி வருகிறார்களாம். எனவே பொள்ளாச்சி பாலியல் சம்பவம் போல், கருங்கல் மாணவி பாதிப்புக்கு உள்ளான சம்பவமும், போலீசுக்கு சிக்கல் ஆகுமோ? என்ற அச்சம் காவல்துறையினர் மத்தியில் ஏற்பட்டு உள்ளது.

மணல் கொள்ளை மாமூலில் கொடிகட்டி பறக்கும் காக்கிகள்
நாகை மாவட்டத்தில் 24 மணி நேரமும் மணல் கொள்ளை படுஜோராக நடக்கிறதாம்.. அனைத்து போலீஸ் ஸ்டேசன்களுக்குட்பட்ட பகுதிகளிலும் மணல்கொள்ளை நடப்பதால் அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் இருக்க மாதம், மாதம் மாமூல் குவிகிறதாம். நாகை மாவட்டம் வலிவலம் காவல் நிலைய எல்லையில் சமீபத்தில் மணல் ஏற்றிவந்த லாரி ஒன்று பிடிபட்டது. இந்த தகவல் எஸ்பிக்கு பறந்ததாம். உடனே எஸ்பி, அந்த லாரியை விடுவிக்கும்படி சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேசனுக்கு உத்தரவு பிறப்பித்தார். ஆனால் அங்கு பணியில் இருந்த எஸ்ஐ மற்றும் தனிப்பிரிவு போலீசார் சம்பந்தப்பட்டவர்களிடம் ₹30ஆயிரம்  பெற்றுக்கொண்டு தான் லாரியை விடுவித்தார்களாம். லாரியில் இருந்தவர்கள் மேலிடத்து உத்தரவு வந்தபின் ஏன் உங்களுக்கு பணம் தர வேண்டும் என்று கேட்டுள்ளனர். அதற்கு காக்கிகள் அவரு மட்டும் என்ன பணம் வாங்காமல் உங்களை விடுவித்தாரா என்று கேட்டுள்ளனர். வேறு வழியில்லாமல் கேட்ட பணத்தை கொடுத்து விட்டு மணலுடன் லாரியை எடுத்து சென்றுள்ளனர்.

வருவாய் வரும் இடங்களை திரும்பத் தேடும் காக்கிகள்!
தேனி மாவட்டத்தில் எந்த காவல்நிலைய பகுதியாக இருந்தாலும், அங்கே ‘வருவாய் தரக்கூடிய பகுதிகள்’ இருக்கிறது. டாஸ்மாக், கஞ்சா, கந்துவட்டி, கட்டப்பஞ்சாயத்து, நிலப்பிரச்னை, குவாரி, கான்ட்ராக்ட் மட்டுமல்லாது, புகார் மனு கிடைத்து விட்டாலே இரு தரப்பிலும் ‘கறந்து விட’ முடிகிற அளவிற்கு நிலைமை இருக்கிறது. எஸ்எஸ்ஐ, எஸ்ஐ, இன்ஸ்பெக்டர் முதல் டிஎஸ்பி வரை கடந்த முறை தேர்தலுக்கு முன்னதாகவும், தேர்தலுக்கு பிறகும் இடமாற்றம் செய்யப்பட்டனர். இந்த இடமாற்றத்தால் பல்வேறு குளறுபடியாக, இந்த ‘வருவாய்ப் பகுதிகளின் காவலர்கள்’ வெவ்வேறு இடங்களுக்கு போய்ச் சேர்ந்தனர். இதனால் புதிய இடங்களில் வருவாய் பாதித்து, ‘தேவைக்கு தேற்ற முடியாமல்’ சிரமப்பட்டு வருகின்றனர். ஏற்கனவே மாமூல் வாங்கி பழக்கப்பட்டவர்கள், வேற்று இடங்களில் புதிய ஆட்களிடம் வருவாய்க்கு வழி தெரியாமல் விழி பிதுங்கி நிற்கிறார்களாம். இப்போது தனக்கு நெருக்கமான உயரதிகாரிகளை பிடித்தும், அவர்களை ‘கவனித்தும்’ தேனி மாவட்டத்திற்குள் ஏற்கனவே இருந்த ‘வருவாய் தரும் பகுதிக்கு’ பலர் வந்து கொண்டிருக்கின்றனராம். இன்னும் பலர் இதற்கான முயற்சியிலும் இருக்கிறார்களாம். இப்படி வருவாய் காணும் வகையில் கிளம்பிய இடத்திற்கே திரும்ப முயற்சிக்கிறவர்களை இனம் கண்டு தடுக்காவிட்டால், பழையபடியே தமிழகத்தின் ‘லஞ்சம்’ பெருக்கெடுக்கும் மாவட்டத்தில் முதலிடத்திற்கு தேனி முந்திக்கொள்ளும் என்று பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

நானே ராஜா, நானே மந்திரி, 2 ஸ்டாரின் அமர்க்களம்
நெல்லை - தூத்துக்குடி சாலையில் தாமிரபரணி ஆற்றைக் கடக்க பெரிய ேமம்பாலம் போட்டுள்ளனர். வளமான இந்த வல்லநாடு பகுதியில் தாமிரபரணி ஆற்றில் மணல் வளம் ஏராளம். இந்த ஆற்றுப்படுகையில் இரவு நேரங்களில் மணல் கொள்ளை ஜரூராக நடந்து வருகிறது. இந்தப்பகுதி போலீஸ் உயர் அதிகாரி பதவி உயர்வில் சென்று விட்டார். அதிகாரி இல்லாத அதிர்ஷ்டத்தால், அவருக்கு கீழ் உள்ள தற்போதைய அதிகாரி மணல் கொள்ளைக்கு கதவை திறந்து விட்டுள்ளார். ‘காற்றுள்ள போதே தூற்றிக் கொள்’என்ற ஸ்டைலில் தனது இரவு நேர மாமூலுக்கு யாராவது இடையூறு செய்தாலும் அவருக்கு உடனடி டிரான்ஸ்பர் போடும் அளவுக்கு கடும் செல்வாக்காக வலம் வருகிறாராம். அந்த அளவுக்கு அவரது ராஜ்யம் அந்த பகுதியில் கொடி கட்டிப் பறக்கிறது. இதனால் தினமும் இரவு லாரிகளில் தண்ணீர் சொட்டச் சொட்ட மணல் கொள்ளை நடந்து வருகிறது. அந்த அளவுக்கு மணல் பிசினசில் அவரது கை ஓங்கியுள்ளதாம்.

Tags : Pollachi , If, miss ,Pollachi
× RELATED பொள்ளாச்சியில் ஓய்வுபெற்ற பெண் கும்கி யானை உயிரிழப்பு..!!