×

இன்ஸ். மாற்றப்படுவாரா? பெரம்பலூர் காக்கிகள் ஆவல்

தமிழகத்தில் உள்ள எஸ்பிக்கள் சமீபத்தில் பணியிடை மாற்றம் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதில் பெரம்பலூர் மாவட்ட எஸ்பி திசா மித்தல் மாற்றலுக்கு, பெண் எஸ்பி அலுவலக இன்ஸ். முக்கிய காரணம் என அவரது துறையினரே கூறி ஆதங்கப்படுகின்றனர். காரணம், தமிழ் தெரியாத எஸ்பியிடம், மாவட்டத்தில் நடக்க கூடிய எந்த ஒரு முக்கிய தகவலும் கூறுவதில்லையாம்.. மாவட்டத்தில் நடக்கும் முக்கிய குற்றங்களையும் தெரிவிப்பது இல்லையாம்.. சமீபத்தில் பரபரப்பாக பேசப்பட்ட பாலியல் புகார் குறித்து முழுவிபர அறிக்கையை கூட மேலோட்டமாகத் தான் கூறி இருந்தாராம்... பாலியல் புகார் விவகாரத்தை மூடி மறைப்பதற்கான வேலையில் இறங்கியது மட்டுமல்லாமல், அதே நேரத்தில் பாலியல் புகாரில் சிக்கியவரிடம் தனது விசுவாசத்தையும் காட்டி இருந்தாராம் இன்ஸ்.. இந்த தகவல் மத்திய மண்டல உயரதிகாரிக்கு தெரிய வர, அந்த இன்ஸ்சை மாற்றக் கோரி எஸ்பியிடம் கூறியுள்ளார். ஆனால் அந்த உயரதிகாரி உத்தரவை பொருட்படுத்தாதது தான் எஸ்பி மாற்றலுக்கு காரணமாம்.. புதியதாக பொறுப்பேற்றுள்ள எஸ்பியிடம் கறாராக இருக்க வேண்டும் என மத்திய மண்டல உயரதிகாரி உத்தரவு போட்டுள்ளார். இதனால் விரைவில் எஸ்பி இன்ஸ். மாற்றப்படுவார் என  சக போலீசாரே ஆரூடம் கூறி வருகின்றார்களாம்...

கணக்கு காட்டிய அதிகாரிகள்
தமிழகம் முழுவதும் கடந்த 25ம் தேதி 2ம் நிலை காவலர்களுக்கான எழுத்துத்தேர்வு நடந்தது. அதேபோல் வேலூர் மாவட்டத்தில் 4 மையங்களில் 18,583 பேர் தேர்வு எழுதினர். இதில் சுமார் 1,000 போலீசார் பாதுகாப்பு மற்றும் தேர்வுக்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டனர். இதனால் அனைத்து போலீசாரும் காலை 6 மணிக்கு தேர்வு மையங்களில் ஆஜராகிவிட்டனர். இதில் போலீசாரின் உணவுக்கான செலவு தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வாணையத்திடம் பெற்று செலவு செய்யப்படுகிறது. ஆனால், வேலூர் மாவட்டத்தில் 2ம் நிலை காவலர்களுக்கான எழுத்துத்தேர்வு பணியில் ஈடுபட்ட போலீசாருக்கு உணவே சரிவர வழங்கப்படவில்லையாம். இன்ஸ்பெக்டர்களுக்கு மேல் பதவியில் உள்ளவர்களுக்கும், எஸ்பி தனிப்பிரிவு போலீசாருக்கு மட்டும் நல்ல உபசரிப்பு நடந்ததாம். மற்ற காவலர்களுக்கு உணவு வழங்கவில்லையாம். ஆனால் அனைத்து போலீசாருக்கும் உணவு வாங்கிக்கொடுத்ததாக அதிகாரிகள் கணக்கு காட்டி விட்டதாக புலம்பி வருகிறார்களாம். எனவே, இதன் மீது மாவட்ட காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

மாமூல் வேட்டையில் பெண் அதிகாரி
முட்டைக்கு பேமசான மாவட்டத்தில் மதுவிலக்கு பிரிவுக்கு என, நாடாளுமன்ற தேர்தலின் போது இன்ஸ்பெக்டரும், சப் இன்ஸ்பெக்டரும் மாற்றுப்பணியில் நியமிக்கப்பட்டாங்க. தேர்தல் முடிஞ்ச பிறகும் தொடர்ந்து மாற்றுப் பணியிலேயே அவர்கள் நீடிக்கிறாங்க. குறிப்பா அந்த சப்-இன்ஸ்பெக்டர் மதுவிலக்கு பிரிவு அலுவலகம் பக்கமே வருவதில்லையாம். அவர் கிரைம் தனிப்படையிலேயே நீடிக்கிறார். இன்ஸ்பெக்டரோ வேறு பணிகளை கவனிக்கிறார். இதனால் மாவட்டத்தில் உள்ள சந்துகளில், வீடுகளில் மது பாட்டில்களை பதுக்கி வைச்சு விக்கிற கூட்டம் பெருகிப் போச்சு. சந்து மதுபான கடைகளின் எண்ணிக்கையும் அதிகரிச்சிடுச்சி. ராத்திரி பகல்ன்னு 24 மணி நேரமும் மதுபானம் கிடைக்கும் நிலை நகரில் உருவாகிடுச்சு.இப்போ மதுவிலக்கு போலீசாரின் காட்டில் பண மழை கொட்டுது. எங்களை கண்டுக்கிடாதீங்கன்னு சொல்லி சந்து கடைக்காரங்க மாமூலை கொட்டுறாங்களாம். வசூலுக்குன்னே பெண் அதிகாரி ஒருத்தர நியமிச்சுருக்காங்களாம். அவரும் சந்துக்கடைகளின் லிஸ்ட் எடுத்து கையில வச்சுக்கிட்டு வேட்டையில் இறங்கிட்டாராம். மற்ற போலீசாரும் சாராயக் கடைகள் மீதும், அனுமதி இல்லாத சந்து மதுபான கடைகள் மீதும் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லையாம். மாற்று பணியில் இருக்கும் இன்ஸ்பெக்டர், எஸ்ஐக்கு போக வேண்டியது போய்விடுவதால் சந்து மதுபான கடைகள் தடையின்றி செயல்படுதாம். ஆனால் மாவட்ட அமைச்சரோ, எங்க மாவட்டத்துல எந்த சட்டவிரோத செயலும் நடக்கவே இல்லன்னு மார்தட்டிச் சொல்றாராம்.

போலீசாரையே கிறுகிறுக்க வைத்த கல்லூரி மாணவர்
வேலூர் மாவட்டம் ஆற்காடு நகர காவல் நிலையத்திற்கு கடந்த 3ம் தேதி வந்த கல்லூரி மாணவர் ஒருவர் கூறியதை கேட்ட போலீசார் தலை கிறுகிறுத்து போனார்கள். வேலூர் அருகில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த அந்த மாணவர் ஆற்காடு அருகே தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில் மெக்கானிக் இறுதியாண்டு படித்து வருவதாக கூறினார்.கல்லூரிக்கு செல்வதற்காக காலையில் பைக்கில் வந்த போது, வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் வாலிபர் ஒருவர் லிப்ட் கேட்டதாகவும், அதனை தொடர்ந்து அவரை பைக்கில் ஏற்றிக்கொண்டு வந்ததாகவும் தெரிவித்துள்ளார். பின்னர் ஆற்காட்டில் டீ குடித்து விட்டு தனக்கு சிகரெட் வாங்கி தந்த வாலிபர் திடீரென பைக்குடன் மாயமாகி விட்டதாகவும், பைக்கை கண்டுபிடித்து தரும்படியும் கூறியுள்ளார். அவர் கூறிய கதையை கேட்ட போலீசார் கிறுகிறுத்து போயினர்.அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த போலீசார் மாணவரிடம் கிடுக்கிப்பிடியாக விசாரித்ததில், அவருக்கு கஞ்சா பழக்கம் உண்டாம். அதனால் கல்லூரி வரும்போது வேலூர் பழைய பஸ் நிலையத்தில் வாலிபர் ஒருவரிடம் கஞ்சா வாங்கி அடித்துள்ளார். பின்னர் போதையுடன் 2 பேரும் ஒன்றாகவே பைக்கில் ஆற்காடு நோக்கி வந்துள்ளனர். பூட்டுத்தாக்கு வந்த போது, கஞ்சா விற்ற வாலிபர் பைக்கை மாணவரிடம் வாங்கி ஓட்டி வந்துள்ளார். கல்லூரி அருகே பைபாஸ் சாலையில் வந்த போது, மீண்டும் தனக்கு கஞ்சா வேண்டும் என்று மாணவர் கேட்டுள்ளார்.ஆற்காட்டில் வாங்கி தருவதாக மாணவரை அழைத்து சென்ற அந்த வாலிபர் ஆற்காடு பஸ் நிலையம் டீக்கடை அருகே பைக்கை நிறுத்திவிட்டு, ‘பீடி வாங்கி வா, அதில் கஞ்சா அடைத்து தருகிறேன்’ என்று கூறியுள்ளார். இதை நம்பி பீடி வாங்கிக் கொண்டு மாணவர் திரும்பிய போது, பைக்குடன் அந்த வாலிபர் மாயமாகியுள்ளதாக தெரியவந்தது. இந்த தகவலை புகாராக பெற்று வழக்குபதிவு செய்த போலீசார், பெற்றோரை வரவழைத்து அவர்களுடன் மாணவரை அனுப்பி வைத்தனர்.

Tags : Ince ,Marrappatuvara ,Perambalur Kakis , Ince, Marrappatuvara, Perambalur Kakis, eager
× RELATED காலமாற்றத்தில் அந்தஸ்து உயர்ந்தாலும்...