×

தெலங்கானா கவர்னராக தமிழிசை இன்று பதவியேற்பு: ஓபிஎஸ் பங்கேற்பு

சென்னை: தெலங்கானா மாநில கவர்னராக தமிழிசை இன்று பதவியேற்கவுள்ளார். இதற்காக கவர்னர் மாளிகையில் பிரம்மாண்டமான விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழக பாஜகவின் தலைவராக தமிழிசை சவுந்தரராஜன் கடந்த 2014ம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதி முதல் இருந்து வந்தார். அவரின் பதவிக்காலம் வருகிற டிசம்பர் மாதத்துடன் முடிவடைய உள்ளது. இந்த நிலையில் தமிழிசை சவுந்தரராஜன் தெலங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை குடியரசு தலைவர் ராம்நாத்கோவிந்த் கடந்த 1ம் தேதி வெளியிட்டார். கவர்னராக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து அவர்  கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளிலும் இருந்தும் தமிழிசை விடுவிக்கப்பட்டார்.
தமிழிசை கவர்னராக நியமிக்கப்பட்டதற்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் எடப்பாடி, எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிலையில், டெல்லியில் உள்ள தெலங்கானா ராஜ்பவன் அதிகாரி வேதாந்தகிரியிடம் தமிழிசை சவுந்திரராஜன் நியமன ஆணையை பெற்று கொண்டனர்.

இதை தொடர்ந்து தமிழிசை இன்று காலை 11 மணியளவில் தெலுங்கானா கவர்னராக பதவியேற்கவுள்ளார். அவருக்கு தெலங்கானா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி  ராஜேந்திர சவுகான் பதவி பிரமானம் செய்து வைக்கிறார். இந்த விழாவில் தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகரராவ், தமிழக அரசு சார்பில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்,  மற்றும் பாஜ மூத்த தலைவர் சிபி.ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன், எச்.ராஜா உட்பட பலர் பங்கேற்கின்றனர். இந்த விழாவையொட்டி தெலங்கானாவில் உள்ள கவர்னர் மாளிகையில் பிரமாண்டமான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


Tags : Governor ,Telangana , Telangana Governor,sworn ,Telangana Governor
× RELATED தெலங்கானா பொறுப்பு ஆளுநராக பதவியேற்ற சி.பி.ராதாகிருஷ்ணன்