×

தாய்லாந்து சென்றார் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தமிழக அமைச்சர் ராதாகிருஷ்ணன் ஆஸ்திரேலியாவுக்கு பயணம்: அமைச்சர்கள் வெளிநாடு சுற்றுலா செல்வது ஏன்?

சென்னை: தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், இந்தோனேசியா பயணத்தை முடித்துக் கொண்டு, தற்போது தாய்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். இந்த நிலையில் கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் நேற்று ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டு சென்றார். தொடர்ச்சியாக தமிழக அமைச்சர் வெளிநாடு செல்வது ஏன் என்பது பற்றி அரசு சார்பில் எந்த தகவலும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படுவதில்லை.முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 14 நாட்கள் சுற்றுப்பயணமாக இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் ஆகிய நாடுகளுக்கு கடந்த 28ம் தேதி சென்னையில் இருந்து புறப்பட்டு சென்றார். முதல்வருடன் அமைச்சர்கள் எம்.சி.சம்பத், விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார், ராஜேந்திரபாலாஜி ஆகியோரும் 10க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் உயர் அதிகாரிகளும் சென்றுள்ளனர். இவர்கள் வருகிற 10ம் தேதி சென்னை திரும்ப திட்டமிட்டுள்ளனர். முதல்வர் 3 நாடுகள் சென்றபோது, எங்கெல்லாம் செல்கிறார், எந்த நாட்டில் தொழில் முதலீட்டாளர்களை சந்திக்கிறார் என்பது உள்ளிட்ட முழு தகவல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.அதேநேரம் தமிழக அமைச்சர்களான பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் உள்ளிட்ட சில அமைச்சர்கள் பின்லாந்து, தாய்லாந்து, சிங்கப்பூர், இந்தோனேசியா, துபாய் ஆகிய நாடுகளுக்கு சென்றுள்ளனர். சில அமைச்சர்கள் வெளிநாடு சென்று திரும்பியுள்ளனர்.

இப்படி அமைச்சர்கள் அரசு பயணமாக வெளிநாடு செல்லும்போது தமிழக அரசு சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பது வழக்கம். ஆனால் இந்த நடைமுறைகள் சமீபத்திய அமைச்சர்கள் வெளிநாடு பயணத்தில் பின்பற்றப்படவில்லை. குறிப்பாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பின்லாந்து நாட்டுக்கு சென்று திரும்பியுள்ளார். அவருடன் துறை செயலாளர் பிரதீப் யாதவ் உள்ளிட்ட 10 பேர் குழுவும் உடன் சென்றது. பின்லாந்தில் அமைச்சர் செங்கோட்டையன் எந்த பள்ளியை பார்த்தார் என்பது உள்ளிட்ட எந்த தகவலும் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. அங்குள்ள ஒரு விளையாட்டு மைதானத்தில் அமைச்சர் கால்பந்து விளையாடியது, ஒரு வீட்டில் பியானோ வாசிப்பது போன்ற ஒரு புகைப்படம் வெளியாது. அதுவும் அரசு தரப்பில் இருந்து வெளியிடப்படவில்லை. வெளிநாடு போவதற்கு முன்பு, எதற்காக வெளிநாடு செல்கிறோம் என்றும் அவர் பத்திரிகையாளர்களுக்கு தெரிவிக்கவில்லை. சரி, வெளிநாடு சென்று திரும்பிய பிறகாவது பின்லாந்து நாட்டில் உள்ள கல்வி முறையை பார்வையிட்டதாகவும், அதில் சிலவற்றை தமிழகத்தில் நடைமுறைப்படுத்த இருப்பது உள்ளிட்ட எந்த தகவலையும் அவர் இதுவரை தெரிவிக்கவில்லை. இப்படி அரசு பயணமாக சென்றுவிட்டு எந்த தகவலும் வெளியிடாதது ஏன்? என்ற கேள்வி தமிழக கல்வியாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

அதேபோன்று, வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சிங்கப்பூர், இந்தோனேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு சென்றுள்ளார். நேற்று, அமைச்சர் தாய்லாந்து நாட்டில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அவருடன் வனத்துறை உயர் அதிகாரிகள் குழுவும் சென்றுள்ளது. வெளிநாட்டில் வன உயிரியல் பூங்கா, வன உயிரினங்களின் சரணாலயம், காட்டுத்தீ தடுப்பு, மரபியல் சார்ந்த மரம் வளர்ப்பது உள்ளிட்டவைகளை அவர் வெளிநாட்டில் பார்வையிட சென்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இவரும் அரசு பயணமாக சென்றுள்ளார். ஆனால், கடந்த ஒரு வாரமாக தாய்லாந்து உள்ளிட்ட சில நாடுகளை சுற்றி வருகிறார். ஆனால், அங்கு அவர் எந்த வன உயிரியல் பூங்காவுக்கு சென்றார், என்ன தொழில்நுட்பத்தை பார்த்தார் என்ற ஒரு தகவல் அல்லது புகைப்படம் கூட அரசு சார்பில் வெளியிடப்படவில்லை.இந்த பரபரப்பு அடங்குவதற்குள், கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் நேற்று சென்னை விமான நிலையத்தில் இருந்து அரசு பயணமாக ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளுக்கு புறப்பட்டு சென்றுள்ளார். அவருடன், அதிகாரிகள் குழுவும் சென்றுள்ளது. அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனும் வெளிநாட்டில் என்னென்ன தொழில்நுட்பங்களை அறிந்து கொள்வதற்கு செல்கிறார் என்ற எந்த தகவலும் அரசு சார்பில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் முதல்வருடன் கடந்த மாதம் 28ம் தேதி இங்கிலாந்து சென்றார். அங்கு சில மருத்துவமனைகளை முதல்வருடன் சென்று பார்வையிட்டார். இங்கிலாந்து பயணத்தை முடித்துக் கொண்டு அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று முன்தினம் சென்னை திரும்பி விட்டார். அவர் இங்கிலாந்து சென்று, அங்கு பார்வையிட்ட மருத்துவமனைகள் குறித்தும், அங்கு பின்பற்றப்படும் புதிய தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட எந்த தகவலையும் அவர் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை.இப்படி தமிழக அமைச்சர்கள் ஒவ்வொருவராக அரசு பயணமாக வெளிநாடு சென்று வருகிறார்கள். அவர்களுடன் துறை செயலாளர், உயர் அதிகாரிகள் என ஒரு பெரிய குழுவே செல்கிறது. இதற்கான செலவு முழுவதையும் தமிழக அரசே ஏற்றுக்கொள்கிறது. இந்த பணம் முழுவதும் மக்களின் வரிப்பணத்தில் இருந்து செலவு செய்யப்படுகிறது. இப்படி கோடி கோடியாக செலவு செய்து வெளிநாடு சென்று திரும்பும் அமைச்சர்கள், தாங்கள் எதற்காக சென்று வந்தோம், என்னென்ன தொழில்நுட்பங்களை தமிழகத்தில் செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம் என்று அறிவிக்காதது ஏன்? என்பதே தமிழக மக்களின் கேள்வி. இனியாவது சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்களோ அல்லது துறை ஐஏஎஸ் அதிகாரிகளோ மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : Dindigul Srinivasan ,visit ,Australia , Minister Dindigul,Srinivasan's, visit , Australia
× RELATED ஆஸி. ஷாப்பிங் மாலில் கத்தி குத்து...