×

எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏழை மக்கள் நெரிசலில் பயணம் பொதுப்பிரிவு பெட்டிகள் அதிகரிப்பு கேள்விக்குறி?: பாராமுகம் காட்டும் ரயில்வேத்துறை

வேலூர்: எக்ஸ்பிரஸ் ரயில்களில் ஏழை, எளிய மக்கள் நெரிசலில் பயணித்து வரும் நிலையில் பொதுப்பிரிவு ரயில் பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதில் ரயில்வேத்துறை தொடர்ந்து சுணக்கம் காட்டி வருவதாக பயணிகள் வேதனை தெரிவிக்கின்றனர். நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் ரயில்வே துறை முக்கிய இடம் பிடித்துள்ளது. ரயில் போக்குவரத்தை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.முன்பதிவு பெட்டிகள், ஏசி முதல் வகுப்பு ஆகிய பெட்டிகள் ஆகியவை பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதலாக ரயில்களில் இணைக்கப்படுகிறது. ஆனால், சாதாரண டிக்கெட் வைத்துள்ள ஏழை, எளிய மக்கள் பயணிக்கும் வகையில் பொதுப்பிரிவு பயணிகள் பெட்டிகள் கூடுதலாக இணைக்கப்படாமலே உள்ளது.ஆனால், பொதுப்பிரிவு பெட்டிகளில் பயணிக்கும் ஏழை, எளிய மக்களின் நிலை மிகவும் பரிதாபமானதாக உள்ளது. ரயில் நிலையத்திற்கு 2 மணி நேரத்திற்கு முன்பாக வந்து நீண்ட வரிசையில் நின்று டிக்கெட் எடுத்து ரயில் ஏறச்சென்றால் பொதுப்பிரிவு பெட்டிகளில் கூட்டம் அலைமோதும். இருக்கைக்காக சண்டைபோடும் காலம் மாறி ரயில்களில் நிற்பதற்கே சண்டை போடும் நிலை உருவாகி வருகிறது.உதாரணத்துக்கு சொல்ல வேண்டுமானால், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை சந்திப்பு ரயில் நிலையங்களில் இருந்து நாள்தோறும் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கல்வி, வேலை, வியாபாரம், சிகிச்சை என பல்வேறு தேவைகளுக்காக சென்னை நோக்கி பயணிக்கின்றனர்.

மாலையில் வீடு திரும்பும் இவர்கள் நிரம்பி வழியும் பொதுப்பிரிவு பெட்டிகளில் ஏற முடியாமல் பரிதவிக்கின்றனர். வேறு வழியின்றி முன்பதிவு பெட்டிகளில் ஏறுகின்றனர்.இவ்வாறு முன்பதிவு பெட்டிகளில் பயணிக்கும்போது டிக்கட் பரிசோதகர்களிடம் சிக்கும் இவர்கள் வலுக்கட்டாயமாக அடுத்த ரயில் நிலையத்தில் வெளியேற்றப்படுகின்றனர். அல்லது அபராத தொகை கட்ட வேண்டிய நிலைக்கு ஆளாகின்றனர். இதில் அதிகம் பாதிக்கப்படுவது முதியவர்களும், பெண்களும், ஏழை அடித்தட்டு மக்களும்தான்.இதுகுறித்து ரயில் பயணிகள் கூறுகையில், ‘சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கும், வடமாநில பெருநகரங்களுக்கும் தினசரி மற்றும் வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில்களில் திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை ஆகிய பகுதிகளில் இருந்து சென்னை செல்லும் பொதுமக்கள் அதிவிரைவு ரயில்களில் பயணிக்கின்றனர். பொதுப்பிரிவு பெட்டிகளில் கூட்டம் அலைமோதும் நிலையில், வேறு வழியின்றி முன்பதிவு பெட்டிகளில் ஏறி பயணிக்கின்றனர்.

குறிப்பாக, சென்னையில் இருந்து மதியம் 3.20 மணிக்கு புறப்படும் வண்டி எண்: 12695 திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரயிலில் வேறு வழியின்றி முன்பதிவு பெட்டிகளில் பயணிக்கும் பொதுமக்கள் பல்வேறு நெருக்கடிகளை சந்திக்கின்றனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பிருந்த அதே போக்குவரத்து விதிகள் ரயில்வேயில் பின்பற்றப்படுகிறது. அந்த நேரத்தில் மக்கள் ரயிலில் பயணிக்க வேண்டிய அதிக அவசியம் இல்லாமல் இருந்தது. ஆனால் தற்போது ரயில் பயணம் என்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது. பயணிகளை கனிவோடு நடத்த வேண்டும், அவர்களுக்கான நெருக்கடி நிலைகள் அறிந்து செயல்பட வேண்டும், சேவை அடிப்படையில் உதவ வேண்டும் என ரயில்வே நிர்வாகம் பயணிகளை வழிநடத்த பல்வேறு விதிகளை செயல்படுத்தி வருகிறது. ஆனால் பயணிகள் நெடுந்தூரம் பயணிக்கும் வகையில், இதுவரை பொதுப்பிரிவு பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முயற்சிக்கவில்லை என்பது வேதனையானது’ என்றனர்.எனவே, அடித்தட்டு மக்களின் நீண்டநாள் கோரிக்கையான விரைவு மற்றும் அதிவிரைவு ரயில்களில் கூடுதலாக பொதுப்பிரிவு பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரயில் பயணிகள் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

* உலகின் மிகப்பெரிய ரயில் சேவையில் ஒன்றாக விளங்கும் இந்தியன் ரயில்வேயில் 16 லட்சம் பேர் பல்வேறு பிரிவுகளின் கீழ் வேலை செய்து வருகின்றனர்.
* நாள்தோறும் சுமார் 50 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் ரயிலில் பயணம் செய்கின்றனர்.

Tags : Poor increase, passenger,traffic, express train?
× RELATED விற்பனை இல்லை.. ஆனாலும் தங்கத்தின்...