×

சொற்ப நபர்களை மட்டும் நிரந்தரம் செய்து அரசு ஏமாற்றுகிறது பணி நிரந்தரம் கிடைக்காததால் 6000 எம்ஆர்பி நர்சுகள் குமுறல்

நெல்லை: நீதிமன்ற உத்தரவை முழுமையாக அமல்படுத்தாததால் எம்ஆர்பி நர்சுகள் விரக்தியடைந்துள்ளனர். சுமார் 6 ஆயிரம் பேர் தங்களது பணி நிரந்தரம் எப்போது என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்தமிழ்நாட்டில் மருத்துவ பணியாளர் தேர்வாணையம் மூலம் 2015 ஆம் ஆண்டு சுமார் 7300 செவிலியர்கள் போட்டி தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பல்வேறு அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள், அரசு  ஆரம்ப சுகாதார நிலையங்களில் ரூ.7700 சம்பளத்திற்கு பணியமர்த்தபட்டனர்.

குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் தொகுப்பூதிய செவிலியர்களாக பணியாற்றிய பின்பு அவர்கள், பணி நிரந்தரம் செய்யபடுவார்கள் என்று அரசு விதிமுறை விதித்தது. இதில் 2000க்கும் மேற்பட்ட செவிலியர்கள் வேலைப்பழு,  வெளிமாவட்டத்தில் பணி, 7700 சொற்ப சம்பளம் ஆகிய காரணங்களால் வேலையை விட்டு சென்றுவிட்டனர். அதனால் மீண்டும் பலர் பணிக்கு எடுக்கப்பட்டு இந்த எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்தது. 


ஆனால் 2 ஆண்டுகள் முடிவடைந்த நிலையிலும் அரசு பணி நிரந்தரம்(காலமுறை ஊதியம்) குறித்து எந்த நடவடிக்கைகளும் எடுக்காத நிலையில், முறையான முன் அறிவுப்பு கொடுத்து சுமார் 7000 செவிலியர்கள் சென்னையில் அறப்போராட்டம்  நடத்தினர். மூன்று நாட்களாக இந்த போராட்டம் தொடர்ந்தது. இந்நிலையில் சென்னையை சேர்ந்த கணேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் “பொதுமக்கள் மற்றும் நோயாளிகளின் நலன் கருதி” தொடுத்த பொதுநல வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பேனர்ஜி, ``செவிலியர்கள்  நோயாளிகளின் நலன் கருதி” உடனடியாக பணிக்கு திரும்பவேண்டும் என்று ஆணை பிறப்பித்தார். இதையடுத்து செவிலியர்கள் போராட்டத்தை கைவிட்டனர். 


செவிலியர்களின் பணி குறித்தும், சம்பளம் குறித்தும் செவிலியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஆய்வறிக்கை சமர்ப்பிக்க ஐகோர்ட், அரசுக்கு உத்தரவிட்டது. பின்பு  நடந்த பொதுநல வழக்கின் விசாரணையில், செவிலியர்கள் சார்பில் வாதாடிய  வழக்கறிஞர் புகழ்காந்தி, இந்திய அரசியல் சாசனத்தின் 141 ஆவது பிரிவின் படி உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பான “சம வேலைக்கு சம ஊதியம்” செவிலியர்களுக்கும் பொருந்தும் என்றார். அரசு தரப்பில் செவிலியர்களுக்கு 14000 சம்பளம் வழங்க  பரிந்துரை செய்வதாகவும், செவிலியர்கள் படிப்படியாக பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்றும் தெரிவித்தனர். மேலும் 4 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட செவிலியர்கள் தலைமை  நீதிபதிக்கு தனிப்பட்ட முறையில் தங்கள் வேண்டுதல்களை முன் வைத்து கடிதம் அனுப்பினர்.


 இதனால் நீதிபதி தமிழக சுகாதார துறை செயலர் தலைமையில் ஆய்வு குழு அமைத்து, காலமுறை ஊதியம் பெறும் செவிலியர்கள் செய்யும் வேலையும், எம்ஆர்பி செவிலியர்கள் செய்யும் வேலையும் ஒன்றுதானா என்பதை அறிக்கை மூலம்   நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உத்தரவிட்டார். இதற்கிடையில் முதல் 2000 செவிலியர்களின் பணிவிவரங்களை (காரணம் குறிப்பிடாமல்) மருத்துவர் இயக்குனர் (DMS) அலுவலகத்திற்கு அனுப்பி வைக்குமாறு அறிவுறுத்தபட்டனர். கடந்த மார்ச் 26ம் தேதி 150 பேருக்கு காலமுறை  ஊதியத்திற்கான பணி நிரந்தர கலந்தாய்விற்கு அழைப்பு விடுத்தது.  நிரந்தர பணிக்கான கலந்தாய்வை சுமார் 149 செவிலியர்களுக்கு நடத்தி முடித்தது. 


பெரும்பாலும் சென்னையில் மட்டுமே பணியிடங்கள் காட்டப்பட்டன. செவிலியர்கள் சார்பில்  எம்ஆர்பி செவிலிய மேம்பாட்டு சங்கத்தினர் சம வேலைக்கான ஆதாரங்களை சுகாதார செயலர் தலைமையிலான ஆய்வு குழுவிற்கு அஞ்சல் மூலம் அனுப்பினர்.

இதுகுறித்து எம்ஆர்பி செவிலியர் சங்க நிர்வாகிகள் கூறுகையில், ``நீதிமன்ற உத்தரவுக்கு பின்னர் இதுவரை சுமார் ஆயிரத்து 500 செவிலியர்களை மட்டுமே பணி நிரந்தரம் செய்துள்ளனர். 6 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் விடை தெரியாமல்  விரக்தியில் இருக்கிறோம். 2018-2019 ஆம் ஆண்டிற்கான நிதி அறிக்கையில் சுகாதார துறைக்கு 11,638.44 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யபட்டுள்ள நிலையில், விடுபட்ட அனைத்து எம்ஆர்பி செவிலியர்களின் காலமுறை ஊதியம் வழங்க  தேவையான ரூ.480 கோடியை அரசு ஒதுக்கி நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லையேல் எங்களது சட்ட போராட்டம் தொடரும்’’ என்றனர்.



Tags : MRP ,nurses , 6000 MRP nurses fired because of lack of work
× RELATED செவிலியர்களுக்கு தபால் வாக்கு: பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் கோரிக்கை