×

போக்குவரத்துக்கு கடும் இடையூறு பழுதடைந்து பரிதாப நிலையில் என்எச் 47...அன்றாடம் அவதியுறும் மக்கள்; கண்டுகொள்ளாத அதிகாரிகள்

மார்த்தாண்டம்: குமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை மற்றும் தற்போது காற்றழுத்த தாழ்வு நிலையாலும் மழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக மழை அவ்வப்போது வெளுத்து வாங்கி வருகிறது. மழை காரணமாக ரப்பர் பால்வடிப்பு, கட்டிட  தொழில், செங்கல், உப்பு மற்றும் அப்பள தயாரிப்பு உட்பட பல தொழில்கள் பாதிக்கப்படுகின்றன.ஏற்கனவே பழுதடைந்த சாலைகளும் மழையால் மேலும் சேதமடைந்து போக்குவரத்துக்கு கடும் இடையூறாக விளங்கி வருகின்றன. பல சாலைகளில் பெரிய குழிகள் ஏற்பட்டு அவற்றில் குளம்போல மழைநீர் தேங்கி நிற்கிறது. மாவட்டத்தின்  மிக முக்கிய சாலையான தேசிய நெடுஞ்சாலையிலும் பல இடங்களில் பெரிய, பெரிய பள்ளங்கள் தோன்றியுள்ளன.

இந்த சாலையின் பல பகுதிகள் உழுது போட்ட வயல் போல காட்சியளிக்கின்றன. பல இடங்களில் சாலை எது என தேடிப்பார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சுங்கான்கடை, வில்லுக்குறி, மார்த்தாண்டம், தக்கலை, களியக்காவிளை  உள்ளிட்ட பகுதிகளில் பெரும் பள்ளங்கள் ஏற்பட்டு வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.  மிக முக்கியமான இந்த சாலை வழியாக தினமும் அரசு அதிகாரிகள் பலர் பயணம் செய்கின்றனர். இருப்பினும் சாலை பழுதை சரிசெய்ய எந்தவித நடவடிக்கையும் இல்லை. கடந்த 2 தினங்களுக்கு முன்பு கலெக்டர் மற்றும் எஸ்பி கூட இந்த  சாலையில் மார்த்தாண்டம் வரை பயணம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் இந்த சாலையில் ஏற்பட்டிருந்த பள்ளங்களை ஒட்டுபோடும் பணி நடந்தது. இதை எம்பி உட்பட மக்கள் பிரதிநிதிகளும் பார்வையிட்டனர். ஆனால் ஒட்டுபோட்ட சில நாட்களில் அப்பகுதி சிதைந்து மீண்டும் பழைய பரிதாப நிலைக்கு  சாலை சென்றுவிட்டது. இதுபோல மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்படுகிறதே தவிர, எளிதாக பயணம் செய்ய முடியாமல் நாள்தோறும் அவதிப்பட வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்படுகின்றனர். எனவே பொதுமக்கள் நலன்கருதி நாகர்கோவில்-களியக்காவிளை தேசிய நெடுஞ்சாலையை உடனடியாக செப்பனிட சம்பந்தப்பட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொட்டாரத்தில் குளமான சாலை:

சர்வதேச  சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை  தருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் திருவனந்தபுரம் வந்து அங்கிருந்து  சாலை மார்க்கமாக கன்னியாகுமரி வருகின்றனர். அதுபோல  நாகர்கோவில் வந்து அங்கிருந்து தேசிய நெடுஞ்சாலை வழியாகவும் கன்னியாகுமரிக்கு வருகின்றனர். இதனால் நாகர்கோவில்-கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலை அதிக போக்குவரத்து மிக்க,  முக்கிய சாலையாக விளங்கி வருகிறது. இந்த தேசிய நெடுஞ்சாலையில்  கொட்டாரம் சந்தன மாரியம்மன் கோயில் அருகில் சாலை வளைவில் ஒரு பகுதி  சற்று தாழ்வான பகுதியாக உள்ளது. இந்த பகுதியில் மழை நேரங்களில்  தண்ணீர் தேங்கி நிற்கும்.

இதனால் சாலை அடிக்கடி  பழுதாக வருகிறது. பள்ளமான  இந்த பகுதியை சரிசெய்யவோ, தேங்கும் மழைநீரை வழிந்தோட செய்யவோ அதிகாரிகள்  இதுவரை முயற்சி செய்யவில்லை.இந்த நிலையில் சமீபத்தில் இந்த  பகுதியில் சாலை சிறிய அளவில் பழுதடைந்து காணப்பட்டது. மேலும் மழை  நேரங்களில் தண்ணீர் தேங்கி வந்தது. இதனால் வாகனங்கள் விபத்தில் சிக்கும்  நிலை உருவானது. இதன் அருகில்  மேல்நிலைப்பள்ளியும் உள்ளது. இந்த நிலையில்  தொடர் மழையால் இப்பகுதி நெடுஞ்சாலை  சிதைந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது. மேலும்  குளம்போல மழைநீர் தேங்கி நிற்கிறது.

இதனால் விபத்து அபாயத்தை  தடுக்கும் பொருட்டு, அப்பகுதி வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வாகன  ஓட்டிகளை எச்சரிக்கும் வகையில் தடுப்பு ஏற்படுத்தி வைத்துள்ளனர். ஆனால்  சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுவரை  கண்டுகொள்ளவில்லை. எனவே இந்த பள்ளத்தை சரிசெய்ய  மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள் வேண்டுமென சமூக ஆர்வலர்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : NH 47 ,traffic disruption Officers , NH 47 ... People who suffer from traffic disruption Officers who do not see
× RELATED முறையாக சீரமைக்கவில்லை ஆங்காங்கே...