×

முகூர்த்தம், வரத்து குறைவு எதிரொலி: வாழைத்தார் விலை விர்ர்..ரூ.ஆயிரத்தை தாண்டியது

வத்தலக்குண்டு: வளர்பிறை, முகூர்த்தம் தினம் மற்றும் வரத்து குறைவு எதிரொலியாக வத்தலக்குண்டு வாழைக்காய் மார்க்கெட்டில் செவ்வாழை தாரின் விலை ரூ.ஆயிரத்தை தாண்டியது. திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டுவில் உள்ள வாழைக்காய்  மார்க்கெட்டிற்கு பல்வேறு ஊர்களிலிருந்து வாழைக்காய்கள் விற்பனைக்கு வருகின்றன. இங்கு செவ்வாழை, பூவன், ரஸ்தாளி, நாட்டுப்பழம் உள்ளிட்ட வாழைத்தார்கள்  விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. திண்டுக்கல், தேனி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான வியாபாரிகள் இங்கு வந்து வாழைத்தார்களை வாங்கி செல்கின்றனர். நேற்று வழக்கம்போல் வாழைத்தார்களை விவசாயிகள்  விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
 
ஆனால் வரத்து குறைந்ததாலும், வளர்பிறை மற்றும் முகூர்த்த தினங்கள் எதிரொலியாகவும் வாழைத்தார்களின் விலை நேற்று கடுமையாக உயர்ந்தது. ஒரு செவ்வாழை தாரின் விலை ரூ.ஆயிரத்தை தாண்டி விற்பனையானது. ரஸ்தாலி  வாழைத்தார் ரூ.800க்கு விலைபோனது. ஒட்டு நாட்டுப்பழ வாழைத்தார் ரூ.400க்கும், கற்பூரவள்ளி ரூ.800க்கும் விற்பனையானது. இந்த விலை நிலவரம் தொடர்ந்து 2 மாதங்களுக்கு நீடிக்கும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர். விலை ஏற்றத்தால்  விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
வாழை விவசாயி இளங்கோவன் கூறுகையில். ‘‘விலை கூடியது ஊருக்கு தெரிகிறது.

ஆனால் வறட்சியான சூழ்நிலையில் வாழையை காப்பாற்ற லாரி தண்ணீரை விலைக்கு வாங்கி நாங்கள் செலவு செய்துள்ளது யாருக்கும் தெரியவில்லை.  கணக்குபார்த்தால் பெரிய அளவில் வாழை விவசாயிகள் லாபம் அடைந்திருக்க முடியாது. எனவே அரசு நெல்லுக்கு நிர்ணயம் செய்வது போல், வாழைக்கும் விலை நிர்ணயம் செய்ய வேண்டும்’’ என்றார்.



Tags : Echoes of eclipse, shortfall: banana price exceeds vir.ru
× RELATED சென்னை அருகே டயர் கிடங்கில் தீ விபத்து..!!