×

இன்று தேர் பவனி: வேளாங்கண்ணியில் பக்தர்கள் குவிந்தனர்...2,500 போலீஸ் குவிப்பு

நாகை: வேளாங்கண்ணி பேராலயத்தில் இன்று தேர் பவனி நடப்பதால், பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். சுமார் 2,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய மாதா  பேராலயம் உலக புகழ் பெற்றது. இவ்வாலயத்தில் ஆண்டு தோறும் திருவிழா மிக விமரிசையாக நடைபெறும். இந்தாண்டு திருவிழா கடந்த 29ம் தேதி கொடியேற்றத்துடன்  தொடங்கியது. அன்று முதல் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, மராத்தி,  தெலுங்கு, மலையாளம், கன்னடம், கொங்கனி ஆகிய மொழிகளில் திருப்பலி நடந்தது.

முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர் பவனி இன்று (7ம் தேதி) மாலை நடக்கிறது. மாலை 5.15 மணி அளவில் பேராலய கலையரங்கத்தில் தமிழில் செபமாலை, மாதா மன்றாட்டு, நவநாள் செபம் நடைபெறும். பின்னர் கோட்டார் மறை மாவட்ட  ஆயர் நசரேசன்சூசை தலைமையிலும், பேராலய அதிபர் பிரபாகரன் முன்னிலையிலும் பேராலய கலையரங்கத்தில் சிறப்பு கூட்டுத்திருப்பலி நடைபெறும். பின்னர் இரவு 7.30 மணி அளவில் பெரியத்தேர் பவனி நடைபெறும். புனித ஆரோக்கிய  மாதா பெரியத்தேரில் எழுந்தருள, அதன் முன்பு 6 சிறிய சப்பரங்களில் மிக்கேல், சம்மனசு, செபஸ்தியார், அந்தோணியார், சூசையப்பர், உத்திரிய மாதா ஆகியோர் எழுந்தருள்வார்கள். தேர்பவனி பேராலய முகப்பில் தொடங்கி கடைத்தெரு,  ஆரியநாட்டுத்தெரு, கடற்கரை சாலை வழியாக ஊர்வலமாக சென்று பேராலய முகப்பை மீண்டும் வந்தடையும்.

இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்பதாலும், தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதாலும் ஆலயத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மத்திய மண்டல ஐஜி வரதராஜீலு தலைமையில் தஞ்சை சரக டிஐஜி  லோகநாதன், எஸ்பிக்கள் ராஜசேகரன், துரை ஆகியோர் மேற்பார்வையில் 2,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதுதவிர கடலோர பாதுகாப்பு குழும போலீசார், தீயணைப்பு வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.  நாகை, வேளாங்கண்ணி, காரைக்கால் ரயில் நிலையங்களில் பயணிகளின் உடமைகள் தீவிரமாக சோதனை செய்யப்படுகிறது. பேராலயத்தை சுற்றிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பல்வேறு இடங்களில் இருந்து சிறப்பு  ரயில், பஸ்கள் இயக்கப்படுகிறது. நாளை (8ம் தேதி) மாலை 6 மணி அளவில் அன்னையின் திருக்கொடி இறக்கப்பட்டு ஆண்டுத்திருவிழா நிறைவடையும்.

தேர் பவனியில் கலந்து கொள்ள தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து பக்தர்கள் ஆலயத்தில் குவிந்த வண்ணம் உள்ளனர். மேலும் பாதயாத்திரையாகவும் பக்தர்கள் ஆலயத்துக்கு சாரை சாரையாக வந்து  கொண்டிருக்கின்றனர். இதனால் வேளாங்கண்ணி பேரலாலயம், ரயில் நிலையம், கடற்கரை, கடைவீதி, பஸ் நிலையம் என எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

Tags : Bhari Bhavani: Devotees ,policemen ,Velankanni , Today Bhari Bhavani: Devotees gathered at Velankanni ... 2,500 policemen
× RELATED மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 51...