×

திருவள்ளூர் கிழக்கு குளக்கரை சாலையில் கழிவுநீர் கால்வாயில் குடிநீர் குழாய்..நோய் பரவும் அச்சத்தில் மக்கள்

திருவள்ளூர்: திருவள்ளூர் கிழக்கு குளக்கரை சாலையில், குடிநீர் குழாய் உள்ள இடத்தில் கழிவுநீர் குளமாக தேங்கி கிடப்பதால், அப்பகுதி மக்களுக்கு பல்வேறு நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால், நகர மக்கள் அச்சத்தில் உள்ளனர். திருவள்ளூர் நகராட்சியில் உள்ள 27 வார்டுகளில் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். கோடை காலத்தில், அத்தியாவசிய தேவைக்கு கூட தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வந்தனர். இவ்வாறு குடிநீருக்காக மக்கள் அவதியுற்று வரும் நிலையில், திருவள்ளூர் கிழக்கு குளக்கரை சாலையில் உள்ள குடிநீர் குழாய் இருக்கும் இடத்தில் கழிவுநீர் குளம்போல தேங்கி கிடக்கிறது. இதனால், குடிநீருடன் கழிவுநீர் கலக்கும் அபாயமும் உள்ளது.

 இதுகுறித்து அப்பகுதி மக்கள், நகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும், அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் மெத்தனமாக உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘திருவள்ளூர் நகராட்சி அலுவலகத்தில் அடிப்படை குறைகளை கூட நிவர்த்தி செய்ய நகராட்சி அதிகாரிகள் முன் வருவதில்லை. தற்போது, கிழக்கு குளக்கரை சாலையில், குடிநீர் குழாய் அருகே கழிவுநீர் கால்வாய் உள்ளதால், பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீரில் கழிவுநீர் கலக்கும் நிலை உள்ளது.

இதனால் அந்த குடிநீரை பருகும் பொதுமக்களின் சுகாதாரம் கேள்விக்குறியாக உள்ளது. கடந்த ஆண்டு டெங்கு போன்ற நோய்கள் திருவள்ளூர் சுற்றுவட்டார பகுதிகளில்தான் அதிகமாக பரவியது. தற்போது நகராட்சி நிர்வாகத்தின் அலட்சிய போக்கால் மீண்டும் டெங்கு, மலேரியா, காலரா போன்ற கொடிய நோய்கள் பரவுமோ? என அச்சமாக உள்ளது. மேலும், திறந்த வெளியில் உள்ள பள்ளத்தால் இரவு நேரங்களில் அவ்வழியே செல்லும் இருசக்கர வாகனங்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே, குடிநீர் குழாய் உள்ள பகுதியில் தேங்கி கிடக்கும் கழிவுநீரை அகற்ற மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Tags : sewer canal ,road ,Thiruvallur East Kulakkarai , Drinking water pipe in Thiruvallur East Kulkkarai road
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி