×

நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் தனித்துப் போட்டியிடுவது குறித்து தீர்மானம் நிறைவேற்றவில்லை: தமிழ்நாடு காங்கிரஸ் விளக்கம்

நெல்லை: நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் தனித்துப் போட்டியிடுவது குறித்து தீர்மானம் நிறைவேற்றவில்லை என்று தமிழ்நாடு காங்கிரஸ் விளக்கம் அளித்துள்ளது. நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் கடந்த 2016ம் ஆண்டு திமுகவுடன் இணைந்து காங்கிரஸ் கூட்டணி அமைத்தது. அந்த தொகுதியில் எச்.வசந்தகுமாருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டு அவரும் வெற்றி பெற்றார். இந்த நிலையில் கடந்த 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலிலும் திமுக-காங்கிரஸ் கூட்டணி அமைத்தது. இதில் காங்கிரசுக்கு 9 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. அவற்றில் கன்னியாகுமரி தொகுதியில் வேட்பாளராக எச்.வசந்தகுமார் அறிவிக்கப்பட்டார்.

இந்தநிலையில், மக்களவை தேர்தலில் வசந்தகுமார் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.பி ஆகிவிட்டார். இதையடுத்து அவர் நாங்குநேரி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதனால் அந்த தொகுதியை காலியானதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து அந்த தொகுதியில் யார் போட்டியிடுவார்கள் என்று வசந்தகுமாரிடம் கேட்டபோது திமுகவில் பேசி அந்த தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று கூறியிருந்தார். இந்த நிலையில், நெல்லை நாங்குநேரியில் நேற்று காங்கிரஸ் கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் எச்.வசந்தகுமார், காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் ஒரு தீர்மானமாக நாங்குநேரியில் காங்கிரஸ் வேட்பாளரை வெற்றி பெற செய்ய ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் தனித்துப் போட்டியிடுவது குறித்து தீர்மானம் நிறைவேற்றவில்லை என்று தமிழ்நாடு காங்கிரஸ் விளக்கம் அளித்துள்ளது. அதுமட்டுமல்லாது, இதுகுறித்து விக்கம் கேட்டு நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சிவக்குமாருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுவது குறித்து கூறிய கருத்து பற்றி விளக்கம் தர தமிழ்நாடு காங்கிரஸ் உத்தரவிட்டுள்ளது.


Tags : Tamil Nadu ,Congress ,Nanguneri , Nankuneri constituency, resolution, Tamil Nadu Congress, KS Alagiri
× RELATED மோடியை மிஞ்சும் வகையில் வியூகம்;...