×

பன்றிக் காய்ச்சலால் உயிரிழந்த 10 கோடி பன்றிகள்: அவசர காலத்திற்காக சேமித்து வைக்கப்பட்ட இறைச்சியை விடுவிக்க சீன அரசு முடிவு!

பெய்ஜிங்: சீனாவில் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 10 கோடிக்கும் அதிகமான பன்றிகள் பலியானதை அடுத்து அவசர காலத்திற்காக சேமித்து வைக்கப்பட்ட பன்றி இறைச்சியை சீன அரசு விடுவிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகில் உள்ள 50 சதவீத பன்றிகளுக்கு சீனா வாழ்விடமாக உள்ளது. சர்வதேச அளவில் பன்றி இறைச்சிக்கான மிகப்பெரிய சந்தையாக உள்ள சீனாவில், மக்களின் பிரதான உணவாகவும் பன்றி இறைச்சி இருந்து வருகிறது. இந்நிலையில், அந்நாட்டில் ஆப்ரிக்க பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு முக்கால்வாசி பன்றிகள் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் அங்கு சந்தை ரீதியாகவும், மக்களின் அன்றாட வாழ்க்கையிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பன்றி இறைச்சியின் தட்டுப்பாட்டினால் அதன் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பன்றி பண்ணை வைத்திருப்பவர்களுக்கு அந்நாட்டு அரசு மானியம் வழங்கி வருகிறது.

கடந்த ஆண்டை விட 90 சதவிகிதம் அதிக விலைக்கு கடந்த ஆகஸ்ட் மாதத்தில் பன்றி இறைச்சியை சப்ளையர்களிடம் இருந்து மொத்த விலை வியாபாரிகள் வாங்கிய நிலையில், அவர்களிடம் இருந்து சிறு வியாபாரிகள் 70 சதவிகிதம் அதிக விலைக்கு இறைச்சியை பெறுகின்றனர். இதனால், தொடர்ந்து இறைச்சியின் விலை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், செயற்கை கருவூட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தியாவது காட்டுப்பன்றிகளின் இனப்பெருக்கத்தை அதிகரிக்க வேண்டும் என பண்ணை வைத்திருப்பவர்களை அரசு வலியுறுத்தியுள்ளது. மேலும், தற்போதுள்ள தேவையை பூர்த்தி செய்வதற்காக அவசர காலத்தில் பயன்படுத்துவதற்காக அரசு சேமித்து வைத்திருக்கும் உறைந்த பன்றி இறைச்சியை விடுவிக்க தயார் என்று அரசு அறிவித்துள்ளது. அதற்காக சந்தை நிலவரத்தையும் அரசு தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : government ,Chinese , Swine Flu, Swine Disease, Meat, Chinese Government
× RELATED ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கம்பி...