கர்நாடகாவில் அனைத்து சமூகத்தினரையும் கவர திட்டம்..: மேலும் 2 துணை முதல்வர்களை நியமிக்க பாஜக தலைமை முடிவு

பெங்களூரு: கர்நாடகா மாநிலத்தில் தற்போது 3 துணை முதல்வர்கள் உள்ள நிலையில், மேலும் 2 பேர் துணை முதல்வர்களாக நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கர்நாடக மாநிலத்தில் தற்போது கோவிந்த் மக்தப்பா கர்ஜோல், லட்சுமண் சங்கப்பா சவாடி, அஸ்வத் நாராயண் ஆகியோர் துணை முதல்வர்களாக உள்ளனர். இவர்கள் முறையே பட்டியலினத்தவர், லிங்கயாத், ஒக்கலிகா சமூகத்தை சேர்ந்தவர்கள் ஆவர். தற்போது முதல்வராக உள்ள எடியூரப்பா, லிங்கயாத் சமூகத்தின் ஒரு பிரிவை சேர்ந்தவர் ஆவார். அவர் கடந்த 30 ஆண்டுகளாக கர்நாடக பாஜகவின் தலைமை பொறுப்பில் இருந்து வருகிறார். இதனால் கர்நாடக பாஜக, லிங்கயாத் சமூகத்தின் கட்சியாகவே பார்க்கப்படுகிறது. இந்நிலையில், மாநிலத்தில் உள்ள மற்ற சமூகத்தினரையும் கவரும் வகையில் மேலும் 2 சமூகத்தை சேர்ந்தவர்களை துணை முதல்வர்களாக நியமிக்க பாஜக தலைமை முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவர்கள், பழங்குடி மற்றும் குருபா சமூகத்தை சேர்ந்தவர்களாக இருப்பார்கள் என்றும் கூறப்படுகிறது. இந்த 5 சமூகத்தின் மாநிலத்தில் உள்ள 70 சதவீகித மக்கள் தொகை வந்துவிடும். எனவே, இதன்மூலம் மாநிலம் முழுவதும் தனது வாக்கு வங்கியை அதிகரிக்க பாஜக திட்டமிட்டு வருகிறது. மேலும், இந்த 5 பேரில் சிறப்பாக செயல்படுபவருக்கு எடியூரப்பாவுக்கு பிறகு தலைமை வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்த அறிவிப்பு, 17 கர்நாடக எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பின் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது. கர்நாடகாவில் முந்தைய குமார சாமி ஆட்சியில் அமைச்சரவையில் இடம் கிடைக்காததால் 17 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்தனர். இதனால் அவரது ஆட்சி கவிழ்ந்ததை தொடர்ந்து கடந்த ஜூலை 26ம் தேதி எடியூரப்பா முதல்வராக பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.Tags : Karnataka , Karnataka, Community, Deputy Chief Minister, BJP, Yeddyurappa
× RELATED கர்நாடகாவில் அமைச்சர் பதவிகேட்டு...