×

இலவச அரிசி வழங்கும் திட்டத்திற்கு ஆளுநர் கிரண்பேடி மறுப்பு: நீதிமன்றம் செல்லப்போவதாக முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் இலவச அரிசி வழங்கும் கோரிக்கை மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் யாருக்கு அதிகாரம் என்பது தொடர்பாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சரவைக்கும் ஆளுநர் கிரண்பேடிக்கும் மோதல் நிலவி வருகிறது. இந்த மோதல் இன்று இலவச அரிசி திட்டத்தில் மீண்டும் வெடித்துள்ளது. நாராயணசாமி தலைமையிலான அரசு கடந்த 39 மாதங்களாக புதுச்சேரியில் ஆட்சி நடத்தி வருகிறது. இதில், 17 மாதங்கள் இலவச அரிசி திட்டம் போடப்பட்டு வந்தது. இந்த நிலையில், இலவச அரிசி போடக்கூடாது என்றும், அதற்கு பதிலாக பணம் கொடுங்கள் என்று கிரண்பேடி உத்தரவிட்டார். இதையடுத்து, சுமார் 5 மாதங்களாக இலவச அரிசிக்கு பதிலாக பணம் வழங்கப்பட்டு வந்தது.

இவ்வாறு, 22 மாதங்கள் புதுச்சேரி மக்களுக்கு இந்த சலுகைகள் வழங்கப்பட்டு வந்தன. மீதமுள்ள 17 மாதங்கள் மக்களுக்கு எந்த ஒரு சலுகைகளும் வழங்கப்படவில்லை. இந்த நிலையில் தான், புதுச்சேரி மாநிலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் பொதுமக்களுக்கு பணம் வேண்டாம், தொடர்ச்சியாக இலவச அரிசி திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என சட்டசபை உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையை தொடர்ந்து இலவச அரிசி வழங்கப்படும் என தீர்மானம் நேற்று நிறைவேற்றப்பட்டது.

இந்த தீர்மானம் குறித்து ஆளுநர் கிரண்பேடியுடன் முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள், காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் ஆலோசனையில் ஈடுபட்டனர். அப்போது இந்த தீர்மானத்திற்கு ஆளுநர் கிரண்பேடி மறுப்பு தெரிவித்தார். இலவச அரசுக்கு பதில், பொதுமக்களுக்கு பணம் வழங்க வேண்டும் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இதனால், கூட்டத்தில் இருந்து முதல்வர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் வெளிநடப்பு செய்தனர். இதையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் நாராயணசாமி, பொதுமக்களுக்கு கொண்டுவரும் திட்டங்களுக்கு கிரண்பேடி முட்டுக்கட்டையாக இருப்பதாக கூறினார். இது தொடர்பாக நீதிமன்றத்தை நாட இருப்பதாக தெரிவித்தார்.

Tags : Narayanasamy ,court ,govt , Puducherry, Free Rice Project, Governor, Denial, Court, Chief Minister Narayanasamy
× RELATED தேனி தொகுதி அதிமுக வேட்பாளரின் காரில் சோதனை