×

மல்லிப்பட்டினம் அருகே படகு கவிழ்ந்ததால் கடலில் காணாமல் போன 4 மீனவர்களில் 2 பேர் உயிரிழப்பு: உறவினர்கள் கதறல்

தஞ்சை: தஞ்சை மல்லிப்பட்டினம் அருகே கடலில் படகு கவிழ்ந்ததால் காணாமல் போன 4 மீனவர்களில் 2 பேர் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமேஸ்வரம் புதுரோடு நடராஜபுரம் பகுதியைச் சேர்ந்த முனீசுவரன்(வயது 24), தரக்குடியான்(25), முனியசாமி(47), ரஞ்சித்(23), மதன்(26), இலங்கேசுவரன்(20), காந்தகுமார்(23), உமாகாந்த்(19), செந்தில்வேல்(31), காளிதாஸ்(19) ஆகிய 10 மீனவர்கள் கடந்த 29ம் தேதி மீன்பிடி படகு வாங்குவதற்காக ரயில் மூலம் கடலூர் சென்றனர். அங்கு ஒரு மீன்பிடி படகினை வாங்கிக்கொண்டு அதில் இந்த 10 மீனவர்களும் 3ம் தேதி காலை புறப்பட்டு ராமேஸ்வரம் நோக்கி வந்துள்ளனர்.

இரவு தஞ்சாவூர் மல்லிபட்டினம் அருகே கடலில் வந்து கொண்டிருந்தபோது சூறைக்காற்றின் காரணமாக படகு மூழ்கியது. இதில் படகில் இருந்த 10 மீனவர்களும் கடலுக்குள் விழுந்துவிட்டனர். இதில் செந்தில்வேல், காளிதாஸ் ஆகிய 2 மீனவர்கள் தண்ணீரில் தத்தளிப்பதைக்கண்ட அப்பகுதி மீனவர்கள் அவர்களை காப்பாற்றி மல்லிபட்டினம் மீன்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர். அவர்கள் அளித்த தகவலின் பேரில் ராமேஸ்வரத்தில் உள்ள மற்ற மீனவர்களின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, கடலோர காவல்படையினர் ரோந்து கப்பல் மூலமாகவும், கடற்படை ஹெலிகாப்டர் மூலமாகவும் மீனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, காணாமல் போன 8 மீனவர்களில் 4 மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். மாயமான மேலும் 4 மீனவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்த நிலையில், காணாமல் போன 4 மீனவர்களில் 2 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு மீனவர்களின் உடலும் முத்துப்பேட்டை-கோடியக்கரை இடையே கடலில் மிதப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், கடலில் மூழ்கி காணாமல் போன எஞ்சிய 2 மீனவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.


Tags : fishermen ,Relatives ,Mallipatnam , Mallippattinam, boat, Rameswaram, fishermen, death
× RELATED யாழ்ப்பாணம் நீதிமன்றத்தால் தண்டனை...