×

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அமெரிக்க சுற்றுப்பயணம் முடிந்து இன்று துபாய் பயணம்

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அமெரிக்காவில் 6 நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு இன்று துபாய் செல்கிறார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் ஆகிய நாடுகளுக்கு 14 நாட்கள் சுற்றுப்பயணமாக கடந்த மாதம் 28ம் தேதி காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் லண்டன் புறப்பட்டு சென்றார். அவருடன் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மற்றும் முதல்வரின் செயலாளர்கள், பாதுகாவலர்கள், மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் பீலா ராஜேஷ் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்டோரும் அவருடன் சென்றனர்.

இங்கிலாந்து நாட்டில் முன்னணி மருத்துவமனைகள், கால்நடை பூங்கா ஆகியவற்றை பார்வையிட்டனர். இதையடுத்து கடந்த 1ம் தேதி இரவு லண்டனில் இருந்து புறப்பட்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 2ம் தேதி அமெரிக்கா சென்றடைந்தார். அமெரிக்காவில் கடந்த 3 மற்றும் 4ம் தேதி நியூயார்க் மற்றும் சான் ஹீசே நகரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது தமிழக அமைச்சர்கள் எம்.சி.சம்பத் (தொழிலாளர் நலத்துறை), ஆர்.பி.உதயகுமார் (வருவாய் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை), ராஜேந்திரபாலாஜி (பால்வளத்துறை), தலைமை செயலாளர் சண்முகம் மற்றும் துறை சார்ந்த செயலாளர்களும் கலந்து கொண்டனர்.

துபாயில், ஐக்கிய அரபு அமீரக அரசின் பொருளாதாரம் மற்றும் வர்த்தகத் துறையின் கீழ் இயங்கும் பிஸ்னஸ் லீடர்ஸ் பார்ம்’’ என்ற அமைப்பும், இந்திய துணை தூதரகமும் இணைந்து நடத்தும் துபாய் தொழில் முனைவோர் ஆலோசனை கூட்டத்தில் ஒரு சிறப்பு விருந்தினர் என்ற முறையில் முதல்வர் எடப்பாடி கலந்து கொண்டு உரையாற்றுகிறார். பின்னர் துபாயில் உள்ள தொழில் முனைவோர்களிடம் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க அழைப்பு விடுக்கும் வகையில் தனியே ஒரு கூட்டம் நடத்திவிட்டு, வருகிற 10ம் தேதி (செவ்வாய்) முதல்வர் தமிழகம் திரும்ப உள்ளார்.

Tags : Edappadi Palanisamy ,tour ,Dubai ,US , Edappadi Palanisamy, Dubai
× RELATED கனமழையால் ஐக்கிய அரபு அமீரகத்தில்...