×

கருத்து கேட்பு கூட்டத்தில் புதிய மின் இணைப்பு கட்டணத்தை உயர்த்த பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு

* மின்கட்டணம் உயரும் அபாயம் என தொழிற்சங்க நிர்வாகி குற்றச்சாட்டு

சென்னை : தமிழகத்தில் புதிய மின் இணைப்பிற்கான கட்டணத்தை உயர்த்துவது குறித்து, மின்சார ஒழுங்கு முறை ஆணையம் நேற்று கருத்துக்கேட்புக்கூட்டம் நடத்தியது. தமிழக மின்வாரியம் கடும் நிதி நெருக்கடியில் சிக்கி உள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து மின்கட்டணத்தை உயர்த்த முடிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியானது. தற்போது அதன் ஒருபகுதியாக புதிய மின் இணைப்பிற்கான பல்வகை கட்டணத்தை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான கருத்துக்கேட்புக்கூட்டம் நேற்று மயிலாப்பூரில் உள்ள தனியார் ஓட்டலில் நடத்தப்பட்டது. இதில், மின்வாரிய உயர் அதிகாரிகள், பல்வேறு பகுதிகளை சேர்ந்த சமூக நல அமைப்புகள், தொழில் நிறுவனங்களின்  பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.  அவர்கள் வாரியத்தின் மின்கட்டணத்தை உயர்த்தும் முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுகுறித்து கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கூறியதாவது: புதிய மின்இணைப்பிற்கான கட்டணத்தை உயர்த்துவது குறித்தான கருத்துக்கேட்புக்கூட்டம் நடத்தப்பட்டது. இதில், வாரியம் நஷ்டத்தில் இயங்குவதாகவும் அதற்காக கட்டணத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அப்போது ஒருமுனை மின்இணைப்பிற்கான கட்டணம் முதல் அனைத்து பிரிவிற்கான கட்டணத்தையும் கூடுதலாக உயர்த்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதற்கு நாங்கள் கட்டணம் மிகவும் அதிகமாக இருக்கிறது என கருத்து தெரிவித்திருக்கிறோம். எங்களது கருத்தை அதிகாரிகள் பெற்றுக்கொண்டுள்ளனர். பிறகு ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து தொமுச நிர்வாகி அ.சரவணன் கூறுகையில், ‘‘மின் கட்டணம் உயர்த்துவது குறித்து கடந்த 2012ல் கோவையில் கருத்துக்கேட்புக்கூட்டம் நடந்தது. அதனைத் தொடர்ந்து 2014ல் சென்னை, ஈரோடு, நெல்லை உள்ளிட்ட இடங்களில் நடந்தது. அப்போது அனைவரின் எதிர்ப்பையும் மீறி கட்டணம் உயர்த்தப்பட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் கட்டணத்தை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதை தவிர்க்க வேண்டும். ஒவ்வொரு முறையும் மின்கட்டணம் உயர்வு குறித்து ஆணையம் கருத்து கேட்கும்போது மிகக்குறைவானவர்களே ஆட்சேபத்தை பதிவு செய்கிறார்கள். இதற்கு கருத்து கேட்பு கூட்டத்திற்கு முறையாக பொது மக்களுக்கு அறிவிப்பு கொடுக்காமலும், தங்களுக்கு சாதகமாக செயல்படும் சிலருக்கு மட்டும் தகவல் தெரிவிக்கப்படுவதே காரணம்.இவற்றிலிருந்தே இது கண்துடைப்பு நாடகம் என்பது தெரிகிறது ’’ என்றார்.

Tags : parties ,hike , Various parties, oppose new electricity tariff hike
× RELATED போலீசாரிடம் தகராறு: 5 பேர் கைது